இறந்தும் வழிகாட்டும் ஹேமா!

சமூக அக்கறையுன் செயல்பட்டு வரும் keetru இணையதளத்தின் ஆசிரியர் ரமேஷின் மனைவி ஹேமலதா, நேற்று பெங்களூருவில் காலமானார். அவரது விருப்பப்படி, உடல் நாளை மருத்துவமனையில் ஒப்படைக்கப் படுகிறது.
ஆம்… உடல் தானம் செய்திருக்கிறார் ஹேமா. அதை நிறைவேற்றுகின்றனர் கணவர் ரமேஷும், மகள் பிரதிக்ஷாவம்!
‘உடல் தானம்’ என்ற வார்த்தையை பல காலமாக கேட்டு வருகிறோம். ஆனால் அதன் முக்கியத்துவத்தை பெரும்பாலோர் இன்னும் அறியவில்லை என்பதே எதார்த்தம்.
மருத்துவ ஆராய்ச்சிக்கு… குறிப்பாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மனித உடல் குறித்து அறிய உடல்கள் தேவை.
சுருங்கச் சொன்னால், ஒரு உடல் தானம் என்பது எதிர்காலத்தில் பல உயிர்களைக் காக்கும். ஆம் புதிய ஆராய்ச்சிகள் மூலம், புதிய கண்டுபிடிப்புகள் நடந்து உயிர்கள் பிழைக்கும் மருந்துகள், சிகிச்சைகள் உருவாகும்.
தவிர, இறந்தவரின் கண்கள் மற்றும் உடல் திசுக்கள் சில எடுக்கப்பட்டு, தேவைப்படும் நோயாளர்களுக்கு அளிக்கப்படும்.
ஆனால் இந்தியா, உடல்தானத்தில் மிகவும் பின்தங்கி இருக்கிறது. உலக சுகாதார அமைப்பின்படி, இந்தியாவில் 0.01% பேர் மட்டுமே – அதாவது பத்தாயிரம் பேர் மறைந்தால், அதில் ஒருவர் மட்டுமே உடல் தானம் செய்தவராக இருக்கிறார்.
உலக அளவில் உறுப்பு தானத்தில் முதலிடம் வகிக்கும் நாடு ஸ்பெயின். இன்னும் சொல்லப்போனால், இதில் முதல் பத்து இடம் வகிக்கும் நாடுகளில் ஒன்பது நாடுகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவைதான். இன்னொன்று அமெரிக்கா.
இந்திய அளவில் ஜோதிபாசு உள்ளிட்ட கம்யூனிஸ்டு தலைவர்கள் பலர் உடல்தானம் செய்துள்ளனர்.
பத்திரிகையாளர் ஞாநி, தனது உடலை தானம் செய்ய பதிவு செய்து இருந்தார். 2018ல் அவர் மறைந்ததும் அவரது உடல் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.அதற்கும் முன்பாக, தமிழ்நாட்டில் உடல் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் நடிகர் கமல்ஹாசன். அவர் உடலை தானம் செய்வதாக 2002-ம் ஆண்டில் ஆகஸ்டு 15-ந் தேதி சென்னை மருத்துவக் கல்லூரியில் பதிவு செய்தார்.
கடந்த 2017ல், திரைப்பட பத்திரிகையாளர் தேவராஜ், தனது உடலை தானம் செய்ய பதிவு செய்தார். இதை அறிந்த கமல்ஹாசன், அவரை குடும்பத்துடன் அழைத்துப் பாராட்டினார்.
அப்போது கமல், “தமிழ்நாட்டில் உடல்தானம் செய்த நபர்களில் பத்திரிகையாளர் தேவராஜ் 1560வது நபர் என்று வரிசை எண்ணை கூறினார். 7 கோடி பேர் வாழும் தமிழ்நாட்டில் உடல்தானம் செய்தவர்களின் எண்ணிக்கை இவ்வளவுதானா?” என்று ஆதங்கப்பட்டார் கமல்.
எப்படி உடல் தானம் செய்வது…?
இது குறித்து கீற்று இணையத்திலேயே தகவல் உள்ளது. அதைப் பார்ப்போம்.
இறந்த பிறகு உடல் தானம் செய்வதற்கு, 18 வயதுக்கு மேற்பட்ட எந்த ஒரு நபருக்கும் உரிமை உண்டு. சாதி, மதம், இனம் தடையில்லை.
