“ஆம்புலன்ஸ்ல அவனுங்க பொணம்!”: எடப்பாடிக்கு முன்பே எச்சரித்த சீமான்!

தனது கூட்டத்தை இடையூறு செய்வதற்காக காலி ஆம்புலன்ஸ் வாகனங்கள் அடிக்கடி வருகின்றன என ஆத்திரப்பட்டு இருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதோடு, “இனி அந்த ஓட்டுநரே வாகனத்தில் அனுப்பி வைக்கப்படுவார்” என கடுமையாக பேசி இருக்கிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
உயிர்காக்கும் ஆம்புலன்ஸ்களையும் துரதிருஷ்டவசமாக, அரசியல் விட்டுவைக்கவில்லை என்பதே உண்மை.
முன்பு இதே குற்றச்சாட்டை நடிகர் கமல் வைத்தார். அப்போது ஆட்சியில் இருந்தது அதிமுக.
அதுமட்டுமல்ல..
2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதே, “வாக்காளர்களுக்கு அளிக்க சில காட்சிகள் ஆம்புலன்ஸ் மூலம் பணம், அன்பளிப்பு பொருட்களைக் கடத்துகின்றன” என்ற பேச்சு எழுந்தது.
2016ம் ஆண்டு ச.ம. தேர்தலின்போது, “நோயாளிகள் இல்லாமல் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களை சோதனையிடுவோம்” என தேர்தல் சிறப்புப் பார்வையாளர் ஆனந்த் தெரிவித்தார்.
அதே போல மதுரை உள்ளிட்ட பல இடங்களில், ஆளில்லாமல் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சோதனையிடப்பட்டன.
பாஜகவின் தமிழிசை சவுந்திரராஜன், “பணம் கடத்துவதற்கு ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்படுவது வேதனை” என்றார் வேதனையுடன்.
தேர்தல் ஆணையமும், பாஜக தமிழிசையும் சொல்வதால், ஆம்புலன்ஸ் – கடத்தல் பொய் என நினைக்கவேண்டியது இல்லை.
அப்படி கடத்தப்பட்டு, பிடிபட்ட ஆம்புலன்ஸ்களும் உண்டு. அ.தி.மு.க.வின் அன்புநாதன் என்கிற பிரமுகர், இந்த விவகாரத்தில் விசாரிக்கப்பட்டார்.
2021 ச.ம. தேர்தலின் போது தேர்தல் ஆணையம், “காலி ஆம்புலன்ஸ் மட்டுமல்ல.. நோயாளியுடன் செல்லும் ஆம்புலன்ஸ்களும் சோதனை செய்யப்படும்” என்றது. அதே நேரம், “ஆம்புலன்ஸில் நோயாளியுடன் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும். மருத்துவம் உணவு தவிர வேறு பொருட்கள், மூட்டைகள் இருக்கக்கூடாது. சந்தேகம் ஏற்பட்டால், அந்த வாகனத்தில் ஒரு காவலர் ஏறி சோதனை இடுவார். ஆம்புலன்ஸ் நிற்க வேண்டியதில்லை.. அது மருத்துவமனை நோக்கி செல்லும்” என்றார்.
கடந்த (2024ம்) வருடம் நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும், “ஆம்புலன்ஸ் மூலமாக பணம் கடத்தப்படுகிறது” என்ற பேச்சு எழுந்தது.
அப்போது கடலூரில் கூட்டத்தில் பேசிய நாதக சீமான்”இங்கே நான் பேசி முடிக்கிறதுக்கு உள்ளே பத்து பன்னிரண்டு அவசர ஊர்தி போகுது. எல்லாம் பணம் கடத்தல்… ஒரு நாள் பணத்துக்குப் பதிலா அவனுங்க பொணத்தை ஏத்தி அனுப்பனும்” என்று பேசினார்.
சீமான் பேசியதால் அது பெரிய விசயம் ஆகவில்லை. தற்போது எடப்பாடி பழனிச்சாமி பேசியதால் சர்ச்சை ஆகிவிட்டது.
– டி.வி.சோமு