சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்ற ‘என் பெயர் ஆனந்தன்’ நவ-27ல் வெளியீடு!
இந்தப்படத்தின் கதை ஆரம்பத்தில் த்ரில்லராக பயணித்தாலும், போகப்போக உணர்வுப்பூர்வமான பயணத்துக்குள் ரசிகர்களை அழைத்து சென்றுவிடும். காரணம் த்ரில்லருக்கென்றே உள்ள வழக்கமான கதைக்களங்களை தேர்வு செய்யாமல் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக்கொணடு இந்தப்படம் உருவாகியுள்ளது… குறிப்பாக இதுவரை யாருமே பேசியிராத ஒரு சமூக பிரச்சனையை கையிலெடுத்து துணிச்சலாக இந்தப்படம் பேசியுள்ளது. படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களிடம், இப்படியெல்லாம் கூட மக்கள் இருக்கிறார்களா, இவர்களுக்கு இப்படியெல்லாம் கூட பிரச்சனைகள் இருக்கிறதா என இந்தப்படம் நிச்சயம் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும். .
செம்பல் சர்வதேச திரைப்பட விழா, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச திரைப்பட விழா மற்றும் தென் கொரியாவில் நடைபெற்ற SEE சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு மூன்றுமுறை சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை இந்தப்படம் பெற்றுள்ளது. மேலும் நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான ஸ்பெஷல் ஜூரி விருதையும் பெற்றது.
![](https://tamilankural.com/wp-content/uploads/2020/11/Stills-YPA-01.jpg)
மேலும் தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு புதுமுயற்சியாக க்ளைமாக்ஸுக்கு சற்று முன்பாக 11 நிமிடங்கள் கொண்ட பாடல் காட்சி இடம்பெறுகிறது. இது வழக்கமான ஒரு பாடலாக இல்லாமல் உணர்வுப்பூர்வமான பாடலாக இருக்கும்.
“இந்தப்படத்தின் நாயகன் சந்தோஷ் பிரதாப்பின் ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் மறக்க முடியாது ஒன்று.. ஒரு நாற்காலியிலேயே அமர்ந்தபடி, தனது நடிப்பை முகத்தின் உணர்ச்சிகளிலேயே விதம் விதமாக பிரதிபலித்து நடித்துள்ளார். நிச்சயம் இந்தப்படம் தமிழ்சினிமாவில் அவருக்கு அடுத்த படியாக இருக்கும்” என்கிறார் இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன்.
தற்போது திரையரங்குகள் செயல்பட ஆரம்பித்துவிட்ட நிலையில், இந்தப்படம் வரும் நவ-27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.. ஓடிடி தளங்கள் இந்தப்படத்தை வெளியிட தங்களை அணுகியபோதும் மறுத்துவிட்டார்களாம் தயாரிப்பாளர்கள்.
![](https://tamilankural.com/wp-content/uploads/2020/11/Poster-2.jpg)
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் விபரம்
நடிகர்கள்: சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி, தீபக் பரமேஷ், அரவிந்த் ராஜகோபால் மற்றும் பலர் .
பாடல்கள்: புருஷோத்தமன், வீரையன்
படத்தொகுப்பு: விஜய் ஆண்ட்ரூஸ்
ஒளிப்பதிவு : மனோ ராஜா
இசை : ஜோஸ் பிராங்க்ளின்
டைரக்சன் : ஸ்ரீதர் வெங்கடேசன்
தயாரிப்பு : கனகா வெங்கடேசன், சவீதா வெங்கடேசன் மற்றும் கோபி கிருஷ்ணப்பா