தனஞ்ஜெயன் வழங்கும் ‘ஒரு நொடி’ படத்தின் இசை வெளியீடு!

தனஞ்ஜெயன் வழங்கும் ‘ஒரு நொடி’ படத்தின் இசை வெளியீடு!

தயாரிப்பாளரும், திரைப்பட விமர்சகரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயனின் கிரியேட்டிவ் எண்டர்டெய்ன்மென்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் உலகம் முழுவதும் ஏப்ரல் 26 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியிடும் படம், ‘ஒரு நொடி’.

பி. மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கிறார்.

மேலும் தமன்குமார், எம். எஸ். பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, பழ. கருப்பையா, ஸ்ரீ ரஞ்சனி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

கே. ஜி. ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசை அமைத்து உள்ளார்.

திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அழகர் ஜி மற்றும் கே.ஜி. ரத்தீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.இத் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் ஆரி அர்ஜுனன் படத்தின் இசையை வெளியிட, தயாரிப்பாளர் சி. வி. குமார், பழ. கருப்பையா, வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பட குழுவினர் பெற்றுக் கொண்டனர்.‌

தயாரிப்பாளரும், இயக்குநருமான சி. வி. குமார், நடிகரும், பேச்சாளருமான ஈரோடு மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்வில், படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது:

நடிகர் ஆரி அர்ஜுனன் பேசுகையில், ” இந்தப் படக் குழுவினருக்கு இதுவரை தெரியாத ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்கிறேன். இப்போதுதான் ட்விட்டரை பார்த்தேன். ‘அரண்மனை 4’ படத்தின் வெளியீடு மே மூன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு நொடி படத்திற்கு போட்டியில்லை. உங்களுக்கு விஷால் நடித்திருக்கும் ‘ரத்னம்’ படம் மட்டும் தான் போட்டி.

 

படத்தைப் பற்றி அனைவரும் அனைத்து விசயங்களையும் பேசி விட்டனர். நாளைக்கு தேர்தல் என்பதால்.. பேச்சாளர் பழ. கருப்பையா பேசும்போது, ‘இங்கு கரப்சனும் இருக்கும். அடாவடித்தனமும் இருக்கும். எதுவும் மாறாது’ என்பதை சொல்லியிருக்கிறார். ஆனால் ஓட்டு போடும் நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை மாற்றம் ஏற்படும் என்பது தான். ஓட்டு போட்டால் மாற்றம் வரும் என்று நம்பி தான் ஓட்டு போடுகிறோம்.

சி. வி. குமார் தனஞ்ஜெயன் என தமிழ் சினிமாவின் ட்ரென்ட் செட்டர்ஸ் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். நான் சினிமாவில் நுழைந்து போராடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நான் பார்த்து வியந்த சில தயாரிப்பாளர்களில் இவர்களும் உண்டு. குறிப்பாக இவர்கள் நல்ல படைப்புகளை உருவாக்கி திரையரங்கத்திற்கு கொண்டு செல்லும் தயாரிப்பாளர்கள். இவர்களுடைய நிறுவனத்திலிருந்து அழைப்பு வராதா..? என ஏங்கி இருக்கிறேன்.

என்னைவிட.. சினிமா கனவுகளுடன் கடுமையாக உழைத்து சிறந்த படைப்பை உருவாக்கும் கலைஞர்களை தேடி கண்டறிந்து, அவர்களுக்கு வாய்ப்பளித்து படத்தை உருவாக்கி திரையரங்கத்திற்கு கொண்டு வரும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதே.. இதற்கு மிகப்பெரிய பாராட்டை அளிக்க வேண்டும்.

