“அரவிந்த்சாமி சொன்ன புத்தகத்தை வாங்காதீங்க!”: எச்சரிக்கும் அதிஷா!

“அரவிந்த்சாமி சொன்ன புத்தகத்தை வாங்காதீங்க!”: எச்சரிக்கும் அதிஷா!
நேர்காணல் ஒன்றில் நடிகர் அரவிந்த்சாமி, ஒரு புத்தகத்தை அவசியம் படிங்க என சொல்ல.. அந்த புத்தகம் படு பபயங்கரமாக விற்பனையாகிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், “அய்யோ… அதைப் படிச்சா தலை சுத்தும்.. வாங்காதீங்க..” என்கிறார் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான அதிஷா.
நடிகர் அரவிந்த் சாமி யு டியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,  “இளைஞர்கள் அனைவரும் ‘The Psychology of Money’  என்ற புத்தகத்தை படிக்க வேண்டும்”என பரிந்துரைத்தார்.  இந்த புத்தகம் ஏற்கெனவே, ‘பணம்சார் உளவியல்’ என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகி இருக்கிறது.
அந்த பேட்டிக்குப் பிறகு,  குறிப்பிட்ட புத்தகத்தை பலரும் தேடித் தேடி வாங்குகிறார்கள்.
இந்நிலையில், ‘அந்த புத்தகத்தை  (அதாவது, தமிழ் மொழிபெயர்ப்பை) வாங்க வேண்டாம்’ என, பத்திரிகையாளரும், எழுத்தாளருமான அதிஷா (சு. வினோத் குமார்) தெரிவித்து உள்ளார்.
அதிஷா
இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது:
“நடிகர் ஒருவர் பரிந்துரைத்த பிறகு மோர்கன் ஹவுசல் எழுதிய ‘சைக்காலஜி ஆஃப் மனி’ என்கிற நூலின் தமிழாக்கம் சக்கை போடு போடுகிறது. நமது சமூகம், மொழிப்பெருமைகளுக்கும் பீத்தல்களுக்கும் இங்கே பஞ்சமில்லை. அதே நேரம்  புத்தகப் பரிந்துரைகளைக் கூட நடிகர்கள் செய்தால்தான் மக்கள் வாங்கிப்படிப்பார்கள்! இப்படி ஆச்சர்ய முரணான கரகாட்ட கோஷ்டி உலகிலேயே நம்ம கோஷ்டிதான்.
அதனால்தானோ என்னவோ இப்போதெல்லாம் இலக்கிய கூட்டங்களில் கூட நடிகர்களும் இயக்குநர்களும்தான் தலைமை தாங்குகிறார்கள்; புத்தகம் வெளியிடுகிறார்கள்!
நடிகர் குறிப்பிட்டார் என்பதாலும், பணம் பற்றிய நூல் என்பதாலும் ‘முதலிரவு மாப்பிள்ளைகள்’ போல வாசகக் கண்மணிகள் பாய்ந்துவிட்டார்கள். புத்தகம் அவுட் ஆஃப் ஸ்டாக்!
அந்த நடிகர் குறிப்பிடும், ‘சைக்காலஜி ஆஃப் மனி’ புத்தகத்தை சென்ற ஆண்டே படித்துவிட்டேன். பணம் குறித்து எழுதப்பட்ட மிகமிக சுமாரான.. ஆனால், பாப்புலர் நூல். பணத்தைக் கையாளுவதைக் குறித்த புரிதலைத்தருகிற மிகமிக அடிப்படையான நூல்.
முதலில் இது அனைவருக்குமானது அல்ல. கொஞ்சமாவது பங்குசந்தை பரிச்சயம் இருந்தால்தான் பயன்படும். அர்விந்த்சாமி சொன்னார் என அவசரப்பட்டு வாங்காதீர்கள்.
இரண்டு அத்தியாயம் படித்ததும் தலை சுற்றும். மூன்றாவது அத்தியாயத்தில் கிரேட் டிப்ரஷனில் எப்படி பங்குசந்தை வீழ்ந்தது என்பதையெல்லாம் படித்தால் முடிகொட்டும்.
அதிஷாவின் முகநூல் பதிவு
அதிலும் இந்த தமிழ் மொழிபெயர்ப்பு இருக்கிறதே… திருகல் மொழி. நிச்சயம் வாங்கிவிடவேண்டாம்.
தலைப்பையே எடுத்துக்கொள்வோம் அதென்ன ‘பணம் சார் உளவியல்…’. இந்த, ‘சார்’ எதற்கு என்று தெரியவில்லை!
 இப்படித்தான் ஒட்டுமொத்த புத்தகமும் பக்கம் பக்கமாக பெயர்க்க பட்டிருக்கும். ‘யேய்.. நீயார்ரா?  எங்க அண்ணன், அ.சாமி சொல்லிவிட்டார்.. நான் படித்தே தீருவேன்’ என நினைத்தால் ஆங்கிலத்தில் வாங்கிப்படியுங்கள் அது தமிழை விட எளிதாக இருக்கும்.
அடுத்து இந்த புத்தகத்தை படித்து பணக்காரர் ஆக முடியாது. நிறைய பணம் சேர்க்க முடியாது.
இது பங்குச்சந்தை முதலீடுகளின் அடிப்படையாவது அறிந்தவர்களுக்கான நூல்.
ஆனால் அடிப்படைகளை அறிந்தவர்களுக்கு இந்த நூலில் இருப்பதை விட அதிகமாக தத்துவங்களும் தகவல்களும் தெரிந்திருக்கும் என்பதுதான் நகைச்சுவை.
