பண்பாட்டு ஆய்வாளர் ராஜ் கௌதமன் மறைவு: அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்த பா.ரஞ்சித் வலியுறுத்தல்!
தமிழ் பண்பாட்டு ஆய்வாளரும், தமிழ் வரலாறு சார்ந்து முன்னோடியான ஆய்வுகளைச் செய்தவரும். தலித் சிந்தனையாளருமான பேராசிரியர் ராஜ் கௌதமன் இன்று மறைந்தார்.
1950ல் விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டி என்ற ஊரில் பிறந்த இவரது இயற்பெயர் இயர்பெயர் எஸ்.புஷ்பராஜ். அங்கேயே தொடக்கக் கல்வி பயின்றார். மதுரையில் உயர்நிலைப்படிப்பு. பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் விலங்கியல் இளங்கலை, தமிழிலக்கியத்தில் முதுகலை, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டங்கள் பெற்றார். அ. மாதவையா பற்றிய ஆய்வுகளுக்காக முனைவர் பட்டம் பெற்றார்.
புதுவை மாநிலத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்பேராசிரியராக இருந்தார். 2011இல் ஓய்வு பெற்றார். மனைவி க.பரிமளம். மகள் டாக்டர் நிவேதா.
இவருடைய தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு எனும் நூல் சங்க இலக்கியம் பற்றிய சிறந்ததொரு ஆய்வு நூலாகும். 1990களில் தலித் அரசியல் எழுச்சி பெற்றபோது தமிழ்ச் சமூகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இச்சூழலில் ராஜ்கௌதமனின் இந்நூல் 1994இல் வெளிவந்தது சிறப்புக்குரிய ஒன்றாகும்.
தமிழ் பண்பாட்டை அடித்தள மக்களின் கோணத்தில் மார்க்சிய ஆய்வுமுறைப்படி ஆராய்ந்தவர் ராஜ் கௌதமன். தலித் சிந்தனைகளை தொகுப்பதிலும் அவற்றின் மீதான வரலாற்றுபூர்வ விமர்சனத்தை கட்டமைப்பதிலும் பெரும்பங்காற்றியிருக்கிறார்.
க.அயோத்திதாசர் ஆய்வுகள், பாட்டும் தொகையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும்,
ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும், தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு, தலித்திய விமர்சனக் கட்டுரைகள்
உள்ளிட்ட ஆய்வு நூல்களை எழுதி உள்ளார்.
சிலுவைராஜ் சரித்திரம் உள்ளிட்ட புதினங்ளை படைத்துள்ளார்.
இவருக்கு திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் அமைப்பு, ‘வானம் இலக்கிய விருது’ அளித்து சிறப்பித்தது. அப்போது இவரைப் பற்றி குறிப்பிட்டு இருந்ததாவது:
1980களிலிருந்து தமிழில் எழுதிக்கொண்டிருப்பவர் அறிஞர் ராஜ் கௌதமன். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு புதுப்பட்டியில் தலித் கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்து தமிழ் உலகம் அறிந்த பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இலக்கியத்தில் விமர்சனம், ஆய்வு, புனைவு, மொழிபெயர்ப்பு என்று பல்வேறு தளங்களில் பங்களித்து வந்திருக்கிறார்.1990களில் தமிழில் தலித் திறனாய்வு முறையியல் உரு கொண்டபோது அதன் முதன்மை முகமாய் இருந்தார். சுதந்திரச் சிந்தனையாளர், எழுதுவதைத் தாண்டி எந்த நிர்பந்தமும் நோக்கமும் கொண்டிருந்ததில்லை. மார்க்சியம், புறக்கணிக்கப்பட்ட மக்களியம் (Subaltern Studies), பின்நவீனம் உள்ளிட்ட வாசிப்புக் கோட்பாடுகளைக் கையாண்டு தமிழ் வரலாற்றைத் தலித் கண்ணோட்டத்தில் எழுதிப் பார்த்திருக்கிறார். தலித் விடுதலையைப் பெண்ணியத்தோடு இணைத்து எழுதிவந்திருப்பது இவரது தனித்துவம். அதேவேளையில் தலித் என்ற சொல்லாடலை அரசியல் அடையாளமாகவோ பிறப்பு அடையாளமாகவோ சுருக்காமல் அதை ஒரு குணாம்சமாகவே கருதினார். அதிகாரத்திற்கு எதிரான மனநிலையே ‘தலித்‘ என்பார்.
