‘அப்பா குட்டி’: “ரிலீஸுக்கு முன்பே, மொழி கடந்து வெற்றி!”: படக்குழு உற்சாக நெகிழ்ச்சி!
‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும், தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
கலை இயக்குநர் ராஜா
“இந்தப் படத்தைத் திட்டமிடும்போதே இயக்குநர் சார் பல சுவாரஸ்யமான விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார். அதற்கேற்ப படத்தில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டோம். என்னுடைய பணியிலும் மூன்று, நான்கு விதமான மாற்றங்களைச் செய்திருக்கிறோம். குறிப்பாக, இரண்டு காலகட்டங்களில் காட்சிகளின் தோற்றம், வண்ணங்கள் மற்றும் அதற்கான அம்சங்களில் நிறைய புதுமைகளைச் சேர்த்திருக்கிறோம். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் மிக்க நன்றி.”
ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரன்
“இந்தப் படத்தின் விஷுவல் டிபார்ட்மென்ட் எனக்கு அளித்ததற்கு நன்றி. எடிட்டர், மியூசிக் டைரக்டர் என அனைவருடனும் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. இயக்குநர் எனக்கு மிகவும் இனிமையான மனிதராகத் தெரிந்தார். ஒரு அழகான, மனதுக்கு நெருக்கமான கதையை அவர் உருவாக்கியிருக்கிறார். எங்களுக்குள் இருந்த நல்ல புரிதலும், ஒத்துழைப்பும் பணியை மிகவும் சுவாரஸ்யமாக்கியது. இந்தக் கதையின் முக்கியமான பகுதி ஊட்டியில் நடைபெறுகிறது. அந்த இடத்தை மனதில் வைத்து நாங்கள் திட்டமிட்ட விஷுவல்களைத் திரையில் பார்க்கும்போது நிச்சயம் ரசிப்பீர்கள்.”
பாடலாசிரியர் ஏகாதசி
“இந்தப் படத்தில் அப்பாவைப் பற்றியும், மகளைப் பற்றியும் இரண்டு உணர்வுபூர்வமான பாடல்களை எழுதியிருக்கிறேன். குறிப்பாக, ‘திருவிழா தேர்த்திண்ணையில் உறங்கும்… அது உறக்கத்தில்கூட என் பேரை உளறும்’ என்ற வரிகள் பலரையும் நெகிழ வைத்திருக்கின்றன. சிறு வயதிலேயே அப்பா வேறொரு திருமணம் செய்துகொண்டதால், அப்பாவின் அன்பையும் அரவணைப்பையும் நான் அனுபவித்ததில்லை. அப்பா என்ற உறவு எனக்கு எப்படி இருக்கும் என்பதுகூடத் தெரியாது. ஆனால், ஒரு எழுத்தாளராக இந்தப் படத்தின் அப்பா கதாபாத்திரத்தின் வலியை உணர்ந்து எழுத முடிந்தது.”
பாடலாசிரியர் அருண் பாரதி
“‘பிச்சைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘நூறு சாமிகள் பார்த்து’ பாடலைப் போல, இந்தப் படத்திலும் அப்பா – மகள் உறவைப் பேசும் பாடல்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவை. ஏகாதசி எழுதியுள்ள அப்பாவைப் பற்றிய பாடல் என்னை மிகவும் நெகிழ வைத்தது. நான் பிளஸ் டூ படிக்கும்போது மண் சரிந்து விழுந்த விபத்தில் என் அப்பா உயிரிழந்தார். அப்பா – மகள் உறவு எவ்வளவு ஆழமானது என்பதை இந்தப் படத்தின் டிரைலரிலேயே உணர முடிகிறது.”
நடிகை ஹரிப்ரியா
“‘அப்பா குட்டி’ திரைப்படம் என்னுடைய முதல் படம். என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய விஜய் ஆண்டனி சாருக்கும், அழகான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் மு. மாறன் சாருக்கும் மனமார்ந்த நன்றி. அனைவரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் படத்தைப் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.”
