‘டோரதி’: தடை செய்யப்பட வேண்டிய படமா?

‘டோரதி’: தடை செய்யப்பட வேண்டிய படமா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படம் மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நாடுகளிலும் தடை செய்யப்படலாம். இங்கேயும் சோசியல் மீடியாவில் சிலர், “கலாச்சாரத்தைச் சீரழிக்கும் படம்” எனப் பலர் கொதிக்கிறார்கள்.

காரணம், “ஆணும் ஆணும் சேர்ந்து வாழ்வதை நியாயப்படுத்தியிருக்கிறார்கள்” என்று ‘குற்றம்’ சுமத்துகிறார்கள்.

அவர்களுக்கு ஒரு விசயம் புரியவில்லை..

குழந்தையும் குழந்தையும் பாலினத்தால் ஒன்று..!

“ஆண் எல்லோரும் ஆண் அல்லர்; பெண் எல்லோரும் பெண் அல்லர்” என்பதே இயற்கைத் தத்துவம், விதி.

குழம்புகிறதா… இன்னும் தெளிவாகவே சொல்கிறேன்..

கருவில் குழந்தையின் உடல் உறுப்புகள் தாம் முதலில் உருவாகும்; ஆண், பெண் உறுப்புகள் உட்பட.

அதன் பிறகே, மூளையின் பாலின அடையாளம் உருப்பெறும்.சில கருக்குழந்தைகளுக்கு இதில் மாறுதல் ஏற்படும். அதாவது, தாயின் உடலிலும் குழந்தையின் கரு உடலிலும் ஹார்மோன் சுரப்புகளில் மாற்றம் நிகழலாம். இதனால், குழந்தையின் மூளையின் வளர்ச்சிப் பாதையை மாற்றியமையலாம்.

அதாவது, உடல் அமைப்பு மற்றும் உறுப்புகள் முதற்கொண்டு ஆணாக இருக்கும்; ஆனால் இயற்கையாகவே பெண் தன்மையுடன் பிறப்பர். குறிப்பிட்ட காலத்தில் இதை உணர்வர். அதை எவரும் புரிந்துகொள்வதில்லை.

இதேபோலத்தான், பெண் உறுப்புகளுடன் பிறக்கும் குழந்தைகள் சிலருக்கு இயற்கையாகவே ஆண் தன்மை இருக்கும்.

குறிப்பிட்ட வயதில் இதை உணர்வர்.

டோரதி திரைப்படத்தில்கூட, “என் பதினாறு வயசில இதை உணர்ந்தேன்” என்கிற வசனம் வரும். இது வெறும் திரை வசனம் அல்ல.. அறிவியல், இயற்கை, மனித இயல்பு.. எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.

ஆக, எவரும் வளர்ந்த பிறகு வேண்டுமென்றே தங்கள் பாலினத் தன்மையை மாற்றுவதில்லை. அது இயற்கை அளித்தது; அவ்வளவுதான். அதை அவர்களைப் போலவே நாமும் ஏற்க வேண்டும்.

ஆக, உலகில் வாழ ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும்தான் உரிமை இருக்கிறது என நினைக்க வேண்டாம்.

சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு ஆண்.. சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பெண்.. என்கிற இரு பாலினத்தவரைத் தாண்டி, வேறு பாலினங்களும் உண்டு.

 ‘LGBTQ ‘ன்னா என்னா?

அறியாமையால்  இயல்பானவர்கள் என நாம் நம்புபவர்களைத் தவரி பிறரை  ‘LGBTQ’ என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

  • L – Lesbian (லெஸ்பியன்): ஒரு பெண், மற்றொரு பெண் மீது மட்டும் அன்பும் காதலும் பாலீர்ப்பும்…

  • G – Gay (கே): ஒரு ஆண், மற்றொரு ஆண் மீது மட்டும் அன்பும் காதலும் பாலீர்ப்பு..

  • B – Bisexual (பை செக்ஸுவல்): ஆண், பெண் ஆகிய இரு பாலினத்தவர் மீதும் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பாலினத்தவர் மீதும் அன்பும் பாலீர்ப்பும்..

  • T – Transgender (டிரான்ஸ்கெண்டர் / திருநங்கை, திருநம்பி): உயிரியல் ஆணாகப் பிறந்து தம்மைப் பெண்ணாக உணர்பவர் திருநங்கை (Transwoman) & உயிரியல் பெண்ணாகப் பிறந்து ஆணாக உணர்பவர் திருநம்பி (Transman).

