கமல் படத்துக்கு தடை போடும் க்யூப்!

கமல் படத்துக்கு தடை போடும் க்யூப்!

கமல் நாயகனாக நடிக்க, சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் ‘குணா’. ரோஷினி, ரேகா, ஜனகராஜ், அஜய்ரத்தினம்,

எஸ். வரலட்சுமி ,கிரீஷ் கர்னாட் , எஸ்.பி. பாலசுப்பிரமணியம்,

சரத் சக்சேனா, காகா ராதாகிருஷ்ணன், பிரதீப் சக்தி, அனந்து உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்தனர்.

வாலிகயின் வரிகளுக்கு இளையராஜா இசையமைத்த பாடல்கள் அனைத்தும் இன்றுவரை ரசிக்கத்தக்கவையாக உள்ளன.

வேணுவின் ஒளிப்பதிவு பெரும் பாராட்டைப் பெற்றது.

சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் உலகம் முழுவதும் வெளியிட்டது.

“குணா படத்தை, மறுவெளியீடு செய்ய வேண்டும்; மீண்டும் திரையில் பார்க்க வேண்டும்’ என்று, திரைப்பட  ரசிகர்கள் தொடர்ந்து, சமூகவலைதளங்களில் வலியுறுத்தி வந்தனர்.

இந்தக்கால இளைஞர்களும் ‘குணா’ படத்தை ரசிக்கின்றனர்; பட வசனங்களையும், பாடல்களையும் நினைவூட்டி கொண்டாடி வருகின்றனர். இதற்கு சாட்சியாக, ‘மஞ்சு மெல் பாய்ஸ்’ மலையாள படத்தின் வெற்றியைச் சொல்லலாம். ‘குணா’  படத்தின் பாடல் இடம் பெற்ற இப்படம், தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் ஓடி வெற்றி கண்டது.இந்நிலையில், ‘பிரமிட்’ நிறுவனம், ‘குணா’  திரைப்படத்தை, (கடந்த) ஜூன் 21ம் தேதி, உலகம் முழுதும் திரையரங்குகளில திரையிட உள்ளது’ என்ற தகவல் வெளியானது. ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர்.

ஆனால் குறித்த நாளில் படம் திரையிடப்படவில்லை. எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து திரையுலக வட்டாரத்தில் கூறப்படுவதாவது:

“குணா படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமை – நெகட்டிவ் ரைட்ஸ் – பிரமிட் நிறுவனத்திடம் இருக்கிறது. ஆகவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டது. அதற்கான ஏற்பாடுகளையும் செய்து முடித்தது.

ஆனால், திரைப்படங்களை (டிஜிட்டல் முறையில்) திரையிடும் கியூப் நிறுவனம்  நிறுவனம், ‘குணா படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமை தன்னிடம் இருப்தாக,

கன்சிராம் என்கிற விநியோகஸ்தர் எங்களுக்கு கடிதம் கொடுத்து இருக்கிறார். ஆகவே படத்தை திரையிட முடியாது’ என்று கூறி, அதிர்ச்சி அளித்தது.

அப்படி கடிதம் கொடுத்தவர், ஆதாரமாக எந்தவொரு ஆவணத்தையும் அளிக்கவில்லை.

காரணம், முழு உரிமையும் பிரமிட் நிறுவனத்திடம் உள்ளது. இது குறித்து, பிரசாத் பிலிம் லேபரட்டரி வழங்கியிருக்கும் ஆவணத்தில், ‘படத்தை திரையரங்குகளில் ‘குணா’ படத்தை வெளியிடும் உரிமை (நெகட்டிவ் உரிமை)   பிரமிட் நிறுவனத்திடம் உள்ளது’ என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது.இந்த ஆவணத்தை சமர்ப்பித்த பிறகும், “ஆவணத்தில், ‘தியேட்ரிக்கல்’ என குறிப்பிடவில்லை” என்று கூறி, படத்தை திரையிட மறுக்கிறது, கியூப் நிறுவனம்.

‘வெளியிட மறுப்பதை, கடிதமாக அளியுங்கள்’  என்று கேட்டதற்கும் கியூப்  மறுத்துவிட்டது.

உரிய ஆவணம் இன்றி, குணா படத்தின் உரிமை தன்னிடம் இருப்பதாக கடிதம் கொடுத்திருக்கும் கன்சிராம், சென்னை – செங்கல்பட்டு விநியோகஸ்தர்கள் சங்க உறுப்பினராக உள்ளார். அச்சங்கத்தில் இருப்போர் சிலர் கன்சிராம் சார்பில், கியூப் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். இந்த முறையற்ற செயலால், நல்லதொரு திரைப்படமான குணா, மறுவெளியீடு செய்யப்படாமல் முடங்கிக் கிடக்கிறது

இப்போது, சட்டபூர்வ நடவடிக்கையில் ஈடுபட, பிரமிட் நிறுவனம் தயாராவதாக தகவல் உலவுகிறது” என்றனர்.

பிரச்சினைகள் தீர்ந்து, ‘குணா’ திரைக்கு வரவேண்டும். ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Related Posts