நடிகை ஹரிதா
“விஜய் ஆண்டனி சார் மிகவும் அன்பான மனிதர். தயாரிப்பாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் எனப் பல பொறுப்புகளில் இருக்கும் அவர், கலைஞர்கள் அனைவரிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்வது மிகவும் சிறப்பானது. இந்தப் படத்தில் தந்தையின் அன்பு, குழந்தைப் பருவ உணர்வுகள் எனப் பல ஆழமான உணர்வுகளையும் உறவுகளையும் அழகாகப் பேசியிருக்கிறோம்.”
நடிகர் மூணாறு ரமேஷ்
“இயக்குநர் மு. மாறன் சார் அனைவரின் மனதையும் தொடும் வகையில் ஆழமான உணர்வுகளைக் கொண்ட கதையை உருவாக்கியிருக்கிறார். விஜய் ஆண்டனி சார் எப்போதுமே வித்தியாசமான கதைகளையும் முயற்சிகளையும் தேர்ந்தெடுப்பவர். இந்தப் படத்தின் தலைப்பு முதல் பத்திரிகையாளர் சந்திப்பின் மேடை அமைப்பு வரை அனைத்திலும் அவரது தனித்துவம் தெரிகிறது.”
நடிகை லிஸ்ஸி ஆண்டனி
“அம்மாவைப் பற்றிப் பல பாடல்கள் வந்திருக்கின்றன. ஆனால் அப்பாவுக்காகவும் ஒரு பாடல் இருக்க வேண்டும் என்று நான் நினைத்திருக்கிறேன். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அப்பாவைப் பற்றிய பாடல் என்னை மிகவும் நெகிழ வைத்தது. நானும் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலாகக் காத்திருக்கிறேன்.”
நடிகை ஹரிப்ரியா விஸ்வநாதன்
“இயக்குநர் மு. மாறன் சாருடன் எனக்கு இது இரண்டாவது படம். இதில் எனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பல்வேறு பரிமாணங்கள் இருப்பதால் நடிக்க மிகவும் ஆர்வமாக இருந்தேன். ப்ரீத்தி அஸ்ராணி மிகவும் அழகாகத் தமிழ் பேசுவார் என்பது எனக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.”
விநியோகஸ்தர் ஃபைவ் ஸ்டார் செந்தில்
“அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான அழகான பாசத்தை இயக்குநர் மு. மாறன் மிகவும் உணர்வுபூர்வமாகப் படமாக்கியிருக்கிறார். விஜய் ஆண்டனி சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் அப்பா குட்டியாக நடித்த சிறுமியும் தனது கதாபாத்திரத்தை அருமையாகச் செய்திருக்கிறார்.”

திரைப்படத்தின் இயக்குநர் மு. மாறன்
“‘அப்பா குட்டி’ என்னுடைய நான்காவது படம். இதற்கு முன்பு நான் இயக்கிய மூன்று படங்களும் கிரைம் த்ரில்லர் ஜானரில் அமைந்திருந்தன. தொடர்ந்து அதே ஜானரில் ஏன் படங்கள் இயக்குகிறீர்கள் என்று பலரும் கேட்டதால், இந்த முறை வித்தியாசமான கதைக்களத்தில் முயற்சி செய்திருக்கிறேன். விஜய் ஆண்டனி சாரைச் சந்தித்து கதையின் முதல் பாதியைச் சொன்னதுமே இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். இரண்டாம் பாதியைக் கேட்டதும் உடனடியாகப் படத்தைத் தொடங்கலாம் என்றார். நல்ல கதைகளுக்கு எப்போதும் அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கு இந்தப் படம் ஓர் உதாரணம்.”
இயக்குநர் மந்திரமூர்த்தி
“விஜய் ஆண்டனி சாரைப் பற்றி நிறைய பேச வேண்டும். அவருடன் கடந்த 15 ஆண்டுகளாகப் பழகி வருகிறேன். கடின உழைப்பாளியான அவர், கொடுத்த வாக்கைக் காப்பாற்றக்கூடிய மனிதர். படத்தின் கதாநாயகி ப்ரீத்தி அஸ்ராணி தமிழ் சினிமாவில் என் அறிமுகத்தில் எனக்குப் பெருமை தரக்கூடிய ஒரு கலைஞர்.”