தமன்- ஈரோடு மகேஷ்- நான் நெருங்கிய நண்பர்கள். இருந்தாலும் ஒரு கதாநாயகனின் வெற்றி என்பது ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் பெரிய போராட்டத்தை போன்றது. ஏனெனில் நடிகர்கள் உடம்பை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். சாப்பிட வேண்டும். வாய்ப்புகளை தேடி ஓட வேண்டும். நல்ல படைப்புகள் வெளியாக வேண்டும். எனக்கும்.. தமனுக்கும்.. எங்களைப் போன்றவர்களுக்கும்  என்ன பிரச்சனை என்றால்… கடைசி நிமிடம் வரை வேலை செய்ய வேண்டிய சூழல் உண்டு.‌ படத்தின் போஸ்டர் ஒட்டும் வேலையை கூட தயாரிப்பாளர், இயக்குநர் என அனைவரும் செய்வார்கள். ஆனால் நாயகன் என்பவர் திரையரங்கில் படம் ஓடும் கடைசி நாள் வரை வேலை செய்து கொண்டிருப்பார்.தமிழ் சினிமாவில் ஏற்கனவே படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு சில சிக்கல்கள் இருக்கும். ஏனெனில் சினிமா பணம் போட்டு பணம் எடுக்கும் பிசினஸ். ஆனால் புதிய தயாரிப்பாளர்கள் நம்பிக்கையுடனும், கனவுகளுடனும் இங்கு படத்தை தயாரிக்க தொடங்குகிறார்கள்.  குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்றாலும்.. படத்தை தயாரிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் தயாரிப்பாளர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் வந்தவர்தான் தயாரிப்பாளர் அழகர்.  இவர் மனது வைத்ததால் தான் ஒரு நொடி தயாராகி இருக்கிறது. நல்ல சினிமாவாக தயாராகி தனஞ்ஜெயன் கைகளுக்கு வந்திருக்கிறது.  நிறைய நபர்களின் கனவுகளை நனவாக்க க்கூடிய இந்த தயாரிப்பாளர் போன்றவர்கள் தான் சினிமாவுக்கு தேவை.

‘சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்காதீர்கள்’ என்று விஷால் நல்ல நோக்கத்தில் தான் சொன்னார். ஆனால் பலரும் அதனை வேறு விதமாக புரிந்து கொண்டார்கள். ஆனால் ஒரு விசயத்தை புரிந்து கொள்ளுங்கள். சின்ன பட்ஜெட் படம் …பெரிய பட்ஜெட் படம்.. என்றில்லை.

நல்ல கன்டென்ட் உள்ள படத்திற்கு மக்கள் எப்போது ஆதரவு தர தயாராகவே இருக்கிறார்கள்.

‘மஞ்சுமல் பாய்ஸ்’, ‘காந்தாரா’ போன்ற படங்கள் பெரிய வசூலை தமிழில் பெற்றிருக்கிறது. நிறைய நல்ல படங்கள் இங்கு ஓடுவதற்கு மிக முக்கியமான காரணம் நல்ல கன்டென்ட் தான். நல்ல கதை… நல்ல திரைக்கதை… நேர்மையான உழைப்பு… இவையெல்லாம் ஒன்றிணைந்தால்.. அதுதான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்.இப்படத்தின் இயக்குநர் மணிவர்மன்.. இயக்கிய ‘கண்மணி பாப்பா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது தான் அறிமுகமானார். அதன் பிறகு எங்களுக்குள் நல்ல நட்பு தொடர்கிறது. அவர் படப்பிடிப்பின் போது செலவுகளை திட்டமிட்டு தான் செலவு செய்வார். தயாரிப்பாளரின் பணம் என்றாலும் கூட அதனை தன்னுடைய சொந்த பணமாக நினைத்து தான் சிக்கனமாக செலவு செய்வார். அவரின் இந்த அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது.  ஒரு நொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு தயாரிப்பாளர்கள் விரும்பும் தரமான இயக்குநர் கிடைத்திருக்கிறார் என மகிழ்ச்சி அடைகிறேன்.  அவரை வாழ்த்துகிறேன். புதிய தயாரிப்பாளர்கள் அவரை நம்பி முதலீடு செய்து படத்தை தயாரிக்கலாம். உங்கள் பணத்திற்கு அவர் பாதுகாப்பாக இருப்பார்.

இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் அனைவரும் பணத்தை எதிர்பார்த்து பணியாற்றவில்லை. இப்படத்தின் கதைதான் அனைவரையும் ஒன்றிணைந்து, எதையும் எதிர்பார்க்காமல் பணியாற்ற வைத்து. இந்த படம் வெளியான பிறகு ஹீரோ தமன் குமார் உள்ளிட்ட அனைவருக்கும் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என நம்புகிறேன்.

இந்த படத்தின் வணிகத்திற்கும், வெளியீட்டிற்கும் கேபிள் சங்கரும் ஒரு காரணம். இந்த விழா முடிவடைந்த பிறகு அவரை சந்தித்து, எங்களது  படத்தைப் பார்த்து ஆதரவு தருமாறும் வணிகத்திற்கு வழிகாட்டுமாறும் ஏராளமானவர்கள் தொடர்பு கொள்வார்கள்.

‘தங்கலான்’, ‘கங்குவா’ என பெரிய பட்ஜெட் படங்களுக்கு பணியாற்றி வரும் தனஞ்ஜெயன் எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறார். இது மட்டும் இல்லாமல் திரையுலகில் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக அது பற்றிய தனது எண்ணங்களை டிவீட் செய்கிறார்.

தனஞ்ஜெயன் மீது திரையுலகினருக்கு குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு பெரிய மரியாதை இருக்கிறது. ஏனெனில் அவரிடம் உள்ள ஃபினான்சியல் டிசிப்ளின்.ஒரு நொடி படத்திற்காக தனஞ்ஜெயன் அனைவரையும் பணிவுடன் அணுகி படத்தைப் பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறும், அதை வீடியோவாக வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக என்னை அணுகும் போது நான் செய்த தவறை அது சுட்டிக்காட்டி இருந்தேன். நான் முதன் முதலாக வாக்களிக்க சென்று இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் நின்று அதற்கு மேல் பொறுமை இல்லாமல் வாக்களிக்காமல் திரும்பி வந்த விசயத்தை பகிர்ந்து கொண்டேன்.  காலப்போக்கில் நான் செய்த தவறை உணர்ந்தேன்.  ஓட்டு போடுவது நமக்காக. நாம் யாரையோ தேர்வு செய்கிறோம் என்பதற்காக அல்ல. நமக்காகத்தான் ஒருவரை தேர்வு செய்கிறோம் என்ற பொறுப்புணர்வை வீடியோவாக பதிவு செய்து அனுப்பினேன். இதற்கும் ஒரு காரணம் உண்டு. இதற்கும் இப்படத்தில் கிளைமாக்ஸிக்கும் ஒரு தொடர்பு உண்டு.

நாம் நமது தவறுகளை எப்போது ஒப்புக்கொள்கிறோம்…. நாம் செய்யும் தவறுகளை எப்போது திருத்திக் கொள்கிறோம்… என்பது மிகவும் முக்கியமானது. தவறு என்று தெரிந்த பிறகு அதனை திருத்திக் கொள்ளாமல் இருப்பது தான் தவறு. இதை உணர்த்தும் வகையில் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த திரைப்படம் மாற்றத்திற்கான ஒரு படம்.

அனைவரும் வெற்றியை நோக்கி தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த திரைப்படம் நல்ல கன்டென்ட் இருப்பதால் வெற்றி பெறும்.

மலையாள திரைப்படங்கள் வெற்றி பெறுகிறது. வேறு மொழி திரைப்படங்கள் வெற்றி பெறுகிறது. ஆனால் இதற்கு எல்லாம் முன்னோடி தமிழ் சினிமா தான். இங்குதான் சிறந்த கன்டென்ட்டிற்கு எப்போதும் ஆதரவு உண்டு.  தமிழ் சினிமாவில் அதற்கு தற்போது ஒரு தேக்க நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் நாம் கதாசிரியர்களுடன் இணைந்து பணியாற்றுவதில்லை.

