வட்டியுடன் ரூ.3 கோடி கடனை செலுத்த வேண்டும்: நடிகர் விமலுக்கு நீதிமன்றம் உத்தரவு!
பிரபல நடிகர் விமல், மூன்று கோடி ரூபாய் கடனை 18 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
நடிகர் விமல் நாயகனாக நடித்து, தயாரித்து வெளியான திரைப்படம், ‘மன்னர் வகையறா. இந்நிலையில், அரசு பிலிம்ஸ் கோபி என்பவர், “குறிப்பிட்ட படத்துக்காக, நடிகர் விமல் என்னிடம் ரூ. 5 கோடி கடனாக பெற்றார். படம் வெளியாகும் சமயத்தில் வட்டியுடன் திருப்பித் தருவதாக உத்தரவாதம் அளித்து இருந்தார். ஆனால் அவர் கொடுத்த காசோலை, பணம் இல்லாமல் திரும்பிவிட்டது” என விமல் மீது 2020 ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார் கோபி.
இந்த சூழ்நிலையில் கோபி, சிங்காரவேலன் ஆகிய தயாரிப்பாளர்கள் மீது மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்தார் நடிகர் விமல்.
இந்நிலையில் 2022ம் ஆண்டு விமல் மீது சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார் கோபி. தனது மனுவில், ‘பண விவகாரத்தின் தொடர்ச்சியாக, விமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தேன். அங்கு சமரசம் ஏற்பட்டு, 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ‘ரூபாய் 3 கோடியை ஓராண்டு காலத்திற்குள் திருப்பித்தருகிறேன்’ எனவதாக விமல் உத்தரவாதம் அளித்தார். சமாதான ஒப்பந்தம் செய்து கொடுத்தார். ஓராண்டு கடந்தும் பணம் வரவில்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கோபியிடம் உள்ள ஆவணங்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் ரூபாய் 3 கோடியை 18 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என தற்போது உத்தரவு பிறப்பித்து உள்ளது.