சீன்: விமர்சனம்: சீன் போடுதா, மிரட்டுதா?

சீன்: விமர்சனம்: சீன் போடுதா, மிரட்டுதா?

போலீஸ் பணியிலிருந்து விலக வேண்டும் என ஐந்து முறை ராஜினாமா கடிதம் கொடுத்தும் வெளியேற முடியாமல் தவிக்கிறார் டி.எஸ்.பி இன்பராஜ் (சூர்யா). அவரது விசித்திரமான விசாரணை முறைகளும், முரட்டுத்தனமான சுபாவமும் மேல் அதிகாரிகளுக்குச் சலிப்பூட்டினாலும், வழக்குளை முடிப்பதில் அவரிடம் இருக்கும் கூர்மையான புலனாய்வுத் திறனை இழக்க விரும்பாத குற்றப்பிரிவுத் தலைவர் ஸ்டீபன் (லால்), அவரது ராஜினாமாவை ஏற்க மறுத்து வருகிறார்.

இந்நிலையில், ஏற்கெனவே இன்பராஜ் புலனாய்வு செய்து முடித்துவைத்த ஒரு பழைய தொடர் கொலை வழக்கை நினைவூட்டும் வகையில், அதே பாணியில் நகரத்தில் அடுத்தடுத்து மீண்டும் கொலைகள் நடக்கின்றன. எந்தவொரு தடயமும் ஆவணமும் சிக்காதபடி மிகவும் துல்லியமாகவும், பதற்றமே இல்லாமல் கூலாகவும் திட்டம் போட்டு இந்தக் கொலைகளைச் செய்கிறார் புரொஃபஷனல் சீரியல் கில்லரான ஈஸ்வரன் (நஸ்லென்).

வழக்கின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளும் இன்பராஜ், காவல்துறையின் அதிகாரப்பூர்வ உதவிகளை எதிர்பார்க்காமல், தனக்கென ஒரு கோளாறான டீமைச் சேர்த்துக்கொண்டு தனியாகக் களமிறங்குகிறார். இன்பராஜ் ஏன் காவல்துறையை விட்டு விலகத் துடிக்கிறார், காவல்துறையின் தயவின்றி அந்தச் சைக்கோ வில்லனை பிடித்தாரா என்பதே மீதிக்கதை.

நடிப்பு:

சூர்யா

வழக்கமான மாஸ் போலீஸ் நாயக பிம்பங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம். ஐந்து முறை ராஜினாமா கடிதம் கொடுத்தும் பணியில் தொடர வேண்டிய கட்டாயம், விசித்திரமான விசாரணை முறைகள், எதிலும் ஒரு சலிப்புத் தன்மை மற்றும் கடுமையான சிடுசிடுப்பு என மனித இயல்புடன் கூடிய பலவீனங்களோடு இன்பராஜ் படைக்கப்பட்டுள்ளார்.

நாயக பிம்பத்தை ஓரமாகத் தள்ளிவிட்டு, கதாபாத்திரத்தின் முழுமையான ஆன்மாவை உணர்ந்து நடித்திருக்கிறார் சூர்யா. அவரது உடல்மொழி, முகபாவனைகள் மற்றும் ஏளனமான வசன உச்சரிப்புகள் இன்பராஜின் தனித்துவத்திற்குச் செம கலர் சேர்த்துள்ளன. குறிப்பாக, தனது பலவீனங்களை எந்தவிதத் தயக்கமும் இன்றி திரையில் வெளிப்படுத்திய விதம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

நஸ்லென்

எந்தவிதப் பதற்றமும் இல்லாமல், சாக்லேட் சாப்பிட்டுக் கொண்டே சாதாரணமாகக் கொலைகளைச் செய்யும் ஒரு ‘புரொஃபஷனல் சீரியல் கில்லர்’. திட்டம் நிறைவேறியதும் ஒரு குழந்தையைப் போலத் துள்ளிக் குதிப்பதும், அடுத்த கணமே கொடூரமான திட்டங்களைத் தீட்டுவதுமாக முற்றிலும் மாறுபட்ட பரிமாணங்களைக் கொண்ட சைக்கோ வில்லன் கதாபாத்திரம்.

 இன்பராஜின் தீவிரத்திற்குப் போட்டியாக ஈஸ்வரனின் கூலான வில்லத்தனம் படத்தின் பலம். கதாபாத்திரத்தின் இருவேறு முகங்களை (குழந்தை போன்ற உற்சாகம் மற்றும் கொடூர மனம்) நஸ்லென் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி மிரட்டியுள்ளார்.

