தமிழ்நாட்டுக்கு இல்லை…  6 மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதி!

தமிழ்நாட்டை தவிர்த்துவிட்டு மற்ற  ஆறு  மாநிலங்களுக்கு வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒதுக்கி இருக்கிறது. 

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம், வடகிழக்கு பருவமழையின் போது பெரும் வெள்ளம் – சேதம் ஏற்பட்டது.

 இதையடுத்து சேதங்களை பார்வையிட ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு குழு ஒன்றை அனுப்பி வைத்தது.  அப்போது தமிழ்நாடு அரசு,  வெள்ள நிவாரண நிதியாக 2,629 ரூபாய் கோரியது.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு,  கடந்த மாதம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு   சந்தித்தார். அதில் தமிழ்நாட்டிற்கு  வெள்ள நிவாரணமாக ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

ஆனாலும் இதுவரை ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு  நிதியும் ஒதுக்கவில்லை.

சமீபத்தில்கூட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி அளிக்கும்படி வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால் ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் மழை வெள்ள நிவாரணத்திற்கு 6 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து  வெளியாகியுள்ள அறிவிப்பில்,   ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பிற்கான நிவாரண பணிகளுக்கு 6 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண தொகையில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 3,063.21 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதில் ட்வுதே புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு 1,133.35 கோடி ரூபாய்,  யாஸ் புயல் பாதிப்பிற்கு உள்ளான மேற்கு வங்கத்திற்கு 586.59 கோடி ரூபாய், தென்மேற்கு பருவ மழையில் பாதிப்பு அடைந்த அசாம் மாநிலத்திற்கு 51.53 கோடி ரூபாய், கர்நாடகா மாநிலத்திற்கு 504.06 கோடி ரூபாய், மத்திய பிரதேசத்திற்கு 600.50 கோடி ரூபாய், உத்தராகண்டிற்கு 187.18 கோடி ரூபாய்  ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டை பற்றி இந்த அறிவிப்பில் எந்த ஒரு விபரமும் இடம்பெறவில்லை.

கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காதது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Related Posts