தி.மு.க.வுக்கு எதிராக நடிகர் தனுஷ்? ‘இட்லி கடை’ படம் சொல்லும் சேதி!

தி.மு.க.வுக்கு எதிராக நடிகர் தனுஷ்? ‘இட்லி கடை’ படம் சொல்லும் சேதி!

நடிகர் விஜய், த.வெ.க. கட்சியைத் துவங்கி அரசியலில் குதித்திருக்கும் நிலையில், நடிகர் தனுஷூம் தீவிர அரசியலில் களம் இறங்குவார் – அதுவும், தி.மு.க.வுக்கு எதிராக நிற்பார் – என்கிற யூகம் எழுந்துள்ளது. இந்த யூகத்தை ஏற்படுத்தி இருப்பது, தனுஷ் இயக்கி நடிக்கும், இட்லி கடை படத்தின் போஸ்டர்கள்தான்!

‘இட்லி கடை’

‘ராயன்’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இதைத் தொடர்ந்து அவர் இயக்கும் நான்காவது படமாக, ‘இட்லி கடை’ திரைப்படம் உருவாகி வருகிறது. படத்தில் அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நித்யா மேனன் நாயகியாக நடிக்க, அருண் விஜய், அசோக் செல்வன், ராஜ்கிரண், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

படம், அடுத்தாண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது

போஸ்டரில் என்ன அரசியல்?

‘இட்லி கடை’ பட போஸ்டர்கள் மூன்று வெளியாகி உள்ளன. அதில் ஒரு போஸ்டரில், பேருந்து ஒன்று நிற்க, அதில், ‘சங்கராபுரம்’ என அறிவிப்பு பலகை உள்ளது.

இதுதான் தனுஷ் அரசியலுக்கு வருகிறார் என்கிற யூகத்தை கிளப்பி இருக்கிறது.

சங்கராபுரம் என்ற ஊருக்கு – பெயருக்கு அப்படி என்ன முக்கியத்துவம்?

கடந்த ஜூன் மாதம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை குடித்ததால் பாதிக்கப்பட்டு, இரு நூறுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.. 67 பேர் மரணமடைந்தனர். இது அகில இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருணாபுரம், சேஷசமுத்திரம், கச்சிராயபாளையம் மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.

இதில்தான் ‘சங்கராபுரம்’ என்கிற ஊர் முக்கியத்துவம் பெருகிறது.

இந்த பெயர், ‘இட்லி கடை’ பட போஸ்டரில் இருப்பதால், கள்ளச்சாராய விவகாரம்தான் படத்தின் கதையாக இருக்கும் என்கிற யூகம் எழுந்துள்ளது.

இதில் திமுக எதிர்ப்பு என்று சொல்ல வேண்டியது ஏன்?

கள்ளக்குறிச்சி – சங்கராபுரம் – கள்ளச்சாராய பலிகல், தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திய நிகழ்வு. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணி கட்சிகளே தி.மு.க. அரசை இந்த விவகாரத்தில் விமர்சித்தன.

இன்னும் ஒரு படி மேலே போய், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர், “ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியனும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய வியாபாரிகளின் பாதுகாவலர்கள் என்று கூறப்படுகிறது” என குற்றம் சாட்டினர்.

பதிலுக்கு அவர்கள், “எங்கள் மீது வைத்த குற்றச்சாட்டை நிரூபித்தால் நாங்கள் பொது வாழ்வில் இருந்து வெளியேறுகிறோம்” என்றனர்.ஆக, தி.மு.க.வுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய சங்கராபுரம் கள்ளச்சாராய விவகாரத்தை அடிப்படையாக வைத்து – சங்கராபுரம் ஊரை மையமாக வைத்து – ‘இட்லி கடை’ படம் உருவாகிறதோ என்கிற யூகம் எழுகிறது.

இன்னொரு போஸ்டர்!

படத்தின் இன்னொரு போஸ்டரும், ‘தனுஷின் அரசியைலைச் சொல்கிறதோ’ என்கிற கேள்வி எழுந்துள்ளது.

‘சிவனேசன்’ என்கிற பெயர் உள்ள இட்லி கடை நோக்கி, தனுஷ் செல்வதாக அந்த படம் உள்ளது.

தனுஷ் அதி தீவிர சிவன் பக்தர். சமீபத்தில் ‘ராயன்’ படம் வெளியான பிறகு, தனது மகன்களுடன் திருவண்ணாமலை சென்றார். அதுவும் ருத்ராட்ச மாலைகளைகளுடன் சென்று வணங்கி வந்தார்.

சிவ பக்தர் என்பதைத்தாண்டி, இந்து மதத்தின் மீது அதி தீவிர பிடிப்புள்ளவர் என்று சொல்லலாம். அயோத்தியில் நடந்த ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ்த் திரையுலகில் இருந்து இரண்டு நடிகர்கள்தான் கலந்துகொண்டனர்.. ஒருவர் ரஜினி, இன்னொருவர் தனுஷ்.