இங்கு இரண்டு எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் நடிக்க வந்து விட்டார்கள். எழுதுவதை குறைத்து கொண்டு விட்டார்கள்.  அதனால் இவரைப் போன்ற எழுத்தாளர்களை நாம் உருவாக்க வேண்டும். இதற்காக ரைட்டர்ஸ் மேளா என்ற ஒரு விசயத்தை தொடங்க வேண்டும். எழுத்தாளரிடம் கதையை வாங்கி படத்தை தயாரிக்கும் போக்கு நம்மிடம் குறைந்து வருகிறது. இயக்குநர் கதையை கொண்டு வந்தால் அதனை ஏற்றுக் கொள்கிறோமே தவிர.. ஒரு எழுத்தாளிடமிருந்து கதையை வாங்கி அதை இயக்குவதற்கு மற்றொரு இயக்குநரை நாம் தேர்ந்தெடுப்பதில்லை.   எழுத்தாளர்களையும், இயக்குநர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியை தொடங்க வேண்டும் என்று நானும் எண்ணி கொண்டிருக்கிறேன். இதற்கான தொடக்கமாக இந்த மேடை அமையும் என நான் நம்புகிறேன். ” என்றார்.

படத்தை வெளியிடும் தயாரிப்பாளரும், விநியோஸ்தருமான தனஞ்செயன் பேசுகையில், ” நம்பிக்கை வைத்து மீனாட்சி அம்மனின் அருளுடன் இந்த படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் அழகருக்கு நன்றி. உங்களுக்கு மாபெரும் வெற்றி காத்திருக்கிறது.  நல்ல திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறீர்கள். இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றி, கடுமையாக உழைத்திருக்கும் ஒளிப்பதிவாளர் ரத்தீசுக்கும் நன்றி.

இந்தப் படத்தை கேபிள் சங்கர் மூலமாக எங்கள் குழுவினருடன் இணைந்து பார்த்தேன் பார்க்கும்போது எனக்கு தோன்றிய கருத்துக்களை எழுதி கொண்டே வந்தேன். படம் முடிவடைந்த பிறகு இயக்குநரிடம் பேசினேன். அவர் பல இயக்குநர்களுக்கு உரிய பிடிவாத போக்கை கைவிட்டு.. புரிந்து கொள்ளும் கலாச்சாரத்தை கொண்டிருந்தார்.‌ இது எனக்கு மிகவும் பிடித்து விட்டது.  படத்தின் டைட்டில் முதலில் ‘நொடி’ என்று இருந்தது.‌ இதனை ‘ஒரு நொடி’ என மாற்ற வேண்டும் என கேட்டேன்.

சற்றும் தயக்கம் இல்லாமல் ஒப்புக்கொண்டார்.  அந்த நொடியிலேயே இவருடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என தீர்மானித்து விட்டேன்.  இந்த படத்திற்கான டைட்டில் மாற்றத்தை கதையின் கான்செப்ட் உடன் ஒத்திருந்ததால் இதை சொன்னவுடன் எந்த தயக்கமும் இன்றி அவர் ஏற்றுக்கொண்டார். அப்போது இந்த படம் தணிக்கை செய்யப்படவில்லை. அதனால் எனக்கு வாய்ப்பு இருந்தது. இதன் பிறகு தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி படத்தின் பெயர் மாற்றத்திற்கு அனுமதி வாங்கினோம்.

நான் எளிதில் திருப்தி அடைய மாட்டேன். சிறிய சிறிய மாற்றங்களை செய்ய வேண்டும் என சொல்லிக் கொண்டே இருப்பேன். டப்பிங்… வசனம்… காட்சி அமைப்பு… என பல விசயங்களில் திருத்தங்களை செய்யலாமே என சொல்லிக் கொண்டே இருந்தேன். படைப்பு எங்களிடம் இருக்கும் வரை மாற்றங்கள் செய்து கொண்டே இருக்கலாம்.  அவை வெளியான பிறகு ரசிகர்களும், ஊடகங்களும் சொல்லும் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

படத்தின் நீளத்தை குறைக்கலாம் என்று சொன்னேன். குறிப்பாக எட்டு நிமிட காட்சிகளை வெட்டி விடலாம் என சொன்னேன். அதற்கும் இயக்குநர் சரி என்று ஒப்புக்கொண்டார். உடனே இயக்குநர், படத்தொகுப்பாளர் இணைந்து எந்தெந்த காட்சிகளை நீக்கலாம் என தீர்மானித்து, படத்தின் நீளத்தை குறைத்து திரைக்கதையை வேகப்படுத்தினர். அவர்களுடைய கூட்டு உழைப்பு எனக்கு பிடித்திருந்தது.

