“ஒரே ஷாட் நடிச்சிட்டு அசதியாக இருக்குன்னு சினிமால சொல்லுவாங்க!”: தேவிரிக்ஷாட நாடக விழாவில் சமுத்தரகனி

“ஒரே ஷாட் நடிச்சிட்டு அசதியாக இருக்குன்னு சினிமால சொல்லுவாங்க!”: தேவிரிக்ஷாட நாடக விழாவில் சமுத்தரகனி

“நாடக நடிகர்கள் ஒன்றிரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்… ஆனால் ஒரே ஷாட் நடிச்சுட்டு, அசதியா இருக்குன்னு சூட்டிங்ல சில நடிகர்கள்  சொல்லுவாங்க” என்று அதிரடியாக பேசி இருக்கிறார் இயக்குநர் சமுத்திரகனி.

விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் ஜீவாவின் சகோதரியாகவும், கடல் படத்தில் கவுதம் கார்த்திக்கின் சிறு வயது தாயாகவும் நடித்து கவனம் பெற்றவர் தேவி. இவர் தேவிரிக்ஷா என்ற பெயரில் நடிப்பு பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இந்த பள்ளியின் 15 ஆவது ஆண்டு நாடக திருவிழா சென்னையில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் சிறப்பு நாடகம், துடும்பாட்டம், கதை சொல்லி மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நாடகத்துறை மற்றும் திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியில் இயக்குநர்கள் சேரன், சமுத்திரக்கனி, நடிகர் சௌந்தரராஜா, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் மறைந்த விஜே ஆனந்த கண்ணன் மனைவி ராணி கண்ணா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

நடிகர், இயக்குநர் சேரன், “எல்லோருக்கும் வணக்கம். ஒரு மாலை வேளையில் நாடகம் பார்த்து நீண்ட காலம் ஆகிவிட்டது. இங்கு நாடக கலைஞர்களால் வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. முழுக்க முழுக்க புராணமாக இல்லாமல், இந்த கால விஷயங்களை சேர்த்து நக்கலும், நையாண்டியாகவும் செய்திருந்தது அருமையாக இருந்தது. அர்ஜூன் கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் சிறப்பாக நடித்திருந்தார்கள். இதை நிறைய பேர் வந்து பார்த்ததில் மகிழ்ச்சி. இதை சிறப்பாக இயக்கி இருந்த விஷயம் பாராட்டுக்குரியது” என்றார்.

நடிகர் சௌந்தரராஜா, ” கலையை அதன் உண்மை வடிவம் மாறாமல் செய்ய வேண்டும் என்று தேவி கூறுவார். நான், சில விஷயங்களை வணிகமாக செய்ய சொல்வேன், ஆனால் அவர் அதை மறுத்துவிடுவார். நிறைய பேரிடம் கட்டணம் கூட வாங்காமல் பயிற்சி அளித்துள்ளார் தேவி. அதற்கு காரணம் அவர்களிடம் உண்மையான திறமை இருக்கும் என்பது மட்டும் தான்” என்றார்.நடிகர், இயக்குநர் சமுத்திரக்கனி, “இங்கு நடித்த அனைவரும் ஒன்றிரண்டு வேஷங்களில் நடித்தது சுலபமான விஷயம் இல்லை. சினிமா படப்பிடிப்பில் ஒரே ஷாட் நடித்துவிட்டு, எனக்கு அசதியாக இருக்கிறது என கூறிய பல நடிகர்கள் பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு நேரம் எந்த தொய்வும் இன்றி நடித்த அனைவருக்கும் உண்மையில் பாராட்டுக்கள்” என்றார்.

ஆர்.ஜே.ஆனந்த கண்ணனின் மனைவி ராணி கண்ணா, ” நாடக கலையை தேவி சிறப்பாக செய்து வருகிறார். . சினிமாவை தேடி ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் நாடக கலைக்காக நான்கு மாதங்கள் ஒதுக்கி, கடினமாக உழைத்திருக்கிறீர்கள். இது உங்களை நிறைய இடத்திற்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

திண்டுக்கல் ஐ லியோனி, “நடிப்புக்கான பயிற்சி அளிக்கும் கல்லூரிகள் அதிகம் இருக்கிறது. ஆனால், இதுபோன்ற நாடகங்களை நடத்தி, இதற்காக பயிற்சி பெறுபவர்கள் தான் மிக சிறந்த நடிகர்களாக நம் நெஞ்சங்களில் வாழ்ந்து வருகிறார்கள். நீண்ட நாள் கழித்து மேடையில் இவர்களுடன் அமர்ந்து இருக்கிறேன். பாரதி கண்ணமா தொடங்கி, திரையுலகில் ஒரு பொற்காலத்தை உருவாக்கி வெற்றிக் கொடிக் கட்டிய என் அருமை சகோதரர் சேரன். அவர் எப்பவும் இதேபோல் எளிமையாக தான் இருப்பார்.

இதேபோல் எனது அருமை சகோதரர் சமுத்திரக்கனி, இன்றைய உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். அவர் இந்த நிகழ்ச்சிக்கு எளிமையாக வந்து நம்முடன் அமர்ந்து இருப்பது பெரிய அதிசயம் தான்.ஏற்றி வைக்கும் ஏணி போன்றுதான் தேவி. அவர்கள் மூலம் ஏனியில் ஏறி பலர் நட்சத்திரங்களாக மிளிர்கின்றனர். ஆனால் ஏணியாகவே இருப்பதில் மகிழ்ச்சியாக இருப்பவர் தேவி. இப்படி ஏணியாக இருப்பது வளர்ச்சிக்கு ஏணியாய், வாழ்க்கைக்கு தோனியாய் இருக்கும் உங்களது பணி மென்மேலும் சிறக்க வேண்டும்.

ஆதி மனிதன் முதலில் நடிக்கத் தான் செய்தான். மொழி இன்றி அவர்கள் செய்கையில் தான் தகவல் பரிமாற்றம் செய்திருப்பார்கள். இங்கிருந்து இசை, வார்த்தைகள் மற்றும் பேச்சு என எல்லாமே காலப்போக்கில் உருவானவை தான்.

நாடக கலையை தனது  குரு, முத்துசாமியின் நினைவாக நடத்தி வரும் தேவி அவர்களின் மிகச் சிறந்த பணி நிச்சயம் வெல்லட்டும், வாழட்டும்.  நாடகத்தில் நடித்த எல்லாரும் சிறப்பாக நடித்தார்கள்.  எல்லாருக்கும் பாராட்டுக்கள் ” என்றார்.

Related Posts