சீண்டும் சீனா: கொதிக்கும் இந்தியாவை !

சீண்டும் சீனா: கொதிக்கும் இந்தியாவை !

19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் இன்று (23-09-23) தொடங்கி, வரும் அக்டோபர்  8 வரை நடக்க உள்ளது.  இதில் இந்தியா, இலங்கை, சீனா, மலேசியா உள்ளிட்ட 45 நாடுகள் கலந்து கொள்ளவிருக்கிறது.

இந்த போட்டியில் சாம்பியன்ஷிப் வெல்லப்போகும் நபர் நேரடியாக ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்புகளைப் பெறுவார்கள்.  இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து மட்டும் 600க்கு மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். மேலும், இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில், இந்தியா சார்பில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கலந்துகொள்ள இருந்தார்.

ஆனால் இந்த போட்டியில் கலந்துகொள்ளவிருக்கும் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 வீரர்களுக்கு விசா வழங்காமல் சீன அரசு அனுமதி மறுத்துள்ளது.  இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், சீன  பயணத்தை ரத்து செய்துள்ளார்.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர், “சிலருக்கு எதிராக சீன அதிகாரிகள் பாரபட்சம் காட்டியுள்ளனர். அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும். சீனாவின் பாரபட்ச நடவடிக்கைகளால் ஆசிய விளையாட்டுகளின் தன்மையையும், விதிமுறைகளையும் சீனா மீறியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே சீனா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறியதாவது, “சீனா அரசாங்கம், ‘அருணாச்சலப் பிரதேசம்’ என்று அழைக்கப்படுவதை அங்கீகரிக்கவில்லை. ஜங்னான் (அருணாச்சலப் பிரதேசம்) சீனாவின் ஒரு பகுதி ஆகும்” என்று கூறினார். சில தினங்களுக்கு முன்பு அருணாச்சலப் பிரதேசத்தை தங்கள் பகுதியாக அறிவித்து உரிமை கொண்டாடி சீனா புதிய வரைபடத்தை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அந்த மாநில விளையாட்டு வீரர்களைச் சீனா புறக்கணித்திருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

Related Posts