குத்து டான்ஸ் ஆடி குருவுக்கு அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்கள்!

குத்து டான்ஸ் ஆடி குருவுக்கு அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்கள்!

மறைந்த நடிகர் ரோபோ சங்கருக்கு அவரது மனைவி பிரியங்கா, குத்து டான்ஸ் ஆடி வழியனுப்பி வைத்ததை சமூகவலைதளத்தில் பலரும் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

அதே நேரம், தங்களது குருவுக்கு, குத்து டான்ஸ் ஆடி வழியனுப்பி வைத்த பிரபல நடிகர்கள் உண்டு.

நடிப்பு பயிற்சி அளிக்கும் கூத்துப்பட்டறையின் நிறுவனர் நா.முத்துசாமி 2018ம் ஆண்டு காலமானார். . தமிழ் திரையுலகில் இன்று பிரபல நட்சத்திரங்களாக உள்ள நாசர், விஜய்சேதுபதி, விமல், பசுபதி உள்பட பலர் இந்த கூத்துப்பட்டறையில் இருந்து வந்தவர்கள்தான்.

மறைந்த தனது ஆசானுக்கு அவரிடம் பயின்ற மாணவர்களான விமல், பசுபதி, விதார்த் உள்ளிட்ட பலர் முத்துசாமி அவர்களின் இல்லம் அருகே சாலையில் ஆவேசமாக நடனமாடி அவருக்கு கலை அஞ்சலி செலுத்தினர். இந்த கலையஞ்சலி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.

அப்போது அது சர்ச்சையாகவில்லை. ஆனால் நடனக் கலைஞரான ரோபோ சங்கருக்கு, அவரது மனைவி நடனக்கலைஞர் பிரியங்கா குத்து டான்ஸ் ஆடி இறுதி அஞ்சலி செலுத்தியது மட்டும் சர்ச்சையாகி உள்ளது.

இது குறித்து பத்திரிகையாளர் டி.வி.சோமு, தனது முகநூல் பக்கத்தில் எழுதி உள்ளதாவது:

 

“தொலைந்தான் என் எதிரி என்று திரைப்படங்களில் வில்லன் நடிகர் சிரிப்பது போல இருக்கிறது இந்தக் குத்தாட்டம்!”: முற்போக்காளர் ஒருவரின் பதிவு இது.
நடிகர் ரோபோ சங்கர் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி ஆவேசமாக நடனமாடியதைத்தான் இவர் குறிப்பிடுகிறார்.
அமெரிக்காவில் காவலர் சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது, அவரது இறுதி நிகழ்வில் சக காவலர்கள் நடனமாடி தங்கள் சோகத்தை வெளிப்படுத்தினர்.
நியூசிலாந்தில் மசூதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் உயிர் இழந்தவர்களுக்கு நடனமாடி அஞ்சலி செலுத்தினர் மாணவர்கள்.
இந்தியாவில், பிரபல நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய், தனது தாயின் இறுதிச் சடங்கின் போது, நீண்ட நேரம் நடனம் ஆடி அஞ்சலி செலுத்தினார்.
ஏன்… தமிழ் நாட்டிலேயே இது நடந்தது உண்டு.
கூத்துப்பட்டறை நா.முத்துசாமி மறைந்த போது, அவரது மாணவர்களான பிரபல நடிகர்கள் விஜய் சேதுபதி, விமல், பசுபதி ஆகியோர் சாலையில் குத்தாட்டம் போட்டு தங்கள் குருவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பிறகு ஏன், ரோபோ சங்கரின் மனைவி குத்தாட்டம் போட்டது விமர்சிக்கப்படுகிறது?
நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய், ‘உயர்தர நடனங்களான’ பரதநாட்டியம், குச்சுப்புடி கலைஞர். அவற்றைத்தான் அவர் ஆடினார். ரோபோ சங்கர் மனைவி ஆடியது, தமிழ்நாட்டு கிராமிய நடனம். அதாவது குத்தாட்டம்.
இன்னொரு விசயம்…
பெண்கள் மீது சுமத்தப்படும் புனித பிம்பம்.
கோயில் விழாக்களில் ‘அருள்’ வந்து அவர்கள் ஆடலாம். அப்போது ஆடை விலகலாம். அதெல்லாம் தவறில்லை. பக்தி.
“நடனக் கலைஞரான தனது கணவருக்காக, நடனக் கலைஞரான மனைவி ஆடுவது குத்தாட்டம். அருவெறுப்பானது!” என்கிற எண்ணம்.
தவிர..
“என் அண்ணன் கில்லி… எங்க அண்ணிய தூக்கிட்டு வந்துட்டாரு” என்று சொல்பவன், “எங்க அக்கா பத்தி பேசாதே.. ஓடிப்போயிட்டா” என்பான்.
தகப்பனுக்கு இருந்த வேறு காதல்கள் பற்றி பேசுபவன், தாயைப் பற்றி மூச்சுவிட மாட்டான்.
இப்படி எல்லா மட்டத்திலும் – குடும்ப உறவுக்குள்ளும், வெளியிலும் – பெண் மீது வலுக்கட்டாயமாக சுமத்தப்படும் புனித பிம்பமே, இந்த மாற்றுப் பார்வைக்குக் காரணம்.
தவறு ரோபோ சங்கர் மனைவி மீது இல்லை… பார்வையில் இருக்கிறது.
– டி.வி.சோமு

Related Posts