‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ நிறுவனர் ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கை திரைப்படமாகிறது!
கிருஷ்ண நாமத்தை உலகம் முழுதும் பரப்பும் நோக்கத்துடன் ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ (இஸ்கான்) அமைப்பைத் தோற்றுவித்த பிரபுபாதரின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது.
மேற்கு வங்கம் கொல்கத்தாவில் 1896-ஆம் ஆண்டு பிறந்த அபய் சரணாரவிந்த தே, தனது 26-வது வயதில், ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாக்குரரை குருவாக ஏற்றார்.
ஆங்கில மொழியில் கிருஷ்ண பக்தியை மேலைநாடுகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற குருவின் கட்டளையைத் தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டார்; ஸ்ரீல பிரபுபாதர் ஆனார்.
தனது 69-வது வயதில் கையில் வெறும் 40 ரூபாய் மதிப்பிலான இந்தியப் பணம் மற்றும் சில பகவத் கீதை புத்தகங்களுடன் ‘ஜலதூதா’ என்ற சரக்குக் கப்பலில் அமெரிக்காவிற்குப் பயணமானார்.
1966-ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தைத் தொடங்கினார். இதுதான் International Society for Krishna Consciousness – ISKCON (இஸ்கான்) என அழைக்கப்படுகிறது.
அடுத்த 11 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 14 முறை வலம் வந்த ஸ்ரீல பிரபுபாதர், 108 கோயில்களையும், பண்ணை சமூகங்களையும், ஆசிரமங்களையும் நிறுவினார். 1977-ஆம் ஆண்டு நவம்பர் 14 அன்று பிருந்தாவனத்தில் தனது நிலவுலக வாழ்வை நிறைவு செய்தார்.
இன்று இஸ்கான் இயக்கம், உலகம் முழுதும் – நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் – பரவி இருக்கிறது. உலகெங்கும் 800-க்கும் மேற்பட்ட கோயில்கள், கலாச்சார மையங்கள், ஆசிரமங்கள், ‘கோவிந்தாஸ்’ என்ற பெயரிலான சைவ உணவகங்கள் இயங்கி வருகின்றன.
ஒரு கோடி பக்தர்களைக் கொண்டுள்ள இந்த இயக்கத்தில், முழுநேர பிரம்மச்சாரிகளும், பிரம்மச்சாரிணிகளும் உள்ளனர்.
தற்போது அவரது வாழ்க்கை வரலாறு ‘சரணாகதி – தி லைஃப் ஆஃப் எ சரண்டர்ட் சோல்’ (ŚARAṆĀGATI – The Life of a Surrendered Soul) என்ற பெயரில் அனிமேஷன் திரைப்படமாக உருவாகிறது.
‘கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட பிரம்மாண்டமான படைப்புகளை உருவாக்கிய ஹோம்பாலே ஃபிலிம்ஸ், இந்தப் படத்தை டிரான்சென்டென்டல் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்குகிறது.
கௌர சக்தி தாஸ் எழுதி இயக்கும் இப்படத்தை ராஜேஷ் சிங் மற்றும் லோஹித் ராவ் தயாரிக்கின்றனர். ஸ்ரீதர் ஷிகாரிபுரா விஷுவல் டைரக்டராகப் பணியாற்றுகிறார். டிரான்சென்டென்டல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், டைவ் டீப் ஏஐ ஸ்டுடியோவுடன் இணைந்து உருவாகும் இப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் உலகம் முழுவதும் வழங்கி வெளியிடுகிறது.
படம் குறித்து இயக்குநர் கௌர சக்தி தாஸ், “ஒரு மனிதரின் இறை நம்பிக்கை, அர்ப்பணிப்பு, தன்னலமற்ற சேவை ஆகியவை காலத்தைக் கடந்து எத்தகைய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை இப்படம் சொல்லும்” என்றார்.
2027 ஆகஸ்ட் மாதத்தில் இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

