DUDE : திரைவிமர்சனம்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்க பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ ஜோடியாக நடித்திருக்கும் படம், ‘Dude’.
பிரதீப் ரங்கநாதன், தனது தாய் மாமாவின் மகள் மமிதா பைஜூவுடன் இணைந்து ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தை நடத்துகிறார். இந்த நிறுவனம் சர்ப்ரைஸ் கிப்டுகளை வழங்கும் நிகழ்ச்சிகளையும், பிறந்த நாள் நிகழ்ச்சிகளையும் நடத்துகிறது.
ஆனால் இந்தக் கம்பெனியை பெரிதாக நினைக்கவே இல்லை, பிரதீப்பின் தாய் மாமாவும், மமீதா பைஜுவின் அப்பாவுமான சரத்குமார். இவரப் மாநில பால்வளத்துறை அமைச்சர். மிகப் பெரும் செல்வந்தர்.
சரத்குமார் சாதி வெறியர். தன்னுடைய மகளுக்கும் பிரதீப்புக்கும் திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்.
ஆனால் பிரதீப்பின் அம்மாவான ரோகிணி தன்னுடைய அண்ணன் சரத்குமாருடன் பேசுவதில்லை. என்ன காரணம் என்பதை அவர்கள் இருவருமே சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் பிரதீப்பும், ஒரு பெண்ணும் காதலிக்கிறார்கள். ஆனால் ஒருகட்டத்தில் அந்தப் பெண் விலகிச் செல்கிறார். இந்த சோகத்தில் இருக்கும் பிரதீப்பிடம் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறார் மமீதா.
ஆனால் சிறு வயதில் இருந்தே தோழமையோடு பழகியதால் மமீதா மீது தனக்கு காதல் வரவில்லை என்கிறார் பிரதீப். இதனால் இந்த காதல் தோற்றுப் போன நிலைமையில் மமீதா மேல் படிப்புக்காக பெங்களூரு செல்கிறார்.
இதன் பிறகு தன்னுடைய வழியில் குறுக்கே வரும் எத்தனையோ பெண்களை பார்த்தும் பிரதீப்புக்கு காதல் உணர்வு வரவில்லை. ஆனால் அவர் மனதில் மமீதாவின் முகமும், பெயரும் அப்படியே இருக்க… உள்ளுக்குள் தான் இன்னமும் மமீதாவை காதலிப்பதை உணர்கிறார். உடனேயே பிரதீப் இதை தாய் மாமன் சரத்குமாரிடம் சொல்ல… சரத்குமார் அவசரம் அவசரமாக இருவருக்கும் திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
இந்த நேரத்தில் பெங்களூரிலிருந்து வரும் மமீதா தான் ஒரு பையனை காதலிப்பதாகவும் அவன் மூலமாகத் தான் இப்போது கர்ப்பமாக இருப்பதாகவும் ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.
தனது முந்தைய இரு படங்களைப் போலவே இதிலும் பிரதீப் ஒரே மாதிரிதான் நடித்து இருக்கிறார். டென்சன், டென்சன், டென்சன்தான். ஆனால் ஒவ்வொரு டென்சனுக்கும் ஒரு மாதிரி ரியாக்சன் காட்டி சிரிக்க வைக்க முயல்கிறார்.
நாயகி மமீதா பைஜூ.. அழகு. அழகான நடிப்பு. அனைவரையும் ஈர்க்கிறார்.
பிரதீப் ராவடி செய்யும்போதெல்லாம் மமீதாவும் தன்னுடைய அழகான முக பாவனை மூலமும் காட்டும் ரீயாக்சன் சிறப்பு.
அமைச்சர் அதியமானாக நடித்திருக்கும் சரத்குமார் பாசமான அப்பா, தாய்மாமா என நிறைவான நடிப்பை அளித்து இருக்கிறார்.
மமீதாவின் காதலனாக வரும் ஹ்ருது ஹரன் அவ்வப்பொழுது பிரதீப்பை டென்ஷன் ஆக்கும் காட்சிகளிலும், தன்னுடைய காதலை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்ற பொழுதும் ரசிக்க வைக்கிறார்.
ரோஹினி, அன்பான தாயாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.ஒளிப்பதிவில் பிரம்மாண்டத்தை காட்டி இருக்கிறார் நிகேத் பொம்மி. குறிப்பாக பாடல் காட்சிகள், கல்யாண மண்டப காட்சிகளில் அசத்தி இருக்கிறார்.
சாய் அபயங்கரின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஊரும் பிளட் என்ற பாடல் மிக வேகமான தாள லயத்தில் அதிரடி விருந்து அளித்து இருக்கிறது.
இடைவேளைக்குப் பின்புதான் கதை மிக மிக சீரியஸாக நாம் நினைத்துப் பார்க்காத வகையில் நம்முடைய நம்பிக்கை புனிதங்களையெல்லாம் அடித்து செல்லும் காட்டாறு போல் செல்கிறது.
சம்பிரதாயங்களையும், வழிமுறைகளையும், தொன்மங்களையும் தாண்டுவதுதான் இன்றைய இளைய தலைமுறையின் கொண்டாட்டம் என்றால் இந்தப் படம் அதைத்தான் சொல்லி இருக்கிறது.
இதனோடு கூடவே சாதிப் பித்து… அதன் விளைவாய் வரும் ஆணவம்.. சாதிய மனநிலை… சாதிக்கு முன்பு பாசமெல்லாம் இல்லை என்பது போன்ற சாதிப் பித்து பிடித்தவர்களை கேள்வி கேட்பது போலவும் யாருக்காகவும் எதற்காகவும் கட்டாய திருமணம் செய்து மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதையும் சொல்லும் ஒரு விஷயத்திற்காக இயக்குநரை பாராட்டலாம்.
மொத்தத்தில் அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.
ரேட்டிங்: 3.5/5