இந்த அதி தீவிர ஆன்மிக நாட்டத்தையும், அரசியலையும் இணைத்துப் பார்கக வேண்டி இருக்கிறது.

மத அரசியல் என்றால் பாஜகதானே… ஏற்கெனவே பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார் தனுஷ்,

‘அதனால் என்ன… மு.கஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றபோதும், உதய நிதி துணை முதலமைச்சராக பதவியேற்றபோதும்கூட வாழ்த்து தெரிவித்து பதிவிட்டாரே..’ என்று கேட்கலாம்.

இவர்களுக்கு சாதாரணமாக வாழ்த்து தெரிவித்த தனுஷ், மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தபோது ஓம் நமசிவாய என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

ஆக, ரஜினியைப் போல ஆன்மிக அரசியலில் ஈடுபடும் விருப்பம் இருக்கலாம்.

சரி, இதில் ‘இட்லி கடை’ போஸ்டர் எங்கே வருகிறது என்கிறீர்களா?

தனுஷ் என்றாலே எப்போதும் அடிதடி, முரட்டு – நான் வெஜ், இமேஜ் உண்டு. ராயன் படத்தில்கூட பாஸ்ட்புட் விற்கும் கடைதான் வைத்து இருப்பார் தனுஷ். ஆனால் புதிய படத்தில், இட்லி கடை. அதாவது சைவத்துக்கு பெயர் பெற்ற இட்லி! அதற்கு சிவனேசன் கடை என்று பெயர்!

சிவ பெருமானின் நேசன், தொண்டன், அடிமை என்று பொருள்.

ஆக, இது எல்லாமே பாஜகவுக்கு சாதமகான அம்சமாக இருக்கிறது அல்லவா…

ஜாதகம்

இன்னொரு விசயம்…

சந்திரனை அடிப்படையாகக் கொண்ட வேத ஜோதிடத்தில், ‘சிவனேசன்’ என்கிற பெயருக்கு உரிய ராசி, கும்பம்… நட்சத்திரம் – சதாபிசேசகம்!

தனுஷின் ஒரிஜினல் ராசி, நட்சத்திரமும் இதுதான்.இந்தநட்சத்திரத்தைப்பொறுத்தவரை, குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பெரிய அளவில் முன்னேற்றம் இருக்குமாம்.. அதுவும் பொதுவாழ்க்கையில் மிளிர்வார்களாம். ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ள தனுஷ் இந்த ரூட்டை பிடித்து இருக்கலாம்.தமிழ்நாடு பாஜகவைப் பொறுத்தவரை, திரைத்துரையினர் பலர் உள்ளனர்.  ஏன்.. தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரிராஜா பா.ஜ.க.வில்தான் இருக்கிரார்.  தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்களாக உள்ளார்.

ஆகவே தனுஷை தங்களது பிரச்சாரத்துக்குப் பயன்படுத்த பாஜக நினைக்கலாம்.

ஏற்கெனவே, ‘கொடி’ படத்தில் அரசியல்வாதியாக நடித்தவர்தான் தனுஷ். தவிர அவர் நடித்த ‘அசுரன்’, ‘கர்ணன்’ போன்ற படங்களும் அரசியல் பேசும் படங்கள்தான். ‘இட்லி கடை’யும் அந்த வரிசையில் உருவாகலாம். அதுவும், கள்ளக்குறிச்சி – சங்கராபுரம் – சாராய சாவுகளை மையமாக வைத்து, தி.மு..கவுக்கு எதிரான கருத்துக்களுடன் தயாரிக்கப்படலாம்.

இதெல்லாம் நடக்குமா?

திரைப்படங்களைப் பொறுத்தவரை குறியீடுகள் மிகக் கவனமாக வைக்கப்படுகின்றன. ஒடுக்கப்பட்டோரின் உணர்வுகளைச் சொல்லும் நீலம் ஒரு உதாரணம். அதே போல, சில வேறு பொருட்களும் அப்படி குறியீடுகளாக வைக்கப்படுவது உண்டு. உதாரணாக, ,ஜெய் பீம் படத்தில் ஒரு காட்சியில் காலண்டரில் இருந்த அக்னி சட்டி விவகாரத்தை ஏற்படுத்தியது. எதிர்ப்பு எழுந்தவுடன் அது மாற்றப்பட்டது.

அதே போலத்தான் நாயகன், வில்லன் ஆகியோரின் பெயர்கள், ஊர் – இடத்தின் பெயர்களும் ஏதோ ஒரு நோக்கத்துடன் வைப்பது வழக்கமாகி வருகிறது. நாய், நரி, பன்றி போன்ற விலங்குகளும்கூட குறியீடுகளாக வைக்கப்படுகின்றன.

ஆகவேதான், ‘இட்லி கடைட படத்தில் வரும், ‘சங்கராபுரம்’, ‘சிவனேசன்’ ஆகிய பெயர்களும் பல்வேறு யூகங்களை ஏற்படுத்துகின்றன.

– டி.வி.சோமு