படத்தின் இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம். ஒரு இளம் திறமைசாலி. அற்புதமாக பணியாற்றி இருக்கிறார்.

இயக்குநர் மணிவர்மனிடம் கடைசியாக ஒரு திருத்தத்தை சொன்னேன். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். அது கதையின் போக்கையே மாற்றிவிடும் என்பதை அவர் விளக்கிய பிறகு.. நானும் உணர்ந்தேன். இது அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம்.

படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த பிறகு, அவரிடம் எனது நிறுவனத்தில் ஒரு படத்தை இயக்குங்கள் என கேட்ட போது, அவர் மற்றொரு நிறுவனத்திற்காக ஒப்பந்தமாகி இருக்கிறேன் என்றார். அத்துடன் அந்த தயாரிப்பாளரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். தமன் தான் நாயகன். நாங்கள் இப்படத்தில் தொடக்கத்திலிருந்தே உங்களுடன் இணைந்து பயணிக்கிறோம் என்றார் இதுவும் என்னை மிகவும் கவர்ந்தது.

இந்தப் படத்தை ஒரு குறும்படமாக காண்பிக்க வேண்டும் என சொன்னேன். உடனே படத்தொகுப்பாளரும், இயக்குநரும் இணைந்து 13 நிமிட காட்சிகளை உருவாக்கி இந்தப் படம் எதைப் பற்றி பேசுகிறது என்பதனை தொகுத்து காண்பித்தார்கள்.

ஒரு தயாரிப்பாளர் -விநியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் இயக்குநர் மணிவர்மன் போன்றவர்களுடன் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன். மணிவர்மன் போன்றவர்கள் திரையுலகில் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.‌

ஏப்ரல் 26 ஆம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டோம். கோடை விடுமுறை தொடங்கியதால் இந்த தேதி சிறப்பானது என கருதி வெளியிடுவதற்காக திரையரங்குகளை தொடர்பு கொண்டோம். அவர்கள் ‘அரண்மனை 4’, ‘ரத்னம்’ என இரண்டு பெரிய திரைப்படங்கள் அன்றைய தேதியில் வெளியாகிறது என சொன்னார்கள். ஆனால் இப்போது நடிகர் ஆரி சொன்ன தகவலால் உற்சாகமடைந்திருக்கிறேன். ‘அரண்மனை 4’ படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஒரு நொடி படத்திற்கு கூடுதலான திரையரங்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

ஆரியின் பேச்சை கவனித்தபோது அவர் எதிர்காலத்தில் சிறந்த அரசியல்வாதியாக வருவார் என எதிர்பார்க்கிறேன். அவருடைய பேச்சில் .. தேர்தல் ஆணையத்திற்கு அவர் வழங்கிய ஆலோசனை.. மிகவும் சிறப்பானது.  அவரது ஆலோசனையை ஏற்று வாக்களித்ததற்கான டிஜிட்டல் சான்றிதழ் உடனடியாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டால் பெரும் மாற்றம் ஏற்படும். இதற்காக ஆரியை மனமார வாழ்த்துகிறேன். அதிலும் மாற்றத்திற்காக அவர் கொடுக்கும் குரல்‌ பெரிய அளவில் பேசப்படும்.‌ தனி மனிதனாக இந்த சமூகத்தில் மேலும் பல உயரங்களை தொடுவீர்கள் என வாழ்த்துகிறேன். ” என்றார்.

