“நான் 110% இந்து.. ஆனா..”: ‘ஹபீபி’அனுபவம் குறித்து கஸ்தூரி ராஜா!
கில்ட் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘ஹபீபி’ படக்குழுவினருக்குச் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலைப் பேசும் இப்படத்திற்குத் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.
சக்கரவர்த்தி (கில்ட் தயாரிப்பாளர்கள் சங்கம்)
‘ஹபீபி’ ஒரு காவியம் போன்ற படைப்பு. இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் எனது நன்றிகள். எனக்குப் பத்தாம் வகுப்பில் ஹர்ஷத் என்ற நண்பரும், சென்னையில் சமீர் என்ற நண்பரும் இருந்தனர். நட்பு மதத்தால் வருவதல்ல. இஸ்லாமியர்களின் உண்மையான வாழ்வியலையும் மனிதநேயத்தையும் இந்தப் படம் உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கிறது. மத வேறுபாடுகளைக் கடந்து தமிழர்களாக ஒன்றிணைந்து வாழ வேண்டும்.
கோடங்கி (பத்திரிகையாளர் மற்றும் இயக்குநர்)
‘ஹபீபி’ போன்ற படங்களை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும். இயக்குநர் மீரா கதிரவன் அன்பு என்ற உணைச் சொல்லியிருக்கிறார். அன்பு வெற்றி பெறப் போராட்டங்கள் தேவைப்படுகின்றன. குறைந்த பட்ஜெட் படங்களையும் நல்ல படைப்புகளையும் நாம் கொண்டாட வேண்டும். இஸ்லாமியர்களின் வாழ்க்கையைப் பேசும் படங்களுக்கு உரிய கவனமும் ஆதரவும் கிடைக்க வேண்டும்.
கோவை இப்ராஹிம் (தயாரிப்பாளர்)
அனைவருக்கும் வணக்கம். கில்ட் உறுப்பினர்களாக இருந்து எங்களுடைய திரைப்படத்தைக் கொண்டாடி வரும் அனைவருக்கும் எனது நன்றிகள். சிறிய படங்கள் மற்றும் தரமான பெரிய படங்களை வழங்குவதற்கு இதுபோன்ற பாராட்டு விழாக்கள் உற்சாகம் அளிக்கின்றன. விரைவில் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்புடன் சந்திப்போம்.
சாகுல் ஹமீத் (தயாரிப்பாளர்)
‘டூலெட்’, ‘பரியேறும் பெருமாள்’ வரிசையில் ‘ஹபீபி’ சிறப்பான படம். இயக்குநர் மீரா கதிரவனின் ஐந்தாண்டு உழைப்பு இது. குறைந்த பட்ஜெட் படங்களுக்குத் திரையரங்குகள் கிடைப்பதே சவாலாக உள்ளது. பெரிய படங்கள் வெளியாவதால் சிறிய படங்களின் வாய்ப்புகள் குறைகின்றன. இதற்குத் திரைப்படத் சங்கங்கள் தீர்வு காண வேண்டும்.
கஸ்தூரி ராஜா (இயக்குநர், நடிகர்)
‘ஹபீபி’ படத்துக்காகப் பல மேடைகளில் பங்கேற்றுள்ளோம். எங்களை வழிநடத்தியவர் இயக்குநர் மீரா கதிரவன். 48 ஆண்டுகளாகச் சினிமாவில் இருந்தாலும், என்னால் நடிக்க முடியும் என்று நம்பி என்னை நடிக்கச் செய்தார். இஸ்லாமியர்களின் வாழ்க்கை குறித்து முழுமையாக அறியாதபோதும், இப்படத்தில் நடித்தது சிறப்பான அனுபவத்தைத் தந்துள்ளது.
மீரா கதிரவன் ( இயக்குநர்)
‘ஹபீபி’ திரைப்படத்திற்கு இதுவரை 50-க்கும் மேற்பட்ட பாராட்டு நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. தயாரிப்பாளர்கள் இல்லையென்றால் என் கதை காகிதத்தில்தான் இருந்திருக்கும். தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கையைப் பேசும் இப்பட உருவாக்கத்தில் உதவிய வி.எஸ். முஹம்மத் அமீன் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

