“இயக்குநர் தியாகராஜனுடன் முரண்பாடு வரலாம்… ஆனா!”: ‘அந்தகன்’ பிரசாந்த் அதிரடி பேட்டி

“இயக்குநர் தியாகராஜனுடன் முரண்பாடு வரலாம்… ஆனா!”: ‘அந்தகன்’ பிரசாந்த் அதிரடி பேட்டி

அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த ஹீரோக்கள் மிகச் சிலர்தான். அவர்களில் ஒருவர் டாப் ஸ்டார் பிரசாந்த்.  தந்தை தியாகராஜன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள அந்தகன் திரைப்படம்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தான் பணி புரிந்த இயக்குநர்களில் சிலரைப் பற்றி தற்போது மனம் திறந்து பேசி உள்ளார் பிரசாந்த்.

மணிரத்னம்:

“மணி சார் இயக்கத்தில், திருடா, திருடா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் அதிகமாக பேச மாட்டார். பத்து வார்த்தைகள் பேசுகிற இடத்துல், இரண்டு வார்த்தை பேசுவார்.அவர் சீன் சொல்லிக் கொடுக்கும் முறையே ஒருவித ஸ்டைலிஷ் ஆக இருக்கும்.. அதே நேரம், அந்த காட்சியை நாம் சிறப்பாக நடிக்க முடியும் என்கிற நம்பிக்கையை நமக்குள் விதைத்துவிடவார். ஆகவே அந்த காட்சியை அவர் எப்படி எடுக்கப்போகிறார் என்பதைப் பார்க்கும் ஆர்வமே நமக்கு வந்துவிடும்.”

ஷங்கர்

“ஷங்கர் சார் என்றாலே பிரம்மாண்டம்தான். அவரது கற்பனை வளத்துக்கு ஈடு இணையே இல்லை. ஆனா அதை உருவாக்குவது மிகச் சிரமம். இருந்தாலும் தான் நினைத்தவற்றை காட்சிகளாக கொண்டுவந்தே தீருவார். அது மிகச் சிலரால்தான் முடியும்.”

சுந்தர் சி:

“சுந்தர்.சி சார், ஒரு இயக்குநர் என்பதையும் கடந்து, அருமையான மனிதர். முழு சுதந்திரம் கொடுப்பார். அவரோடு வின்னர், லண்டன் படங்களில் பணி புரிந்தது அருமையான நாட்கள். எல்லா விசயங்களையும் இயல்பாக எடுத்துக்கொள்வார். எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பார். அவரது யூனிட்டே கலகலப்பாக இருக்கும்.”

தியாகராஜன்:

“என் அப்பா என்பதைத் தாண்டி, என்னை பிரமிக்க வைக்கும் இயக்குநர் அவர். அவர் ஒரு சினிமா என்சைக்ளோபீடியா. பழைய – புதிய டெக்னாலஜியை கலந்து அசரடிப்பார். அவரிடம் தினம் தினம் புது விசயம் ஒன்றை கற்றுக்கொண்டே இருக்கிறேன்.

மிக அமைதியானர். நடிகர்களிடம் காட்சிகளை விவரிக்கும்போது, தூரத்தில் இருந்து உரக்க பேசாமல், அருகில் வந்து அமைதியாக சொல்லிக்கொடுப்பார்.

சில நேரங்களில், அவர் நடிப்புசொல்லிக்கொடுக்கும் விதத்திலும், நடிப்பை வாங்கும் விதத்திலும், நடிகர்களுக்கு முரண்பாடுகள் ஏற்படலாம். ஆனால் அந்த சீனை நடிகர்கள் டப்பிங்கில் பார்க்கும் போது.. சார் சொன்னதுதான் சரி என்பதை புரிந்துகொள்வார்கள்.”

Related Posts