‘அமரன்’: சர்ச்சையை கிளப்பிய கமலின் காஷ்மீர் பேச்சும் விளக்கமும்!

‘அமரன்’: சர்ச்சையை கிளப்பிய கமலின் காஷ்மீர் பேச்சும் விளக்கமும்!

முகுந்த் வரதராஜன் என்ற இந்திய ராணுவ அதிகாரி, 2014ல் காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலில் கொல்லப்பட்டார். இந்த சம்பவமே, அமரன் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

வெள்ளையர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறிய 1947ல், காஷ்மீர் (பகுதியும்) தனி நாடாக விளங்கியது. அப்பகுதி மன்னர் தொடர்ந்து தனி நாடாகவே இருக்க விரும்பினார்.

பாகிஸ்தானில் இருந்து ஆயுதக்குழு காஷ்மீருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த, மன்னர் இந்திய உதவியை நாடினார். “இன்னொரு நாட்டுக்காக நாங்கள் போரிட முடியாது. எங்களுடன் இணையுங்கள்.. உங்களுக்காக வருகிறோம்…” என்றது இந்தியா. அவரும் ஒப்புக்கொண்டார்.

அதோடு, “இந்த ஒப்பந்தம் தற்காலிகமானதே. காஸ்மீர் பகுதி மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்களது விருப்பம் நிறைவேற இந்தியா ஒத்துழைக்கும்” என்றும் இந்தியா சொன்னது.

பாக் ஆதரவு படையை இந்தியா விரட்டியது. அதோடு பிரச்சினையை ஐ.நா.வுக்கு கொண்டு சென்றது. அந்தந்த படைகள் அங்கங்கே நிற்கட்டும் என்றது ஐ.நா.

அதன்படி, காஷ்மீரின் பகுதிகளை இந்திய – பாகிஸ்தான் ராணுவ வசம் வந்தன. அடுத்து தன் வசம் இருக்கும் காஷ்மீரில் இருந்து ஒரு பகுதியை சீனாவுக்கு அளித்தது பாகிஸ்தான். தவிர இந்திய வசம் இருக்கும் காஷ்மீரின் ஒரு பகுதியையும் சீனா கைப்பற்றியது.

“பாகிஸ்தான் வசம் இருக்கும் காஸ்மீர் பகுதிகளில் இருந்து அந்நாட்டு ராணுவம் வெளியேற வேண்டும். எங்கள் வசம் இருக்கும் காஸ்மீர் பகுதிகளில் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி மக்களின் விருப்பத்தை ஏற்கிறோம்” என்ற இந்தியா.

இரண்டும் இன்று வரை நடக்கவில்லை.

தனி நாடு கோரி போராட்டம் இன்றும் அங்கே தொடர்கிறது. இந்திய படைகள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக இந்திய படைகள் மீதான விமர்சனங்கும் தொடர்கின்றன.

2019ல் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகரும், ம.நீ.ம. கட்சி தலைவருமான கமல்ஹாசன், “காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்ற – இந்தியாவின் அந்தக்கால – உறுதிமொழியை நினைவுபடுத்திப் பேசினார்.

அவர், “காஷ்மீரில் ஏன் இந்திய அரசு பொதுவாக்கெடுப்பு நடத்த மறுக்கிறது? ஏன் அரசு பயப்படுகிறது? அப்படி வாக்கெடுப்பு நடந்தால் அவர்கள் முடிவு வேறு மாதிரி இருக்கும்.

ஆசாத் காஷ்மீர் பகுதியில், ஜிகாதிகளை ஹீரோவாக சித்தரிக்கின்றனர். அது முட்டாள்தனம். அது மாதிரியான ஒரு முட்டாள் தனத்தை தான் இந்திய அரசும் செய்கிறது.

இரு நாட்டு அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடத்தினாலே எந்த ராணுவ வீரரும் பலியாக மாட்டார்கள்” என்றார்.

“காஸ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி” என இந்தியா கூறி வரும் நிலையில், அங்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது பிரிவினை வாதம் என்றும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால் வாக்கெடுப்பு நடத்தினாலும் மக்கள் இந்தியாவுடன்தான் இருப்பார்கள் என்றுதான் கமல் பேசினார். ஆனாலும் அவர் பேசியது சர்ச்சையானது.

தவிர, பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதியை இங்கே, ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் என்ற அழைப்பார்கள். பாகிஸ்தானியர்கள்தானா ஆசாத் (சுதந்திர) காஷ்மீர் என கூறுவார்கள்.கமல் தனது பேச்சில், “ஆசாக் காஸ்மீர்” என குறிப்பிட்டதும் பூகம்பத்தை ஏற்படுத்தியது.

வட இந்தியாவில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி, இந்த விசயம் குறித்து சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்ப.. விவகாரம் அகில இந்திய அளவில் பற்றிக்கொண்டது.

இதையடுத்து மக்கள் நீதி மய்யம் சார்பில் மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில்,”கமலஹாசனின் கருத்து திரித்து கூறப்பட்டு இருக்கிறது. . ஒட்டுமொத்த காஷ்மீரும், இந்தியாவுடன் ஒன்றிணைந்த பகுதியே. துணை நிற்கும் சுய நலமின்றி நாட்டுக்காக போராடும் ராணுவ வீரர்களுக்கும், பாதுகாப்பு படைக்கும் எப்போதும் மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான இந்திய வீரர் முகுந்த வரதராஜன் வாழ்க்கை வரலாறாக  உருவாகி உள்ள அமரன் படத்தைத் தயாரித்தார் கமல். (படத்திலும் ஆசாத் காஸ்மீர் என்ற வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது.)

இதற்கிடையே அமரன் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி ஒன்றில் ஹாசனிடம் “அமரன் படத்தை தயாரிக்க ஏன் தேர்வு செய்தீர்கள்?” என்று கேட்கப்பட்டறது.

அதற்கு  கமல்ஹாசன், “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, குருதிப்புனல் படம் எல்லாம் புனை கதைகள். இது அது அல்ல. இது நிஜம். நமக்காக நிகழ்ந்த நிஜம். இந்த கதை ஏன் இப்படி போச்சு என்று கேட்கவே முடியாது

இந்த வீரருக்கு ( மேஜர் முகுந்தன்) நிகரான வீரம் வீட்டிலும் ( மேஜர் முகுந்தனின் மனைவி) இருக்க வேண்டும். அவரைப் பற்றிய கதையும் இது. இந்த கதையை நாங்கள் தேர்வு செய்தோம் என்று கூற முடியாது. இது நிகழ்ந்து விட்டது. நாங்கள் இதை கண்டெடுத்ததில் பெருமை கொள்கிறோம். இதில் எங்களுக்கு பங்கு என்னவென்றால் கடமையைச் செய்திருக்கிறோம்” என்று பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

– டி.வி.சோமு