நகை திருடிய ஊழியர்: இயக்குநர் பார்த்திபன் கொடுத்த தண்டனை!

நகை திருடிய ஊழியர்: இயக்குநர் பார்த்திபன் கொடுத்த தண்டனை!
ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 12 சவரன் நகையைத் திருடியவரை மன்னித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் பார்த்திபன்.
பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபனின்  அலுவலகம், சென்னை நந்தனம் விரிவாக்கம் பகுதியில் உள்ளது. அங்கு 6 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பார்த்திபன் தனது அலுவலகத்தில்  ஒரு பையில் வைத்த ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 12 சவரன் நகை மாயமானது. இதையடுத்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் நடிகர் பார்த்திபன் அலுவலகம் மற்றும் அருகில் உள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். மேலும், அலுவலகத்தில் பணியாற்றும் 6 ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்திய போது, நடிகர் பார்த்திபனிடம் உதவியாளராக பணியாற்றி வந்த ~ஒருவர்தான், 12 சவரன் நகைகளை திருடியது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் 12 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், தனது புகாரை பார்த்திபன் வாபஸ் பெற்றுக்கொண்டார். திருடிய நபர் மன்னிப்பு கேட்டுக்கொண்டதை தொடர்ந்து  புகாரை திரும்ப பெற்று கொண்டதாக கூறப்படுகிறது.

“பார்த்திபன் பல்வேறு மனித நேய உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக சிறையில் இருக்கும் கைதிகள் மீது பரிவு காட்டுபவர். சென்னையில் நடைபெற்ற  புத்தக கண்காட்சியில் சிறைவாசிகளுக்காக  புத்தகங்களை மடிப்பிச்சையாக கேட்டு நெகிழ வைத்தார்.  புத்தாண்டின் மகிழ்வை சிறைக் கைதிகளும் அனுபவிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில்  சிறப்பு இசைக்கச்சேரியை நடத்தினார்.

இந்நிலையில்தான் தவறு செய்தவர் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டார்.  இதையடுத்து, மன்னிப்பே சரியான தண்டனை. இது குற்றம் செய்தவரை சிந்திக்க வைக்கும். இனி அது போன்ற தவறுகளை செய்ய மாட்டார் என்கிற எண்ணத்திலேயே பார்த்திபன் புகாரை வாபஸ் பெற்றுள்ளார் ” என்கின்றனர் திரையுலகினர்.