உறுப்பு தானம் மற்றும் முழு உடல் தானம் ஆகிய இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. உறுப்பு தானம் என்பது விபத்தில் அல்லது அரிதான சந்தர்ப்பத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகள் பிறருக்கு அளிக்கப்படுவது.
உடல்தானம் என்பது, இறந்த பிறகு தானம் அளிக்கப்படுவது. ஏற்கெனவே நாம் சொன்னது போல, கண் விழிகளும், சில திசுக்களும் மட்டும் பிற நோயாளிகளுக்கு உதவும். தவிர, மருத்து மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு உடல் உதவும்.
உங்கள் விருப்பத்தைக் குறிப்பிட்டு உயில் எழுதி, அதற்கு சட்ட ரீதியான வாரிசு ஒருவரின் ஒப்புதல் கையெழுத்து பெற வேண்டும். பின்பு அருகில் உள்ள மருத்துவக் கல்லூரியின் உடற்கூறு இயல் துறையில் பதிவுசெய்ய வேண்டும். அந்த வாரிசு சட்டரீதியான வாரிசு தான் என்பதற்கு ‘நோட்டரி பப்ளிக்’ ஒருவரின் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். இறந்த ஆறு மணி நேரத்துக்குள் உடல்தான பதிவாளருக்கு செய்தி தெரிவிக்கப்பட வேண்டும். உடல் தானம் செய்வதற்கு வயது வரம்பு இல்லை. ஆனால் மரணம் இயற்கையானதாக இருக்க வேண்டும்
முக்கியமான விசயம்.
உடல் தானத்தை குடும்பத்தினரிடம் அவசியம் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால், ஒருவர் இறந்த பிறகு அவரது குடும்பத்தினர்தான் மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இந்த நிலையில்தான் நேற்று மறைந்த ஹேமாவின் கணவர் ரமேஷூம், இவர்களது மகள் பிரதிக்ஷாவும், “ஹேமலதா விருப்பப்படி அவரது உடல் நாளை காலை BGS மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்படும்” என்று அறிவித்து இருக்கிறார்கள்.

“மண்ணில் புதையவும்,
தீயில் கரியவும்,
சொர்கம் செல்ல உடலைப் போற்றிப் புழுக்கவிடுவதும்,
எத்தகை நியாயம்?
ஏதிதில் லாபம்?
எனக்குப் பின்னால்
எலும்பும் தோலும்
உறுப்புமெல்லாம்
எவருக்கேனும்
உயிர்தருமென்றால்,
அதுவே சித்தி,
அதுவே மோட்சம்
என்றே
நம்பிடும் சொர்கவாசி நான்!
மனிதத் தோல்
பதினைந்து கஜத்தில்
ஏழு ஜோடிச் செருப்புகள் தைத்தால்
அவை அத்தனையும்
என்னைச் சொர்கம் சேர்க்கும்
காணா இன்பம் தொடர்ந்து காண்போம்
கண்ணைப் பிறரும் காணக் கொடுத்தால்!
காற்றடைத்தவிப் பையின் இடத்தில் இன்னொரு உயிரை வாழவிட்டால்,
ஆணாய் பிறந்த சோகம் போக்கி, தாயாய் மாறத் தேர்ந்து விடலாம்
மண்ணில் புதையவும்,
தீயில் கரியவும்
சொர்கம் செல்ல
உடலைப் போற்றிப் புழுக்கவிடுவதும்,
எத்தகை நியாயம்?
ஏதிதில் லாபம்?
தானம் செய்வது தாய்மை நிகரே!
தகனம் செய்முன் தானம் செய்வீர்!
உமக்கில்லாததை தானம் செய்வீர்!”
# இருக்கும் போது மட்டுமல்ல.. இறந்த பிறகும் நமக்கு சமூகக் கடமை இருக்கிறது என்பதை உணரச் செய்து இருக்கிறார் ஹேமா.. நாமும் உடல் தானத்துக்கு பதிவோம்.
அரசுக்கும் ஒரு கடமை இருக்கிறது… உடல் தானம் பதிவு செய்வதோ, அதை நிறைவேற்றும் குடும்பத்துக்கு “நிதிக் கடமை” அளிக்க வேண்டும். மறைந்தவருக்கு அஞ்சலியும், குடும்பத்தினருக்கு ஆறுதலும் ஆள்வோர் சொல்ல வேண்டும்.
– டி.வி.சோமு