ஜி.டி.என்: ‘பகுத்தறிவு விஞ்ஞானி’ ஜிடி வாழ்க்கை: ‘பஞ்சாங்கம்’ மாதவன் நடிக்கிறார்!

விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை, ‘ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் ‘ என்று சிறப்பான படமாக அளித்தவர் நடிகர் மாதவன். தற்போது அவர், ‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும், ஜி.டி.யின் வாழ்க்கை வரலாற்றை, ஜி.டி.என். என்கி றதலைப்பில் உருவாகும் படத்தில் நடிக்கிறார்.
அந்தக் கால வழக்கப்படி, ஜி.டி. அவர்களுக்கு பின்னொட்டாக அவரது சாதிப் பெயரான நாயுடு என்பது இருந்தது. தற்காலத்தில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆகப்பெரும்பாலோர் சாதிப் பெயரை சேர்ப்பதில்லை. \
இந்நிலையில், சமீபத்தில் கோவையில் திறக்கப்பட்ட பாலத்துக்கு, ஜி.டி.நாயுடு பாலம் என தமிழ்நாடு அரசு பெயரிட்டது. இதைத் தொடர்ந்து, “சாதி பெயர் தேவையா” என்கிற சர்ச்சை எழுந்தது.
“ஜி.டி.அவர்களது குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளிலேயே, ஜி.டி. என்றுதான் குறிப்பிடுகின்றனர். நாயுடு என்கிற சாதியைச் சேர்ப்பதில்லை. அரசு ஏன் சேர்க்க வேண்டும்” என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், “ஜி.டி.நாயுடு” என்பதின் சுருக்கமான “ஜி.டி.என்.” என்கிற பெயரில் அவரது வாழ்க்கை திரைப்படமாவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தவிர, “ஜி.டி. ஒரு சிறந்த பகுத்தறிவுவாதி ஆவார். தந்தை பெரியாருடன் நட்பு பாராட்டியவர். இந்தித் திணிப்பை எதிர்த்து நின்றவர் அவர்.
ஆனால் நடிகர் மாதவன், பழமைவாதி. பஞ்சாங்கம் என்பதெல்லாம் உண்மை என பேசி, அதற்காக விமர்சனங்களை எதிர்கொண்டார். பிறகு மன்னிப்பு கேட்டார்.
ஆகவே, பகுத்தறிவு விஞ்ஞானியான ஜி.டி.யின் வாழ்க்கையை எந்த அளவுக்கு உண்மைக்கு நெருக்கமாக இருக்கும்” என்ற கேள்வி எழுந்துள்ளது.
இப்படத்தை டிரைகலர் பிலிம்ஸ் உடன் இணைந்து வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைப்பார் என்று தயாரிப்பு நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், தம்பி ராமையா மற்றும் வினய் ராய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார்.
இன்று வெளியான முதல் பார்வையில் நடிகர் ஆர். மாதவன் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார்.
இந்தப் படம் 2026 கோடை காலத்தில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