  • Q – Queer / Questioning (க்யர் / கேள்விக்குட்பட்டவர்): ஆண், பெண் என்ற வழக்கமான எல்லைகளுக்குள் தம்மை அடைத்துக்கொள்ளாமல், மாறுபட்ட பாலின அடையாளம் அல்லது பாலீர்ப்பு கொண்டவர்கள். Questioning: தம்முடைய பாலின அடையாளம் அல்லது பாலீர்ப்பு எது என்பதில் தேடலிலும் புரிதலிலும் இருக்கும் நபர்கள்.

இவர்களைத் தவிர,

I – Intersex (இன்டர்செக்ஸ்) ஆண்/பெண் உடலமைப்பிலிருந்து மாறுபட்டுப் பிறப்பவர்கள்,

A – Asexual (ஏசெக்ஷுவல்): பாலியல் ரீதியான ஈர்ப்பு இல்லாத அல்லது மிகக் குறைந்த அளவிலான ஈர்ப்பு மட்டும் கொண்டவர்கள்..

(Plus): மேலே குறிப்பிடப்பட்டவை தவிர்த்து, இன்னும் பலதரப்பட்ட பாலின மற்றும் பாலீர்ப்பு அடையாளங்களைக் கொண்டவர்கள்.. இத்தனை வகையினர் உண்டு.

அதிர்ச்சி அடையாதீர்கள்!

“ஏ... யப்பா.. இவங்கள்ளாம் எங்க இருக்கிறாங்க” என ஆச்சரியப்படுகிறீர்களா..

இவர்கள் வேற்றுக் கிரகத்தில் இல்லை.. உங்களைச் சுற்றி இருக்கிறார்கள்.. ஏன், உங்கள் குடும்பத்தில்கூட இருப்பார்கள்.

“என் குடும்பத்திலா.. ” என அதிர்ச்சியோ, கோபமோ பட வேண்டாம்.

இந்த மாதிரி மனிதர்களைத்தான் நாம் வெளிப்படுத்தவே விடுவதில்லையே.. ஆகவே தங்கள் இயல்பான – இயற்கை அடையாளங்களை, உணர்வுகளை மறைத்து வாழும் பாவப்பட்ட ஜீவன்கள் உங்கள் குடும்பத்திலும் இருக்கலாம்.

இன்னும் ஒரு அதிர்ச்சி.. நீங்களே கூட இந்த வகையினரில் ஒருவராக இருக்கலாம்.. அது பற்றிய புரிதல் இல்லாமல்!

நான் மீண்டும் சொல்வது…

இவை அனைத்தும் மனித உடலியல் மற்றும் நரம்பியல் வளர்ச்சியில் இயல்பாக, இயற்கையாக ஏற்படும் பலவகைமைகளே! மற்றபடி, செயற்கையோ, நோயோ, குறைபாடோ அல்ல. இன்னும் உங்கள் பாணியில் சொல்லப்போனால் ‘திமிரெடுத்து’ அலைபவர்கள் அல்ல.

புரிதல் இல்லாமல் அவர்களை இகழ்வதும் ஒதுкуவதும் நடக்கிறது. அதனால்தான் பிச்சை எடுக்கும் நிலைக்குக்கூட அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

ஏன், சிலர் அவர்களது குடும்பத்தாலேயே தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் நடக்கிறது.

பாலின படுகொலைகள்!

ஓரினச்சேர்க்கையாளர்களை ‘சட்டப்படி’ கொல்லும் நாடுகளும் உண்டு. ஆம்.. ஈரான் உள்ளிட்ட எட்டு நாடுகள், ‘ஓரினச்சேர்க்கை குற்றம்’ என ஒரே வார்த்தையில் மரண தண்டனை அளிக்கின்றன. இஸ்லாமிய பயங்கரவாதிகளான ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் வலுவாக இருக்கும் பகுதிகளிலும் இந்த ‘மரண தண்டனை’ உண்டு. ஊருக்கு  நடுவில் ‘குற்றவாளிகளை’ நிற்கவைத்து, கல்லால் அடித்துக் கொல்லும் கொடூரங்கள் தொடரவே செய்கின்றன.

தவிர சுமார் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓரினச்சேர்க்கை குற்றமாகக் கருதப்பட்டுச் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படுகிறது. இவற்றில் நமது அண்டை நாடான பாகிஸ்தானும் உண்டு.

ஐக்கிய அரபு அமீரகம், குவைத், மலேசியா போன்ற சில நாடுகளில், ஆண் தோற்றமுள்ளவர் பெண் உடைகளையோ, பெண் தோற்றமுள்ளவர் ஆண் உடைகளையோ அணியக்கூடாது எனச் சட்டமே உண்டு.

