‘அரிகொம்பன்’: முருகனுக்கு ஐராவதம் கிடைத்த செந்தூரில் இயக்குநர் மிதுன் மேக்ஸ்வரன் வழிபாடு!
இயற்கை, மனிதன் மற்றும் வனவிலங்குகளுக்கு இடையிலான உணர்ச்சிப்பூர்வமான போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது ‘அரிகொம்பன்’ திரைப்படம்.
2023ம் ஆண்டு நாடு முழுதும் அடிபட்ட பெயர், அரிகொம்பன். கேரளாவின் பெரியாறு புலிகள் காப்பக காட்டுப் பகுதியில் இருந்து ஒரு யானை மக்கள் குடியிருப்புக்குள் வலம் வர ஆரம்பித்தது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள சினக்கன்னல் மற்றும் சாந்தன்பாறை பகுதிகளில் ரேஷன் கடைகள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தி அரிசி உண்டு வந்தது.
மக்கள் அச்சமடைந்தனர். 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கும்கி யானைகள் உதவியுடன் கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தி அரிகொம்பனைப் பிடித்தது. பிறகு, அரிகொம்பனுக்கு ரேடியோ காலர் பொருத்திமீண்டும் பெரியாறு புலிகள் காப்பகத்திற்குள் விடுவித்தனர்.
இந்த சம்பவங்களை மையமாக வைத்து உருவாகி உள்ள அரிகொம்பன் திரைப்படம், வரும் டிசம்பர் 11-ஆம் தேதி உலகம் முழுவதிலும் வெளியாகவுள்ளது.
மிதுன் மகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், சினிமா ரசிகர்களுக்கு ஒரு முற்றிலும் புதிய, சிலிர்ப்பான திரையனுபவத்தைக் கொடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படம் வெற்றியடைய வேண்டி, அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு இயக்குநர் மிதுன் மகேஸ்வரன் நேரில் சென்று மனமுருகிச் சிறப்புத் தரிசனம் மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டார்.
அரிகொம்பன் யானையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படத்தின் வெற்றிக்காக, திருச்செந்தூர் முருகனை வழிபட்டது மிகப் பொருத்தமாகும். காரணம், முருகனுக்கும் யானைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
வள்ளி தேவியை மணக்க முருகன் முயன்றபோது, அவர் அஞ்சும் வகையில் தனது அண்ணன் கணபதியைக் கோரினார். விநாயகர் மதம் கொண்ட யானை உருவெடுத்து வள்ளியை நோக்கி வர, அஞ்சிய வள்ளி முருகனைத் தழுவிக்கொண்டார். இதன் மூலம் இருவருக்கும் திருமணம் நிறைவேறியது.
சூரசம்ஹாரத்திற்குப் பின் இந்திரன் தன் மகளான தெய்வயானையை முருகனுக்குத் திருமணம் செய்து தந்தார். அப்போது இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானையை முருகனுக்குப் பரிசாக அளித்தார்.
சங்க இலக்கியங்களில் முருகனின் வாகனமாக யானை சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது. திருமுருகாற்றுப்படையில் “பிணிமுகம்” என்ற பெயரில் யானை வாகனம் விவரிக்கப்படுகிறது.
அதனால்தான், முருகன் கோயில்களில் நாள்தோறும் காலையில் யானைக்கும் பூஜை (கஜபூஜை) செய்வது வழக்கம். யானையை வழிபடுவது வழக்கம். திருச்செந்தூர், பழநி, திருப்பரங்குன்றம் போன்ற அறுபடை வீடுகளின் பெருவிழாக்களில், முருகன் உலா வரும் திருத்தேருக்கு முன்னதாகவும், தங்க ரத ஊர்வலத்தின் போதும் கோயில் யானைகள் கம்பீரமாக வீதி உலா வரும். ரம்மோற்சவ விழாக்களில் முருகன் கஜவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திருச்செந்தூர் முருகனை வழிபட்ட பிறகு இயக்குநர் மிதுன் மகேஸ்வரன், முருகப்பெருமானின் அருள் நிறைந்த திருச்செந்தூர் மண்ணில் கால் பதித்துத் தரிசனம் செய்தது பேரமைதியையும், அளப்பரிய நம்பிக்கையையும் தந்துள்ளது. டிசம்பர் 11 முதல் திரையரங்குகளில் ‘அரிகொம்பன்’ வெளியாகிறது. அனைரும் ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

