அனலி: திரைவிமர்சனம்
சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, தினேஷ் தீனா இயக்கியுள்ள திரைப்படம் “அனலி”.
கடத்தல் மன்னன் லால் சேட்டா, கான் பாய் மற்றும் ரங்கராவ் ரெட்டி இவர்களிடம் தனது பத்து வயது குழந்தையுடன் சிக்கிக் கொள்கிறாள், ஜான்சி. அந்த கொடூரர்களை எப்படி அழிக்கிறாள் என்பதே ஒரே இரவில் நடக்கும் அதிரடி கதை.
முழுப் படத்தையும் தாங்கி நிற்கிறார் நாயகி, சிந்தியா லூர்டே. மகள் மீது காட்டும் பாசம், எதிரிகளிடம் காட்டும் அதிரடி என விஜயசாந்தி ஸ்டைலில் ஒரு ஹீரோயின்! சண்டைக் காட்சிகளில் தூள் பறத்துகிறார். இறுதியில், தனக்கான அங்கீகாரத்தை விட்டுக்கொடுத்து, அதற்கான காரணத்தைச் சொல்லும்போது நெகிழ வைக்கிறார்.
வில்லனாக வந்து மிரட்டுகிறார், சக்தி வாசு. கேலியும் கிண்டலுமாக பேசுவது, ஆக்ரோசத்தை வெளிப்படுத்துவது என ரசிக்க வைக்கிறார். இன்னொரு வில்லனாக வரும் கபீர் துஹான் சிங்கும் கவர்கிறார்.
இதர கதாபாத்திரங்களில் வரும் குமாரவேல், அபிஷேக் வினோத், ஜென்சன் திவாகர்,
சிவா (கிளி), மேத்யூ வர்கீஸ், வினோத் சாகர், குழந்தை நட்சத்திரம் ஷிமாலி உள்ளிட்டோரும் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
தாமுவின் கலை இயக்கம் தனிக்கவனம் பெறுகிறது. குறிப்பாக வில்லனின் குடோன்.
ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு கவர்கிறது. வில்லனின் வித்தியாசமான குடோன், கண்டெய்னர்கள் இருக்கும் இடம் ஆகியவை பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. அதே போல சண்டைக் காட்சிகளிலும் கேமரா அனாயாசமாக செயல்பட்டு இருக்கிறது.
தீபன் சக்கரவர்த்தியின் இசை படத்துக்கு பலம்.
சூப்பர் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் மிரட்டல்.
வில்லன்களின் கூடாரம், ஒரே இரவில் நடக்கும் கதை என சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் தினேஷ் தீனா. அதே நேரம், பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்திலும் ஜெயித்து இருக்கிறார்.
மொத்தத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங்: 3.3/5