இந்தியாவிலும் வெள்ளையர் காலத்திலிருந்து ஓரினச்சேர்க்கை குற்றம் என்றே சட்டம் சொல்லி வந்தது.  பத்து ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும் என்கிற நிலை!

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, 2018ல்தான், “ஓரினச் சேர்க்கை -வயது வந்த இருவர் விரும்பி இணைந்து வாழ்து குற்றமல்ல” குற்றமல்ல என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதைத்தொடர்ந்து  ஓரினச்சேர்க்கை ஜோடிகள் சில, வெளிப்படையாக திருமணம் செய்து கொண்டன. ஆந்திராவைச் சேரந்த பய் டாங்கே – சுப்ரியோ சக்ரவர்த்தி ஆகியோரை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.ஆனாலும் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை இன்னும் இந்திய அரசு, சட்டப்பூர்வமானதாக ஏற்கவில்லை. அவ்வளவுதான்.அதேபோல தத்து எடுக்க முடியாது; சொத்துகளை எழுதி வைப்பதில் பிரச்சினை, ரேஷன் கார்டு பிரச்சினை எனப் பல பிரச்சினைகள் உள்ளன.

கடவுள் – மோகினி – அரவாண்!

கிறிஸ்துவ, இஸ்லாமிய புனித நூல்கள் ஓரினச்சேர்க்கையை கடும் குற்றமாகப் பார்க்கிறது. ஆனால் பல மதங்கள் இணைந்த இந்து மத புராணக் கதைகளில், ஓரினச்சேர்க்கையை அப்படி குற்றமாகச் சொல்லவில்லை.

மகாபாரதப் போரில் ஓர் உதாரணம்..

கடுமையாகப் போர் நடக்கிறது. பாண்டவர்கள் வெற்றியடைய ஒருவரை காளிக்கு பலி கொடுக்க வேண்டும். அவன் வீரனாக, அங்கலட்சணம் அனைத்தும் உள்ளவனாக இருக்க வேண்டும். விரும்பி களப்பலி ஆக வேண்டும்.

தேடித்தேடி.. அர்ஜூனன் மகன் அரவாண் கிடைக்கிறான்.

இறப்பதற்கு முன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவரது கடைசி விருப்பம். விரைவில் மரணத்தைத் தழுவ இருக்கும் ஒருவனைத் திருமணம் செய்ய எந்தப் பெண்ணும் முன்வருவாள்?

ஆகவே, விஷ்ணு பெருமான் மோகினி உருவம் எடுத்து அரவாணனைத் திருமணம் செய்து, ஒரு நாள் இரவு மனைவியாக வாழ்ந்தார்.மறுநாள் அரவாண்,  காளி சிலை முன் நின்று தன் கழுத்தை தானே அறுத்து  களப்பலி ஆகிறான்.  மோகினி விதவைக்கோலம் பூண்டு கண்ணீர் சிந்தி புலம்புகிறாள்.

இந்த நிகழ்வின் நினைவாகவே கூவாக்கம் திருவிழாவில் திருநங்கைகள் அரவாணனைத் தங்கள் கணவராகக் கருதி தாலி கட்டிக்கொண்டு, மறுநாள் தாலியை அறுத்து விதவைக்கோலம் பூணும் சடங்கை நடத்துகின்றனர்.

பாற்கடலில் அமுதத்தை கவரவும் விஷ்ணு பகவான் மோகினி வேடம் பூண்டார்.. அந்த வேடத்துடன்தான் சிவனுடன் இணைந்து ஐயப்பனைப் பெற்றார்.

அவ்வளவு ஏன்.. ஒரே நபருக்கு ஆண் தன்மையும், பெண் தன்மையும் மாறி மாறி வரும் புராணக் கதை உதாரணம் சிகண்டி – சிகண்டினி.

அட.. சிவபெருமானும் பார்வதி தேவியும் ஒரே உடலில் பாதியாக இணைந்து நிற்கும் வடிவம், பிரபலமானது அல்லவா!

இந்த புராணக்கதைகளில் வரும் சம்பவங்கள் உண்மை, பொய் என்பதற்குள் நான் வரவில்லை. எழுதியவர் காலத்தில் இப்படியானவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும் என்பதால் குறிப்பிட்டேன்.

இந்திய பகுதியில் வாழ்ந்த முன்னோர்கள், மனித வாழ்வு நான்கு நிலைகளைக் கொண்டதாகக் கருதினார்கள். அவை, பொருள் சேர்ப்பது, தர்மம் செய்வது, காமம் துய்ப்பது, இறுதியாக மோட்சம் அடைவது.

