திரை விமர்சனம்: பீஸ்ட்

விஜய் படம் என்பது அவரது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை அளிக்கும். கோலமாவு கோகிலா, டாக்டர் என இரு டார்க் காமெடி படங்களை அளித்து கவனத்தை ஈர்த்த  நெல்சன் இயக்கும் படம் என்பதால், அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும் ஆளான படம் – பீஸ்ட்.

 ராஜஸ்தானின் ஜோத்பூரில் படம் துவங்குகிறது. பட்டென, ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்’  என்று ஒரு மலை கிராமத்தை காண்பிக்கறார்கள். அங்கு ஒரு குழந்தைக்கு பலூன் வாங்கித் தருகிறார் விஜய்.

அப்போதே தெரிந்துவிடுகிறது. பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் முக்கிய பயங்கரவாதிகளை துவம்சம் செய்யப்போகிறார் விஜய் என்பது.

ஆமாம்… அவர் ஒரு ரா உளவாளி.

இதற்கிடையே,  தலைமை அலுவலகத்தில் இருந்து, ‘உங்கள் ஆபரேசனை நடத்த வேண்டாம். சூழல் சரியில்லை’  என தகவல் வருகிறது.

விஜய்தான், முடிவெடுத்துவிட்டால் அப்புறம் தான் சொல்வதை தானே கேட்க மாட்டாரே.

ஒற்றை ஆளாய் போய், விதவிதமான நவீன துப்பக்கிகளை வைத்திருக்கும் பயங்கரவாதிகளை துவம்சம் செய்கிறார்.

அப்புறம் பாக் ஆக்கிரமிப்பு காஸ்மீரில் விஜய் நடத்திய ஆபரேசனில் எதிர்பாராமல் ஒரு குழந்தை இறந்துவிடுகிறது. அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, ரா உளவு நிறுவனத்தில் இருந்து விலகுகிறார் விஜய்.

சென்னையில் மால் ஒன்றை பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுகிறார்கள். அங்கே விஜய், ஹீரோயின், காமெடியன்கள் அனைவரும் சிக்கி விடுகிறார்கள்.

வழக்கம்போல, ராணுவ, உளவு உயரதிகாரிகள் விஜயிடம் உதவி கேட்க… இவர் மறுக்கிறார்.மாலில், உள்துறை அமைச்சரின் மனைவி மற்றும் மகளும் சக்கி விடுகிறார்கள். தாங்கள் சொல்லும் தீவிரவாதியை விடுவிக்காவிட்டால் அவர்கள் இருவரையும் கொன்றுவிடுவதாக பயங்கரவாதிகள் மிரட்டுகிறார்கள். அரசும் பயங்கரவாதிகயை விடுவிக்க சம்மதிக்கிறது.

இதனால் ஆத்திரமான விஜய், அமைச்சரின் மனைவி மற்றும் மகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். “சிறையில் இருக்கும் பயங்கரவாதியை விடுவித்தால் இந்த இருவரையும் கொன்று விடுவேன்” என எச்சரிக்கிறார்.

தவிர திடீரென ஹீரோவை ஒட்டி நிற்கும், படபடவென பேசும் கிறுக்கு ஹீரோயின், அசட்டு ஜோக் அடிக்கும் காமெடியன்கள், ஹீரோ மீது குறிபார்த்து ஒரு குண்டை கூட செலுத்தத் தெரியாத வில்லன்கள் என பல படங்களை நினைவு படுத்துகிறது படம்.

ஆனால் விஜய் வழக்கம்போல தனது ஸ்டைலில் நடித்திருக்கிறார்.   அதிரடி சண்டை,  அட்டகாச நடனம் என தூள் பறத்துகிறார். கிராபிகஸ் காட்சிகளும் ரசிக்க வைக்கன்றன. அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

யோகிபாபுவுக்கு அவ்வளவாக வாய்ப்பு இல்லை. விடிவி கணேஷ் பலல காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.

கவனத்தை ஈர்ப்பவர், அல்தாஃப் உசைன் எனும் கதாபாத்திரத்தில் வரும், இயக்குநர் செல்வராகவன்!   பயங்கரவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரியாக கச்சிதமாக செய்துள்ளார்.

மொத்தத்தில் விஜயை கொண்டாடுகிறவர்கள், கொண்டாடக்கூடிய படம். 

 

 

Related Posts