‘ராயன்’ டீசர் சாதனை: மிரட்டும் தனுஷ்! நெகிழவைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!
நடிகர் தனுஷ் தானே இயக்கி நடித்து முடித்துள்ள ராயன் படம் வரும் ஜூலை 26 ஆம் தேதி உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இவரது நடிப்பில் வெளியான அவரது 25 ஆவது படம் வேலையில்லா பட்டதாரி சூப்பர் ஹிட் ஆனது. அதே போல அவரது 50வது படமான ராயன் படமும், அதிரிபுதிரி ஹிட் ஆகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.
எஸ்ஜே. சூர்யா , பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், சரவணன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, செல்வராகவன் என பெரிய நடிகர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைய இருப்பதால், படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
படத்தின் போஸ்டர்களே எதிர்பார்ப்பை எகிற வைத்தன. போஸ்டர்களை தனுஷ் வெளியிட்ட விதமே இதற்குக் காரணம். படம் மிகவும் எதார்த்தமான பாணியில் எடுக்கப்பட்டிருக்கும் என்பதை அவை உணர்த்தின. அதே போல படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்தன.
இந்நிலையில்தான், ராயன் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.
பயங்கரமாக உடுக்கை சத்தத்துடன் ரத்தக்கறை படிந்த தனுஷ் மீது துஷாரா தண்ணீர் ஊற்றி கழுவும் காட்சியுடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து செல்வராகவன் தனக்கு அருகில் இருக்கும் சிறுவனிடம் உரையாடுவது போல் வரும்.
அநேகமாக அது கதையில் சிறுவயது தனுஷ் கதாபாத்திரமாக இருக்கக் கூடும். செல்வராகவனும் இளம் வயது தோற்றத்தில் இருக்கிறார். அநேகமாக அது பிளாஷ் பேக் காட்சியாக இருக்கக் கூடும்.“ராயா காட்டிலேயே ஆபத்தான மிருகம் எது தெரியுமா?” என்று செல்வராகவன் கேட்க, “சிங்கம் தான்” என்று அந்த சிறுவன் சொல்கிறான்.
பின்னர், “காட்டிலேயே பலமான மிருகம் சிங்கம், புலி தான். ஆனா ஆபத்தான மிருகம் ஓநாய்.
ஒத்தைக்கு ஒத்த நின்னா சிங்கம் ஓநாய அடிச்சிடும். ஆனால், ஓநாய் பயங்கர தந்தரவாதி கூட்டமா சுத்து போட்டு ஸ்கெட்ச் போட்டு சிங்கத்த அழிச்சிடும்” என்று செல்வராகவன் சொல்லும் போதும் பயங்கரமாக இருக்கிறது.
செல்வராகவன் இதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே எஸ்.ஜே.சூர்யா, சரவணன், பிரகாஷ்ராஜ் என அனைத்து கேரக்டர்களும் ஒவ்வொன்றாக வருகிறது. எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட அனைவருமே இயல்பான கெட்டப்பில் மிரட்டுகிறார்கள்.
பின்னர், “அவன் பெரிய ஆம்பள, பெரிய தைரியசாலினா இங்க வந்து போடச் சொல்லு” என்று எஸ்.ஜே.சூர்யா ஆக்ரோஷமாக சொல்கிறார். அப்பொழுது, கொஞ்சம் வயது முதிர்ந்த தோற்றத்தில் ராயன் குறித்து பில்டப் கொடுக்கிறார் செல்வராகவன்.
“வருவான், பேயி மாதிரி வருவான். எறங்கி செய்வான்” என்று சொல்லும் போது பின்னணியில் சண்டைக் காட்சிகள் பட்டையக் கிளப்புகின்றன.
போலீஸ் ஸ்டேஷன் காட்சி ஒன்று வருகிறது. அதாவது, “வாயா ராயா போய் என்ன சொன்ன.. டப்புனு கேஸ வாபஸ் வாங்கிட்டான்” என்று போலீஸ் கேட்க, எதிரில் நிற்கும் தனுஷ் “கெஞ்சி கேட்டன் சார்..” என்று சாந்தமாக சொல்கிறார். இதிலும் தனுஷ் நடிப்பு அற்புதமாக உள்ளது.
இறுதியில், ஏ.ஆர்.ரகுமான் குரலில் ‘உசுரே நீதானே நீதானே’ பாடல் ஒலிக்கும் போது மூன்று சிறுவர்கள் பின்னணியில் நடந்து செல்கிறார்கள். இப்பாடல் உயிரை உலுக்குகிறது. அதே போல பின்னணி இசையும் மனதை நெகிழ வைக்கிறது.
டிரெய்லர் வெளியான ஒரு மணி நேரத்திலேயே பதினோரு லட்சம் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
மொத்தத்தில் இன்று வெளியாகி இருக்கும் ராயர் பட டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்து இருக்கிறது.