ஆய்வு இறுக்கமானது என்ற மரபை உடைத்து அதனைப் புனைவிலக்கியத்தின் அருகில் கொணர்ந்து சேர்த்தவர். அவரது எழுத்து நடை அசாதாரணமான எள்ளல்களாலும் வெடிச் சிரிப்புகளாலும் ஆனது. தனது கேள்விகள், மறுபரிசீலனைகள், ஒப்பீடுகள் மூலம் தமிழுலகம் அதுவரையில் பேசியிராத / பேச விரும்பாத விஷயங்களைப் போட்டுடைத்து இலக்கியச் சூழலைச் சூடாக்கினார். இத்தகைய விரிந்த எல்லையில் எழுதியிருப்பவர் வேறு யாருமில்லை என்று கூறும் அளவிற்குத் தமிழ் இலக்கியத்தின் பெருமளவு பகுதியை மறுவாசிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறார்.
பொதுவாக, ஓர் ஆய்வாளன் கலைஞனாக இருப்பதில்லை. ஆனால் ஒரு கலைஞன் ஆய்வாளராகவும் இருக்க முடியும் என்பதற்குச் சமகால உதாரணம் ராஜ் கௌதமன். இலக்கியமும் அரசியலும் வேறுவேறல்ல என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்தவர். அதேவேளை படைப்பாற்றலின் நுட்பங்களையும் அறிந்தவர். ராஜ் கௌதமன் போன்றோரின் முயற்சிகள் அடுத்த தலைமுறை மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தியிருக்கின்றன. புதிய முயற்சிகளுக்கும் கோணங்களுக்கும் வழிகோலியிருக்கின்றன.
இந்த அளவில் செயற்பட்டிருக்கும் முன்னோடி அறிஞரை வாழ்நாள் சாதனையாளர் என்று கருதி நீலம் பண்பாட்டு மையம் நடத்திய ‘வேர்ச்சொல்‘ தலித் இலக்கிய கூடுகையின் முதல் விருதாளர் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
ஒரு லட்சம் ரூபாய் காசோலை, நூல் தொகுப்பு, ஆவணப்படம், மதிப்பீட்டு உரைகளுடன் கூடிய விருது விழா, ஏப்ரல் 30 மாலை நீலம் நடத்திய இலக்கிய மாநாட்டின் இறுதி நிகழ்வாக மதுரையில் நடைபெற்றது” என்று நீலம் பண்பாட்டு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் இன்று மறைந்த ராஜ்கவுதமன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்து பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: “தமிழ்ச் சமூகத்தின் ஒப்பற்ற அறிஞர் ராஜ்கௌதமன் ஆய்வு, புனைவு, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று அனைத்திலுமே நவீன முறையை கையாண்டவர்; தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். தலித் திறனாய்வு முறையியல் உருவான போது அதன் முதன்மை முகமாய் இருந்தவர். கற்றுத்தேர்ந்த கோட்பாடுகளின் மூலம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளாமல், கற்ற அனைத்தையும் அடித்தட்டு மக்களின் வரலாற்றை புரிந்துக்கொள்ளவும் அவர்களின் அரசியலை நிறுவவும் எழுதியவர்.
‘தலித்’ என்கிற சொல்லை பிறப்பின் அடையாளமாக பார்க்காமல் அதை ஒரு குணாம்சமாக கருதினார், வரலாறு முழுக்க வெளிப்பட்ட அதிகாரத்திற்கு எதிரான மனநிலையே அது என்றார்.
புனைவும் அரசியலும் வெவ்வேறல்ல என அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தவர். இந்த முறைமையை கையாண்டு சங்க இலக்கியம் தொட்டு சமகால இலக்கியம் வரை ஆய்வு செய்தவர் என்றாலும், படைப்பு குணாம்சத்தின் நுட்பங்களை கணக்கில் கொண்டே அவற்றை மறுவாசிப்புக்கு உள்ளாக்கினார்.
தமிழ் இலக்கியத்திற்கும், ஆய்வு உலகத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாய் தமிழ்நாடு அரசு அவருக்கு அரசு மரியாதையுடன் கூடிய அஞ்சலி செலுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.