அகத்தியா: திரைப்பட விமர்சனம்

அமானுஷ்யம், வரலாறு, சித்த மருத்துவம் என சுவையான பொருட்களைக் கொண்டு கதை சமைத்திருக்கிறார் பா.விஜய். கலவை எப்படி இருந்தது என்பதுதான் கேள்வி.
திரைப்பட கலை இயக்குநராக முதல் படத்தில் பணி புரிய ஆரம்பிக்கிறார், இளைஞர் அகத்தியன். முதல் பட வாய்ப்பு என்பதால் சொந்தப் பணத்தையும் லட்சக்கணக்கில் இறக்குகிறார்.
திடுமென படப்பிடிப்பு நின்றுவிட… என்ன செய்வதென்று தவிக்கிறார்.
அவர்கள் உருவாக்கியது பேய் வாழும் அமானுஷ்ய செட். ஆகவே, அதை வைத்தே, ஸ்கேரி ஹவுஸ் ( பேய்வீடு) போல மாற்றி, பிஸினஸ் செய்யலாம் என்கிறார், நாயகி.
அந்த செட்டில், ஏற்கெனவே, பழங்கால பியானோ ஒன்று கிடக்கிறது. அதை வாசிக்கத் துவங்க, நிஜமாகவே பேய்கள வெளிவரத்துவங்குகின்றன.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.
நாயகன் ஜீவாவின் நடிப்புத் திறமைக்குத் தீனி போடும் காட்சிகள் ஏதுமில்லை. அதே நேரம் பாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை கச்சிதமாக கொடுத்து இருக்கிறார்.பிளாஷ்பேக் காட்சியில் சித்த மருத்துவராக வருகிறார் அர்ஜுன். அதுவும்கூட முழுமையாக உருவாக்கப்பட்ட கதாபாத்திரமாக அமையவில்லை. ஆனாலும் தனது கம்பீர நடிப்பால் கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்த முயல்கிறார் அர்ஜூன்.
வழக்கமான நாயகியாக வரும் ராஷி கண்ணா, வழக்கம்போல் வந்து போகிறார்.
இன்னொரு நாயகியாகன மாடில்டாவுக்கு கனமான கதாபாத்திரம்.. அதை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார்.
புதுச்சேரி ஆளுநர் டூப்ளேவாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எட்வர்ட் சோனென்ப்ளிக் மிரட்டுகிறார். கூடுதலாக ஷாரா, ரெடின் கிங்ஸ்லி, ராதாரவி, நிழல்கள் ரவி, யோகிபாபு, விடிவி கணேஷ், ரோகிணி, சார்லி என பட்டில் நீள்கிறது.
யுவன் சங்கர் ராஜா இசை, அமானுஷ்ய கதைக்கேற்ற அதிரடி பின்னணி இசையை அளித்து இருக்கிறது. அதே நேரம், காதல் பாடலான ’என் இனிய பொன்நிலாவே’ வை அழகாக ரீமிக்ஸில் அளித்து இருக்கிறார்கள். அதே போல பின்னணி இசையில் பீத்தோவனின் ’பர் எல்லிஸ்’ பிஜிஎம் பயன்படுத்தியது சிறப்பு.
நீண்டு கொண்டே செல்லும் பல காட்சிகளுக்கு கத்திரி போட்டு இருக்கலாம். ஆனாலும், தற்போதைய காலத்திலிருந்து முந்தைய காலத்துக்குச் செல்லும் திரைக்கதையைக் குழப்பமில்லாமல் கோத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ்.
கலை இயக்குநர் பி.சண்முகம்தான் அசத்தி இருக்கிறார். ஒரே பங்களா… அதில் ஒரே இடத்தில் பற்பல பொருட்கள் இருக்கின்றன… ஆனால் அவற்றை நிகழ்காலத்திலும் கடந்த காலத்திலும் வேறுபடுத்தி காட்டி ரசிக்க வைக்கிறார்.
தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவும் சிறப்பு. வரலாற்று காலத்தையும் தற்காலத்தையும் அழகாக ஒளியில் வேறுபடுத்திக் காண்பித்து ஈர்க்கிறார்.
ஆடை வடிவமைப்பாளர்கள் பல்லவி சிங், டினா ரொசாரியோ ஆகியோரின் பங்களிப்பையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். பாராட்டுகள்.
எல்லாம் இருந்தும் பலமில்லாத கதை… நேர்த்தி இல்லாத திரைக்கதை என தடுமாறி இருக்கிறார் இயக்குநர் பா.விஜய்.
புதுவை (பிரஞ்சு) ஆளுநரின் தங்கையை 48 நாட்களில் குணப்படுத்துவதாகச் சவால் விடுகிறார் சித்த மருத்துவர் அர்ஜூன். அடடா… இனி அதகளம்தான் என நாம் நினைத்தால்… “உன்னால முடியும்.. நீயா சாப்பிடு… நீயா நட..” என தன்னம்பிக்கை பேச்சாளராக மாறுகிறார் அந்த சித்தவைத்தியர்.
தவிர வாட்ஸ் அப் தகவல்கள் பலவற்றை நம்பி படமெடுத்து இருக்கிறார் பா.விஜய்.
தவிர புதுவை ஆளுநர் டூப்ளே, இங்கிருக்கும் சித்த மருத்துவத்தை தனது பிரான்ஸ் நாட்டுக்கு கடத்துவதாகச் சொல்லி இருக்கிறார்கள். அது உண்மையாகவும் இருக்கலாம்.இப்போது… அதாவது இந்த 2025ல்…
சித்த மருத்துவ பல்கலை துவங்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டும் ஆளுநர் அந்த மசோதாவைப் புறக்கணிக்கிறார்.
ஒன்றிய பாஜக அரசின் ஆயுஷ், “சித்த மருத்துவத்துக்கு முக்கியத்துவம் தேவையில்லை.. .” என்கிற ரீதியில் செயல்படுகிறது.
இதையெல்லாம் இயக்குநர் பா.விஜய் கண்டுகொள்ளவே இல்லை.
தவிர, சித்த மருத்துவத்துக்குத் தொடர்பே இல்லாத சமஸ்கிருத பாடல் வரிகள், மகாபாரத கதாபாத்திரங்கள் பெயர்கள் என ஏகத்துக்கு தடுமாறி இருக்கிறார்.
இடையில் என்ன நினைத்தாரோ, திராவிடம், பாரதிதாசன் என சொல்கிறார்.
இதையெல்லாம் சரி செய்து இருந்தால், அகஸ்தியா.. அவஸ்தியா என்று சொல்லாமல் இருந்திருக்கலாம்.
– டி.வி.சோமு