அந்த நாள்: திரைப்பட விமர்சனம்: மிரட்டல்
ஆர்யன் ஷாம், திரைப்பட இயக்குநர். தனது புதிய படத்தின் கதை டிஸ்கஷனு்க்காக உதவி இயக்குநர்கள் நான்குபேருடன், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பஞ்சமி பங்களாவுக்குச் செல்கிறார். இரவு நேரத்தில் அந்த இடத்தில் மர்மான சில சம்பவங்கள் நடக்க, அச்சத்தில் அங்கிருந்து அனைவரும் வெளியேற முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் அந்த இடத்தை விட்டு வெளியேற முடியாமல் போவதோடு, அவர்களை முகமூடி மனிதர் ஒருவர் கொடூர ஆயுதத்துடன் விரட்டுகிறார்.
அந்த முகமூடி நபர் யார்? அந்த பங்களாவில் நடக்கும் மர்மங்கள் என்ன?, அந்த வீட்டில் சிக்கிக்கொண்ட ஆர்யன் ஷாம் மற்றும் அவருடன் சென்றவர்கள் தப்பித்தார்களா? என்பதை அதிர வைக்கும் மர்மங்களோடு சொல்கிறது ‘அந்த நாள்’.
நாயகன் ஆர்யன் ஷாமுக்கு ஒரே கதாபாத்திரம் என்றாலும், இரண்டு குணாதிசயங்களை வெளிப்படுத்தும் வித்தியாசமான கேரக்டர். முடிந்தவரை அதை சிறப்பாக செய்ய முயற்சித்து இருக்கிறார். முதல் படம் என்கிற வைகையில் பரவாயில்லை. ஹீரோவுக்கு ஏற்ற முகம், உடல்வாகு உள்ளவர். அடுத்தடுத்து காதல், ஆக்சன் படங்களில் அமர்க்களப்படுத்தலாம்.
நாயகியாக நடித்திருக்கும் ஆத்யா பிரசாத், ஆர்யன் ஷாமின் உதவியாளர்களாக நடித்திருக்கும் லிமா பாபு, கிஷோர் ராஜ்குமார், ராஜ்குமார், இமான் அண்ணாச்சி ஆகியோர் பயப்படுதுவது, பதறி ஓடுவது என தங்களுக்கு அளிக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
என்.எஸ்.ராபர்ட் சற்குணத்தின் பின்னணி இசை, திகில் காட்சிகளின் அதிரடியை இன்னும் அதிகரிக்கிறது. சிறப்பு.
அதே போல சதிஷ் கதிர்வேலின் ஒளிப்பதிவு அருமை. குறிப்பாக, இரவு நேர காட்சிகளை திகிலூட்டும்படி படமாக்கி இருக்கிறார்.
ஜே.எஸ்.காஸ்ட்ரோவின் எடிட்டிங் கச்சிதம்.
நரபலியை மையமாக வைத்துக்கொண்டு நாயகன் ஆர்யன் ஷாம் மற்றும் இயக்குநர் வீவீ கதிரேசன் எழுதியிருக்கும் கதை மற்றும் திரைக்கதை சுவாரஸ்யமாக இருக்கிறது. அதே நேரம் காட்சிப்படுத்தியதில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
சில தடுமாற்றங்கள் இருந்தாலும், நாயகன் ஆர்யன் ஷாம் யார்என்ற எதிர்பாரத திருப்பம், நரபலியின் பின்னணி போன்றவை முழுமையான திகில் அனுபவத்தை அளிக்கிறது.
மொத்தத்தில், ‘அந்த நாள்’ பயந்து ரசிக்கலாம்.