பேச்சாளர் ஈரோடு மகேஷ் பேசுகையில், ”  ‘ஒரு நொடி’ இந்த பட குழுவினருக்கு இந்த படம் எவ்வளவு முக்கியமோ… அந்த அளவிற்கு என்னுடைய நண்பன் தமனுக்கும் இந்த படம் முக்கியம். ஒரு மனிதன் ஒரு வெற்றிக்காக ஒரு மாதம் உழைக்கலாம். ஓராண்டு உழைக்கலாம். ஈராண்டு உழைக்கலாம். ஆனால் பன்னிரண்டு ஆண்டு காலம் உழைத்திருக்கிறார். ஒரு வெற்றிக்காக தன்னுடைய வாழ்க்கையில் பன்னிரண்டு ஆண்டுகளை தியாகம் செய்தவர் என்னுடைய நண்பர் தமன் குமார். எல்லாம் வல்ல இறைவனின் ஆசியால் இந்த திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

நான் மிகவும் நேசிக்கும் இலக்கிய ஆளுமைகள் வேல. ராமமூர்த்தி மற்றும் பழ. கருப்பையா ஆகியோர் இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.  இவர்களின் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். பழ கருப்பையா பேசும் போது, ‘இங்கு எதுவும் மாறாது’ எனக் குறிப்பிட்டார். உண்மைதான்.  உதாரணத்திற்கு டிராபிக்.

ஐயா சொன்னது போல் தப்பு செய்பவர்கள் அடாவடியாகத்தான் இருக்கிறார்கள்.  தப்பு செய்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள். கை கொடுக்கிறார்கள். கட்டிப்பிடிக்கிறார்கள். தெளிவாக இருக்கிறார்கள்.

 

கோர்ட்டில் கேஸ் ஒன்று வருகிறது. ஏடிஎம்மில் ஒருவன் ஐந்து முறை கொள்ளையடித்திருக்கிறான். அவரைப் பார்த்து ஜட்ஜ், ‘ஏடிஎம்மில் ஐந்து முறை கொள்ளையடித்திருக்கிறாயே.. இதற்கு என்ன தண்டனை தெரியுமா?” என கேட்டிருக்கிறார். அதற்கு அவன், ‘:ஐந்து ட்ரான்ஸாக்ஷன்களுக்கு மேல் சென்றால் 150 ரூபாய் பிடிப்பீர்களா..?! ” என பதிலுக்கு கேட்டிருக்கிறார்.

 

வட இந்தியாவில் பதினைந்து நாளில் ஏடிஎம்மில் கொள்ளை அடிப்பது எப்படி ?என்று கிராஷ் கோர்ஸ் ஒன்றை நடத்தியிருக்கிறான். கடைசியில் செய்முறை பயிற்சியின் போது அவனை கைது செய்திருக்கிறார்கள்.

இதெல்லாம் நாளிதழில் வெளியான உண்மைச் சம்பவங்கள். இப்படித்தான் இருக்கிறது உலகம். இதற்கு நடுவில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நொடி முக்கியம்.

ஜெயகாந்தன் சொல்வார் ‘வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்’ என்பார்.

ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு நொடி முக்கியம். கொலை செய்கிறவனுக்கு கொலை செய்வது நியாயமாகப்படும். கொள்ளையடிக்கிற உனக்கு அந்த நொடியில் கொள்ளை அடிப்பது நியாயமாகப்படும். இருந்தாலும் உண்மையான நியாயம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா… அதுதான் இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இங்கு உள்ள அனைத்து நட்சத்திரங்களுக்கும் அவர்களது குடும்பத்தினர் செய்த தியாகங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இறையருள் காரணமாக இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய ஆளுமைகள் நடித்திருக்கிறார்கள். இறையருளால் தயாரிப்பாளர் அழகர் இந்த திரைப்படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார். இறையருளால் தனஞ்ஜெயன் இந்த திரைப்படத்தை வாங்கி வெளியிடுகிறார். இறையருளாலும், ரசிகர்களின் ஆதரவாலும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ” என்றார்.

Related Posts