புத்தகத்தில் என்னவெல்லாம் இருக்கும் என்பதை சினிமா விமர்சனம் எழுதுபவர்கள், கதைசுருக்கம் சொல்வது போல கூற முற்படுகிறேன்.
எத்தனை ஏற்றதாழ்வு வந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு நீண்ட கால முதலீடு செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். ரிஸ்க்கை குறைக்க ஒரு வழி… தங்கம், நிலம், எஃப்டி மாதிரி பிரித்து பிரித்து முதலீடு செய்வது.
 முதலீடு விஷயத்தில் தொடரந்து நம்மை நாமே அப்டேட் செய்துகொள்ள வேண்டும், பங்கு முதலீடுகள் மேல் எமோஷனல் அட்டாச்மென்ட் இருக்கக்கூடாது, எல்லோரும் விற்கும்போது வாங்கவேண்டும், எல்லாரும் வாங்கும்போது விற்கவேண்டும்,
பணத்தை சும்மா பாதுகாப்பாக வைத்துக்கொண்டிருக்காமல் அதை செலவு செய்ய வேண்டும், பணம் மட்டுமே வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடையாது… போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து!
 எப்படி பங்கு சந்தை முதலீட்டில் அதிக பணத்தை இழக்காமல் முதலீடு செய்வது…
இப்படி  ஏற்கெனவே ரஜினிகாந்த், ஸ்ரீதர் வேம்பு, அப்துல்கலாம், சோம வள்ளியப்பன், ஆனந்த் ஸ்ரீனிவாசன் என பலரும் சொன்ன விஷயங்களின் தொகுப்புதான், அரவிந்த் சாமி சொன்ன புத்தகத்தின் சாராம்சம்.
முதலீடு குறித்த ஆர்வமுள்ளவர்களுக்கு இதெல்லாம் ஏற்கனவே தெரியும். அன்றாடம் இதைதான் பேசிக்கொண்டே இருப்பார்கள். நம் காதுகளுக்கு கேட்காது.
இந்த (ஆங்கில மூல) புத்தகத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு சுவாரஸ்யமான சம்பவம்,  நல்ல வடிவமைப்பு என பக்காவாக ப்ளஸ்டூ மாணவர்கள் படிக்கும்படி எழுதப்பட்ட நூல் இது. அதனாலேயே உலக அளவில் சூப்பர் ஹிட் அடித்துவிட்டது.
நிறைய பொதுமைப்படுத்துதல் இந்த நூலின் ஒரு பிரச்சனை. பங்குசந்தை பற்றி அறிந்துகொண்டு முதலீடு செய்பவர்களை விட ஒரு குரங்கு ஒன்று புத்தியே இல்லாமல் தேர்ந்தெடுக்கிற பங்கு நன்றாக வேலை செய்யும் என்பார். முட்டாள்களுக்கு இதை படிக்கும்போது ஒரு குதூகலம் வரும்தான். ஆனால் பங்குச்சந்தை அந்த அறிவற்ற முட்டாள் குரங்குகளை மூன்றாவது முதலீட்டில் வாரித்துடைத்து வெளியேற்றி விடும். பங்குச்சந்தை என்பது சூதாட்டம் அல்ல அது கற்றுக்கொள்ள வேண்டிய அறிவு என்கிற தெளிவு கிடைக்கும்.
மற்றபடி ஆனந்த் ஸ்ரீனிவாசன் முதலீடுகளை பற்றி பணத்தை பற்றி இந்த நூலைவிட அதிகமாகவே இலவசமாகவே நமக்கு கற்றுத்தருகிறார். இந்த நூலை விட முதலீட்டில் ஆர்வமுள்ளவர்கள் அவருடைய யூடியூப் சேனலை பின்தொடரலாம். பங்குசந்தையின் அடிப்படைகளை ரச்னா ரானடேவின் யூடியூபில் படிக்கலாம். லிங்க் கேக்காதீர்கள். தேடுங்கள். முகநூலில் கூட விநாயகமுருகன், மதார் போன்றார் கற்றுத்தருகிறார்கள்.
ஆனந்த் ஸ்ரீனிவாசன்
‘இல்லைங்க… எனக்கு புக்குதான் வேணும்!’ என்று கேட்டால், முதலீடு பற்றிய பணம் பற்றிய அறிமுகத்துக்கு ராபரட் கியோசாகி எழுதிய, ‘ரிச்டேட் புவர்டேட்’ படிக்கலாம். பீட்டர் லின்ச்சின் ‘பீட்டிங் தி ஸ்ட்ரீட்’ நெப்போலியன் ஹில்லின் ‘திங்க் அன் க்ரோ ரிச்’, ஜார்ஜ் க்ளாஸனின் ‘ரிச்சஸ்ட் மேன் இன் பாபிலோன்’ என பல நூல்கள் உண்டு. அதையெல்லாம் வாசிக்கலாம்.
முடிந்தவரை இந்நூல்கள் ஆங்கிலத்திலேயே வாசியுங்கள். தமிழில் வருகிற இலக்கிய நூல்கள் போல இந்நூல்கள் பொறுப்போடு மொழிபெயர்க்கப்படுவதில்லை. இவை பாப்புலர் வாசகர்களை குறிவைத்து மொ.பெ படுபவை. தரம் குறைவாகவே இருக்கும்.
முதலீடு பற்றி பணம் பற்றி அதை பாதுகாப்பதை பெருக்கிக்கொள்வதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்தான். ஆனால் அதற்கு நிச்சயமாக இந்த நூலை நான் பரிந்துரைக்கமாட்டேன்!” என்ற அதிஷா பதிவிட்டு உள்ளார்.
(முகப்புப்படம்: அரவிந்த்சாமி, கார்த்தி)

Related Posts