ஆர்யமாலா: திரைப்பட விமர்சனம்

இதுவரை சொல்லப்படாத ஒரு காதல் பிரச்சினையை சொல்லி இருக்கிறது ஆர்யமாலா திரைப்படம்.
அழகான கிராமம்…
பெற்றோர் மற்றும் ஒரு தங்கையுடன் கிராமத்தில் வசிக்கிறார், நாயகி ஆரியமலா. இந்த நிலையில், நாயகிக்கு ஒரு கனவு.. அதில் நாயகன் தோன்றுகிறார். அந்த கற்பனை நாயகனை மனதார காதலிக்கிறார் நாயகி.
அப்போது அந்த கிராமத்து திருவிழா நடக்கிறது. அதற்கு கூத்துகட்ட நாயகன் வருகிறார். நாயகி, கனவில் கண்ட அதே இளைஞன்.
இருவரும் பார்வையாலேயே காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் தயக்கத்தை உடைத்து தனது காதலை வெளிப்படுத்துகிறார் நாயகன். ஆனால் நாயகி மறுத்துவிடுகிறார்.
இன்னொரு பக்கம், நாயகியை கொலை செய்ய அவரது மாமாவே திட்டமிடுகிறார்.மாமாவின் கொலை முயற்சியில் இருந்து நாயகி தப்பித்தாரா, அவரது காதல் கைகூடியதா என்பதே கதை.
நாயகன் ஆர்.எஸ்.கார்த்தி, இயல்பாக நடித்து இருக்கிறார். நாயகியின் காதலை உணர்ந்து நெகிழ்வது, சொல்லத் தயங்கி.. பிறகு வெளிப்படையாகச் சொல்வது, காதலி மறுத்தவுடன் மனம் குமைவது என கவர்கிறார். குறிப்பாக கூத்துகட்டி ஆடும் காட்சிகளில் கூடுதலாக ரசிக்க வைக்கிறார்.
நாயகி மனிஷா ஜித்… குழந்தை நட்சத்திரமாக தமிழ்த் திரையுலகுக்கு பரிட்சயமானவர்தான். நாயகியாக வந்து கவர்கிறார். அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தன் பிரச்சினையை நினைத்து வருந்தும் காட்சிகளிலும், சாமி சிலை முன் ஆக்ரோஷமாக பேசும் காட்சியிலும் கவனம் ஈர்க்கிறார்.
நாயகியின் மாமாவாக வரும் மாரிமுத்து வில்லனாக மிரட்டுகிறார். கூத்துக்கலைஞராக வரும் டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர், நாயகியின் அம்மாவாக வரும் உஷா எலிசபெத், ஊர்ப்பெரியவராக வரும் தவசி உள்ளிட்டோரும் இயல்பான நடிப்பை அளித்து கவர்கின்றனர். .
கிராமத்துக் காட்சிகளையும், கூத்து நிகழ்வு மேடையையும் நிஜமாக பார்ப்பதுபோல் சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜெய்சங்கர் ராமலிங்கம். செல்வ நம்பியின் இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. பின்னணி இசையும் படத்துக்கு பலம்.
மிரட்டல் செல்வா, வீரா ஆகியோரின் சண்டைக் காட்சிகள் சிறப்பு. ஹரிஹரனின் படத்தொகுப்பு கச்சிதம்.
நிஜயமாகவே ஒரு கிராமத்துக்குச் சென்று வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது திரைப்படம். தவிர, நாயகன் நாயகி இடையேயான ஆத்மார்த்தமான காதலை சொன்ன விதத்திலும், நெகிழ்ச்சியான கிளைமாக்ஸிலும் ஈர்க்கிறது.
சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும், குறைந்த பட்ஜெட்டில் , கதையை நம்பி உருவாகி உள்ள திரைப்படம், ‘ஆர்யமாலா’. பார்த்து ரசிக்கலாம்.
வடலூர் ஜே. சுதா ராஜலட்சுமி தயாரிப்பில் ஜனா ஜாய் மூவீஸ் மற்றும் குழுவின் சார்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், அக். 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.