காலப்போக்கில் இந்த நான்கில், காமத்தை மட்டும் ஒளியவைத்து அரைகுறையாக ருசிக்கப் பழகிவிட்டோம். அதுதான் பிரச்சினையே.

தமிழ்நாட்டிலேயே பல கோயில்களில் ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும் சிற்பங்களைப் பார்த்திருப்பீர்கள்.ம.பி.யின் கஜுராஹோ, ஒடிசாவின் கொனார்க் சூரிய கோயில் போயிருக்கிறேன். அங்கே, ஓரினச் சேர்க்கை சிற்பங்களும் உண்டு. இவை, 800, 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.

ஏன்.. இரு நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த, மாவீரன் நெப்போலியனை ஒரு அரசனாக நமக்குத் தெரியும். அவன் காலத்தில் வெளியான ஓர் உத்தரவு தெரியுமா..  உரிய வயது வந்த இருவர் மனம் விரும்பி உறவு கொண்டால் தவறில்லை என்பது! ஆம். அதற்கு முன் அது கொடூர குற்றமாக இருந்தது.

தற்போதைய காலத்துக்கு வருவோம்…

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டிக் குக், புகழ்பெற்ற பிரிட்டிஷ் பாடகர் மற்றும் இசையமைப்பாளரான சர் எல்டன் ஜான், ஆஸ்கார் விருது பெற்ற புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை மற்றும் இயக்குநர் ஜோடி ஃபாஸ்டர் என உலக அளவில் தொடங்கி..

இந்தித் திரைப்படத் துறையின் முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளான கரன் ஜோஹர், இந்தியாவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீராங்கனை துதி சந்த்…தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் திருநங்கை உரிமை செயற்பாட்டாளர்கள் கல்கி சுப்பிரமணியம் ,லிவிங் ஸ்மைல் வித்யா என தங்களை வெளிப்படுத்திக்கொண்டேர் பலர் உண்டு.

ஆகவே பிறரது உணர்வைப் புரிந்துகொள்ளவே முயற்சிக்காமல், இது சரி, இது தவறு எனத் தீர்மானிப்பது கொடூரம்.

அந்த அளவுக்கு இல்லாமல் அடுத்த நிலையில் இருப்போரும் உண்டு.

கார்த்திக் சுப்புராஜின், “டோரதி” படம் குறித்த நண்பரின் கருத்து இது:

“பெண்ணாக வெளிப்படுத்தியவரை அவரது நண்பர் கொலை செய்யாமல் விட்டதோடு படத்தை முடித்திருக்கலாம். இருவரும் இணைந்து வாழ முடிவெடுப்பதாகக் காட்டியதைத்தான் ஏற்க முடியவில்லை!”

இப்படி “சிந்திப்பவர்கள்” பாதி கிணறு தாண்டியவர்கள்.

“இயற்கையான உணர்வை வெளிப்படுத்தட்டும்.. ஆனால் அவர்கள் தங்கள் உணர்வைப் பகிரக்கூடாது” என்பது இவர்களது எண்ணம். தவிர, இரு பெண்கள் ஓரினச்சேர்க்கையாளராக இருக்கும் திரைப்படம், தொடர்களைப் பார்த்து ரசிப்பவர்கள்தான் இவர்கள்.

ஒரு புறம், ஓரினச்சேர்க்கையாளர்களை, ‘சட்டப்படி’ கொல்லும் நாடுகள் இருக்கும் இந்த உலகில்தான், அவர்களுக்கு திருமண உரிமை, தத்து உரிமை என எல்லோரும் சமம் என்ற சட்டத்தை இயற்றி உள்ளன 35க்கும் மேற்பட்ட நாடுகள். உலகிலேயே முதன்முதலாக 2001-ஆம் ஆண்டு ஓரினச் சேர்க்கைத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கிய பெருமை நெதர்லாந்து.

ஏற்கெனவே சொன்னது போல, இந்தியாவில் “ஓரினச்சேர்க்கையாளர்கள்” சேர்ந்து வாழ மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளனர். திருணம் உள்ளிட்ட உரிமைகள் இல்லை. அதற்காக போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

‘டோரதி’யில்ல்  கார்த்திக் சுப்புராஜ் சொல்லும் செய்தி ஒன்றுதான்..

‘டோரதி’-யை உணருங்கள்.. ஏற்றுக்கொள்ளுங்கள்!

ஆம்.. உணர்ந்து ஏற்போம்,  உலகம் எல்லோருக்குமானதே!

  • டி.வி.சோமு