திரை விமர்சனம்: டபுள் டக்கர்

நாயகன் அரவிந்த், பெரும் பணக்காரர். ஆனால் சிறு வயதிலேயே விபத்து ஒன்றில் பெற்றோரை இழக்கிறார். மேலும் அந்த விபத்தின் காரணமாக காயம் ஏற்பட்டு முகத்தில் காயத்தழும்பு இருக்கிறது. இதனால் தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்கிறார்.
இந்த நிலையில் நாயகி பாருவின் மீது காதல் ஏற்படுகிறது. ஆனால் பாரு, காதலை ஏற்கவில்லை. ஆகவே தற்கொலைக்கு முயல்கிறார் அரவிந்த். கடவுளின் உலகத்தில் இருந்து வரும் ரைட், லெஃப்ட் என்ற அனிமேஷன் கதாபாத்திரங்கள், ஆயுள் முடிந்துவிட்டதாகக் கருதி அவர் உயிரை எடுத்துவிடுகின்றன. அவர் சடலமும் மாயமாகிறது.
ஆனால் நாயகன் அரவிந்த் ஆயுள் முடியவில்லை என்பது பிறகுதான் தெரிகிறது. ஆகவே, அரவிந்தின் உயிரை, அவரைப் போலவே இருக்கும் ராஜா என்பவரின் உடலுக்குள் அனுப்பி வைக்கின்றனர் ரைட்டும், லெஃப்ட்டும். இதற்கிடையே தொலைந்த அரவிந்தின் உடலை தேடுகின்றனர். அது கிடைத்ததா? அரவிந்த்- பாரு காதல் என்னவானது என்பது படம்.
அரவிந்த்தாக வரும் நாயகன் தீரஜ், தனது நிலையை நினைத்து தவிக்கும் காமெடி இடங்களில் ஸ்கோர் செய்கிறார். காதல் மற்றும் டூயட் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
நாயகி பாருவாக வரும் ஸ்மிருதி வெங்கட்டுக்கு அதிக வேலையில்லை. ராஜாவாக வரும் தீரஜ் இயல்பாக நடித்து உள்ளார்.
மன்சூர் அலிகான், சுனில் ரெட்டி–ஷா ரா, கோவை சரளா- போலீஸ், கருணாகரன்–யாஷிகா ஆனந்த், எம்.எஸ்.பாஸ்கர் டீம், முனீஷ்காந்த்- காளி வெங்கட் குரல்களில் வரும் லெஃப்ட், ரைட் என பல நட்சத்திரங்கள். அனைவருமே சிரிப்புக்கு கேரண்டி!
காமெடி கதைக்குத் தேவையான ஒளிப்பதிவை அளித்திருக்கிறார் கவுதம் ராஜேந்திரன். வித்யாசாகரின் பின்னணி இசை படத்துக்கு பலம். அனிமேஷன் காட்சிகளை அருமையாக வடிவமைத்து இருக்கிறார்கள்.
‘இந்தப் படத்துல இன்னுமா லாஜிக் பார்க்கிறீங்க?’ என்று அவர்களே கேட்டுவிடுவதால், காமெடியை ரசித்து சிரிக்கலாம்.
அறிமுக இயக்குநர் மீரா மஹதி பாஸ் ஆகிவிட்டார்.