” அப்பா ராமநாதன்…!”: நெகிழ்ந்த நடிகர் சரத்குமார்!
தற்போது தொலைக்காட்சி, யு டியுப் சேனல்கள் மூலம் பிரபலமானவர்கள் பலர் உண்டு.
இவற்றின் வருகைக்கு முன், செய்திகளை அறிந்து கொள்ள ஒரே வழி, வானொலிதான். அப்போதெல்லாம், தங்கள் குரல் மூலமே, பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருந்த அறிவிப்பாளர்கள் இருந்தார்கள். அவர்களது முகம் தெரியாது. ஆனால் குரலால் வசீகரித்தார்கள்.
அவர்களில் ஒருவர் 1950 – 60 களில் டில்லி அகில இந்திய வானொலியில் பணியாற்றிய ராமநாதன் அவர்கள். ஆம்.. அவரது கம்பீரக்குரலுக்கு கட்டுண்டு கிடந்தனர் வானொலி நேயர்கள்.
அவரது மகன்தான் நடிகர் சரத்குமார். இவர், திரைத்துறையில் நடிகர், தயாரிப்பாளர் என்று கோலோச்சினலும், தன் அப்பாவின் ‘பத்திரிகையாளர்’ குணம் இவருக்கும் உண்டு. ஆரம்ப காலத்தில், பெங்களூருவில் செய்தியாளராக பணியாற்றியவர் சரத்குமார்.
பிறகுதான் திரையுலகில் சுப்ரீம் ஸ்டாராக உயர்ந்தார். அரசியலிலும் புகுந்து எம்.பி. ஆனார். தற்போது பா.ஜ.க.வில் செயல்படுகிறார்.
இன்று சரத்குமார் தனது சமூகவலைதள பக்கத்தில் தந்தை ராமநாதன் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், “என் தந்தை திருமணம் முடிந்தவுடன் என் தாயாருடன் டெல்லி சென்று முதன் முதலாக பணியாற்றிய இடம் டெல்லி All India Radio வானொலி நிலையம் தான். ‘செய்திகள் வாசிப்பது ராமநாதன்’ என்ற கணீர் குரலுக்குச் சொந்தக்காரராக அனைவராலும் பாராட்டப்பட்ட ஓர் செய்தி வாசிப்பாளராக இருந்தார்.
நான் இதற்கு முன்பு என் தந்தை பணிபுரிந்த இடத்திற்கு சென்றிருந்தாலும், நேற்றைய தினம் அங்கு சென்று All India Radio – Akashvani Live Radio நிகழ்ச்சியில் பேட்டி அளித்த போது, என் தந்தை உடன் இருப்பதை போல் ஓர் உணர்வு என்னை மகிழச் செய்தது” என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டு இருக்கிறார் சரத்குமார்.
