ஆலன்: திரைப்பட விமர்சனம்
ஆர் சிவா இயக்கத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, விவேக் பிரசன்னா, அருவி மதன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம், ஆலன்.
இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் விந்தன் ஸ்டாலின். இசையமைத்திருக்கிறார் மனோஜ் கிருஷ்ணா.
3S பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்திருக்கிறது.சிறு வயதிலேயே, ஒரு விபத்தில் தனது குடும்பத்தை இழக்கிறார் தியாகு. இதனால் விரக்தியில்,காசிக்கு ஓடி விடுகிறார்.
அங்கு ஆன்மீக வாழ்க்கை வாழத் துவங்குகிறார் தியாகு. பல ஆண்டுகள் ஆகியும், சிறுவயதில் ஏற்பட்ட விபத்து அவரின் மனதிற்குள்ளேயே சுற்றி வருகிறது. இன்னொரு புறம் அவரது அசாத்திய எழுத்தாற்றல், அவரை ஆன்மிகத்தில் தொடர விடவில்லை.
இதை உணர்ந்த, தியாகுவின் குரு. ” நீ இனிமேல் ஆன்மீகத்தைத் தொடர வேண்டாம். இயல்பான வாழ்க்கை வாழ். உன் எழுத்துத் திறமையை முழுதாக வெளிப்படுத்து” என அறிவுரை கூறுகிறார்.
இதையடுத்து காசியில் இருந்து சென்னை வருகிறார் தியாகு. வழியில் நாயகி மதுராவை சந்திக்கிறார். அவருடன் நட்பு ஏற்படுகிறது, சென்னை வரும் இருவரும் நட்புடன் இருக்கிறார்கள். நாளடைவில் இது காதலாக கனிகிறது.
ஒருநாள், சமூகவிரோதிகளால் மதுரா கொல்லப்படுகிறார். இதனால், மீண்டும் விரக்திக்கு உள்ளான தியாகு, மறுபடி ஆன்மிக வாழ்க்கைக்குள் செல்கிறார்.
அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.
தியாகுவாக நடித்திருக்கிறார் வெற்றி.
வழக்கமாக, வித்தியாசமான த்ரில்லர் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க முயற்சிப்பார் வெற்றி. இந்த முறை தாடி, மீசை, சன்னியாசம் என ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார்.
மதுராவாக, சில காட்சிகளே வந்தாலும் அழகு தேவதையாக கவர்கிறார் ஜனனி தாமஸ். இன்னொரு நாயகியான அனு சித்தாரா அழகோடு, அற்புதமான நடிப்பாலும் கவர்கிறார்.
காசி, ராமேஸ்வரம், ரிஷிகேஷ் பல ஊர்களையும் மனதில் பதிய வைக்கிறது விந்தன் ஸ்டாலின் கேமரா. இசை, பரவாயில்லை ரகம்.
கதையில் கவனம் செலுத்திய இயக்குநர், திரைக்கதையில் ஏனோ மிஸ் செய்துவிட்டார்.