வைரமுத்துவுக்கு குண்டாஸ்! : எச்.ராஜா விருப்பம்!
“திரைப்பாடலாசிரியர் வைரமுத்துவை குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்!” என்று பாரதீய ஜனதா கட்சியின் தேசீய செலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து, பிரபல நாளிதழில் தொடர் கட்டுரை ஒன்று எழுதி வந்தார். அதில் வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்தும் எழுதியிருந்தார்.
இந்நிலையில், “ஆண்டாளை தவறாக சித்தரித்துவிட்டார் வைரமுத்து!” என்று இந்து மத அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
எச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க. பிரமுகர்கள், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜர் ஜீயர் என பலரும் வைரமுத்துவை கடுமையாக விமர்சித்தனர். பலர் தரம் தாழ்ந்தும் சமூகவலைதளங்களில் வைரமுத்துவை இழிவாக எழுதினர்.
இதற்கு எந்தவித எதிர்வினையும் காட்டாத வைரமுத்து, தான் ஆண்டாள் குறித்து எழுதியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
ஆனாலும் தொடர்ந்து வைரமுத்துவை இந்து அமைப்பினர் விமர்சித்தே வருகின்றனர். சமீபத்தில் வைரமுத்துவின் பிறந்தநாளின்போதும், அவரை கடுமையாக விமர்சித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்நிலையில், பிரபல வாரமிருமுறை இதழ் ஒன்றில் வெளியான பேட்டியில், “ஆண்டாள் குறித்து இழிவாக பேசிய வைரமுத்து, அடுத்து ராமர் குறித்து இழிவாக பேசியிருக்கிறார். அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்!” என்று தெரிவித்துள்ளார்.
“குண்டாஸ்” என்பதை பேச்சு வழக்கில், “குண்டர் சட்டம்” என்று சுருக்கமாக கூறினாலும், “குண்டர் தடுப்பு சட்டம்” என்பதே பொருள். சட்டப்படி, “தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம்” என்று அழைக்கப்படுகிறது.
இச்சட்டத்தில் கைது செய்யப்படும் நபரை 12 மாதங்கள் தொடர்ந்து சிறையில் அடைக்க முடியும்.
இந்நிலையில், வைரமுத்து மீண்டும் மன்னிப்பு கேட்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.