பாடலாசிரியர் ப்ரியன் நடிக்கும் ‘வெகுளி’: இந்தியாவை உலுக்கிய கொடூர சம்வம்.. திரையில்!
கின்னஸ் சாதனை படைத்துத் திரையுலகையே வியப்பில் ஆழ்த்திய ‘அகடம்’ படத்தின் இயக்குநர் இசாக், ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு புதுமையான படைப்போடு களமிறங்குகிறார். ஐந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களை எழுதி ரசிகர்களைக் கவர்ந்த பாடலாசிரியர் பிரியன் நாயகனாக அவதாரம் எடுக்கும் ‘வெகுளி’ திரைப்படம் வரும் நவம்பர் இருபதாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியாவையே உலுக்கிய நிஜமான கொடூரச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, பார்வையாளர்களின் எதிர்பார்ப்பையெல்லாம் சுக்குநூறாக்கும் த்ரில்லர் பாணியில் இப்படத்தின் திரைக்கதை பிண்ணப்பட்டுள்ளது.
‘அரணம்’ படத்தைத் தயாரித்த தமிழ்த் திரைக்கூடம் நிறுவனத்துடன் இணைந்து விஜயா சரவணன் வழங்கும் வேதா பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளது. திவ்யா சந்திரன், பூவையார், டேனி, இமான் அண்ணாச்சி, ஈரோடு சரவணன், சேரன்ராஜ் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் அணிவகுத்துள்ளது. குறிப்பாக ‘பாய்ஸ்’ மணிகண்டன் முதன்முறையாக மிரட்டலான வில்லனாக உருவெடுத்துள்ளதும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாப்ளின் பாலு ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் திரும்புவதும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
நாகார்ஜுனின் கேமரா கோணங்களும், இலங்கையின் தேசிய விருது பெற்ற ஷமீலின் பின்னணி இசையும் தேவராஜின் படத்தொகுப்பும் இப்படத்திற்குப் பெரிய பலமாக அமைந்துள்ளன. தணிக்கைக் குழுவினரின் பலத்த பாராட்டுகளோடு, வெறும் பதிமூன்று நொடிகள் மட்டுமே வெட்டப்பட்டு ‘A’ சான்றிதழ் பெற்றுள்ள ‘வெகுளி’, ஏற்கனவே டீசர் மற்றும் பாடல்கள் மூலம் இணையத்தைக் கலக்கி வருகிறது. நவம்பர் இருபதாம் தேதி வெள்ளித்திரையில் அரங்கேறும் இந்தத் த்ரில்லர் விருந்து, நிச்சயமாகத் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