நஸ்ரியா

பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்குத் திரும்பியிருக்கும் நஸ்ரியா, தனது வழக்கமான துள்ளலான எனர்ஜியைத் துளியும் குறைக்காமல் மாயா கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். பார்வையாளர்களை எளிதில் ஈர்க்கும் இயல்பான பாடி லாங்குவேஜ் இவருடைய மிகப்பெரிய பலம்.

 சிடுசிடுப்பும் விசித்திரக் குணங்களும் கொண்ட டி.எஸ்.பி இன்பராஜாக (சூர்யா) வரும் கதாபாத்திரத்திற்கும், கலகலப்பான மாயாவாக வரும் நஸ்ரியாவுக்கும் இடையேயான ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி படத்திற்கு மிகச்சிறந்த கமர்ஷியல் மற்றும் எமோஷனல் பலத்தைச் சேர்த்துள்ளது. தீவிரமான கிரைம் த்ரில்லர் கதையில் நஸ்ரியாவின் காட்சிகள் பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல ரெப்ரெஷ்மென்ட்டைக் கொடுக்கின்றன.

துணை நடிகர்கள்:

காவல்துறை குற்றப்பிரிவு லைவர்ஸ்டீபனாக வரும் லால், வழக்கம் போல் இயல்பாக நடித்து இருக்கிறார். வழக்கம்போல் மலையாளம் கலந்து “ஃக்போ ஃக்போ” என தமிழ்(!) பேசுகிறார். தனக்கு கீழ் பணியாற்றும் இன்பராஜின் (சூர்யா) திட்டுக்களை சிரிப்புடன் ஏற்பது,  அவ்வப்போது டென்சன் ஆவது என சிறப்பாக நடித்து உள்ளார்.   நாயகனின் தந்தையாக  – மறதி மன்னனாக வந்து ஜாலியாக நடித்து உற்காம் அளிக்கிறார் ஆன்தராஜ்.

அதே போல ராஜ்ப்ரியன், சுரேஸ் மதியழகன் உள்ளிட்ட அனைவரும் பாத்திரம் அறிந்து நடித்து இருக்கிறார்கள்.இசை: வழக்கமான மாஸ் மீட்டருக்குள் சிக்கிக்கொள்ளாமல், கதாபாத்திரங்களின் மனநிலைக்கும் காட்சிகளின் இயல்புக்கும் ஏற்ப இசையமைத்துள்ளார் சுஷின் ஷியாம். நகைச்சுவைக்கு இடமளித்தபடியே சஸ்பென்ஸை தக்கவைப்பதில் பின்னணி இசைக்கு முக்கியப் பங்குண்டு. பாடல்களில் ‘ஏரோபிளேன் போல’ பாடல் உடனடியாக மனதில் ஒட்டிக்கொள்கிறது.

ஒளிப்பதிவு: வினீத் அகஸ்டியனின் கேமரா கோணங்கள், விசாரணைக் காட்சிகளின் மர்மத்தையும் இன்பராஜ் – ஈஸ்வரன் மோதல்களின் பதற்றத்தையும் நேர்த்தியாகக் கடத்துகின்றன.

எடிட்டிங்: அஜ்மல் சாபுவின் ஸ்டைலிஷான மேட்ச் கட்களும் டிரான்சிஷன்களும் கவனத்தைத் தக்கவைக்கின்றன; என்றாலும் சில இடங்களில் கத்திரியை இன்னும் இறுக்கமாகப் பிடித்திருக்கலாம்.

இயக்கம்: ஜித்து மாதவனின் டிரேட்மார்க் அம்சங்களான தனித்துவமான கதாபாத்திரங்கள், டார்க் ஹ்யூமர், எதிர்பாராத திருப்பங்கள் இப்படத்திலும் முழுமையாக வெளிப்பட்டுள்ளன.

ப்ளஸ் &மைனஸ் :

+

டார்க் ஹ்யூமர் கலந்த சுவாரஸ்யமான திரைக்கதை.

சூர்யா மற்றும் நஸ்லெனின் மிரட்டலான நடிப்பு.

சுஷின் ஷியாமின் பின்னணி இசையும், வினீத் அகஸ்டியனின் நேர்த்தியான ஒளிப்பதிவும்.

–

கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி அவர்களின் குணாதிசயங்களை நிறுவுவதற்கே அதிக நேரம் எடுப்பதால் திரைக்கதை ஆங்காங்கே தொய்வடைகிறது.

பைனல் கமெண்ட்  

சீரியஸான தொடர் கொலைக் கதைக்குள் நகைச்சுவையை இயல்பாகக் கலந்து, படத்தை ஜாலியாகவும் விறுவிறுப்பாகவும் நகர்த்தியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. லாஜிக் மீறல்களைத் தாண்டி ஜாலியான சினிமா அனுபவத்தைத் தரும் ஒரு தரமான த்ரில்லர்!

ரேட்டிங்: 4.21 / 5

Related Posts