பேபி லிதன்யா
“‘அப்பா குட்டி’ திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். இந்தப் படத்தில் அனைவருடனும் இணைந்து பயணித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. விஜய் ஆண்டனி அங்கிளும், ப்ரீத்தி அக்காவும் படப்பிடிப்பில் மிகவும் ஜாலியாக இருப்பார்கள். அதனால் நடிப்பதும் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.!”
நடிகர் ஜென்சன் திவாகர்
“‘அப்பா குட்டி’ திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். இயக்குநர் மு. மாறன் சார் கொடுத்த ஸ்கிரிப்டைப் படிக்கும்போது முதல் 15 பக்கங்களிலேயே கதை என்னை ஈர்த்துவிட்டது. கிரைம் த்ரில்லராகத் தொடங்கும் கதை, தொடர்ந்து உணர்வுபூர்வமான அனுபவமாக மாறி, முதல் பாதி முடியும் வரை விறுவிறுப்பைக் குறை க்கவில்லை.”
தயாரிப்பாளர் தனஞ்செயன்
“இயக்குநர் மு. மாறன் கிரைம் த்ரில்லர் படங்களை இயக்குவதில் வல்லவர் என்றாலும், இந்த முறை ஒரு குடும்பப் பாசப் பிணைப்புள்ள அழகான கதையைத் தேர்ந்தெடுத்து மிகச் சிறப்பாக இயக்கியுள்ளார்.
விஜய் ஆண்டனி சார் தனது படத்தின் எடிட்டிங் முடிந்தவுடன் என்னை அழைத்து, தனிப்பட்ட முறையில் படத்தைப் பார்த்து கருத்துச் சொல்லச் சொல்வார். அப்படித்தான் நானும் என் மனைவியும் இந்தப் படத்தைப் பார்த்தோம். படம் முடிந்தபோது என் கண்களில் கண்ணீர் வந்தது. என் மனைவியும் அழுதுவிட்டார்.
இந்தப் படத்தைத் தமிழ் தெரியாத ஒரு சர்வதேச ஓடிடி நிறுவனப் பிரதிநிதிகளுக்குத் திரையிட்டபோது, அவர்கள் மொழி புரியாமலேயே கதையுடன் உணர்வுபூர்வமாகப் பயணித்தனர். இடைவேளையின்போது கூட படத்தை நிறுத்த வேண்டாம், தொடர்ந்து பார்க்க விரும்புகிறோம் என்று தெரிவித்தனர். படம் முடிந்ததும் நெகிழ்ச்சியுடன் பாராட்டியதோடு, உடனடியாகப் படத்தை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையையும் தொடங்கினர்.
பின்னர் Zee தொலைக்காட்சி நிறுவனமும் படத்தின் சாட்டிலைட் உரிமையைக் கைப்பற்றியது. விநியோகஸ்தர் ஃபைவ் ஸ்டார் செந்தில் தனது குடும்பத்துடன் படத்தைப் பார்த்துவிட்டு, ‘இந்தப் படம் எனக்குத்தான் வேண்டும்’ என்று உடனடியாக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றினார்.
படம் வெளியாகும் முன்பே கிடைத்த இந்த அங்கீகாரம், அதன் உள்ளடக்கத்திற்குக் கிடைத்த மரியாதையாக நான் பார்க்கிறேன்..”

நடிகர் விஜய் ஆண்டனி
“இந்தப் படத்தின் கதையை இயக்குநர் மு. மாறன் என்னிடம் சொன்னபோது, இதன் மையக்கரு மற்றும் உணர்வுகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாம் வழக்கமாகச் செய்யும் படங்களை விட இது முற்றிலும் மாறுபட்ட, குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு அழகான உணர்வுபூர்வமான கதையாக இருக்கும். குறிப்பாக, அப்பா – மகள் இடையேயான பாசப் பிணைப்பு திரையில் அனைவரையும் கவரும் வகையில் உருவாகியிருக்கிறது. படக்குழுவினர் அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்திற்கு மக்கள் அனைவரும் தங்களது ஆதரவைத் தர வேண்டும்.”

