லவ் & மர்டர்.. திகிலூட்டும் த்ரில்லர் ‘சிக்னல் அட் 11:30’! அதிரடி டிரெய்லர் வெளியீடு!

லவ் & மர்டர்..  திகிலூட்டும் த்ரில்லர் ‘சிக்னல் அட் 11:30’! அதிரடி டிரெய்லர் வெளியீடு!

மலர்விழி நடேசன் இயக்கத்தில், டி. இமான் இசையில், சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் கலந்துகொள்ளச் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் பேசிய இணைத்தயாரிப்பாளர் ஷிவானி சுப்ரமணி, இயக்குநர்கள் பேரரசு மற்றும் உதயகுமாரின் படங்களைப் பார்த்துதான் தனக்கு சினிமா மீது ஆர்வம் வந்ததாகவும், தனது அம்மாவான இயக்குநர் மலர்விழி படத்தை மிகவும் சிரமப்பட்டுச் சிறப்பாக இயக்கியுள்ளதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

கலை இயக்குநர் முனி கிருஷ்ணன் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜா ஆகியோர் படத்தின் பின்னணியில் ஒட்டுமொத்தக் குழுவினரின் முழுமையான உழைப்பைக் குறிப்பிட்டுப் பேசினர். நடிகர் ஜெயப்பிரகாஷ், டிரெய்லர் பார்க்கும்போது படம் அற்புதமாக வந்துள்ளதாகவும், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களை இயக்குநர் தேர்வு செய்துள்ளதாகவும் கூறினார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், சினிமா மீதுள்ள ஆர்வத்தால் வேறு துறையில் இருந்து வந்திருக்கும் இயக்குநர் மலர்விழி இயக்கியுள்ள இந்தப் படம் வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் இருப்பதாகப் பாராட்டியதோடு, தமிழக அரசுக்குத் தயாரிப்பாளர்கள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், தமிழ் சினிமாவை நம் அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்க முடியாது என்றும், சிறிய பட்ஜெட் படங்களுக்குத் திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் ஆதரவு எப்போதுமே தேவை என்றும் கேட்டுக் கொண்டார். இயக்குநர் பேரரசு பேசுகையில், பள்ளிக்கூடம் நடத்தும் ஒருவர் படம் எடுத்தால் அதில் நல்ல கதை இருக்கும் என்றும், இளையராஜாவுக்கு அடுத்தபடியாக மனதைத் தொடும் இசையை வழங்கும் இமான் இப்படத்திற்குப் பலம் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.எடிட்டர் கலைவாணன், சின்னப் படங்கள் தாம் தொழில்நுட்பக் கலைஞர்களை வாழவைக்கும் என்பதால் அவற்றை மக்கள் பாதுகாத்துக் கொண்டாட வேண்டும் என்றார். பாடலாசிரியர் மோகன்ராஜா, தான் எழுதிய ஜோஜோ பாடல் மனதுக்கு நிறைவாக வந்திருப்பதாகக் கூறி, இசையமைப்பாளர் இமானுடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘பிளாஸ்ட்’ பட இயக்குநர் சுபாஷ், இயக்கமும் தயாரிப்பும் இணைந்து செய்வது சவாலானது என்றும், இந்த கடும் உழைப்புக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றும் வாழ்த்தினார். நடிகர் விதார்த், சந்தோஷ் பிரதாப்பின் மென்மையான குணத்தையும், தனஞ்செயன் படத்தின் தரத்தைப் பாராட்டியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

நடிகைகள் பவ்யா திரிகா மற்றும் புஜிதா பொன்னாடா இருவரும், இயக்குநர் மலர்விழிக்கும் ஒட்டுமொத்தக் குழுவுக்கும் நன்றி தெரிவித்ததுடன், இது ஒரு வித்தியாசமான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக அனைவரையும் கவரும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசுகையில், பல வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் ஒரு பாடலுக்குத் தான் நடனமாடியிருப்பதாகவும், அதன் கிரீடத்தின் வைரமாக இசையமைப்பாளர் இமான் விளங்குகிறார் என்றும் குறிப்பிட்டார். மேலும், சமூகத்தில் பெண்கள் பல தடைகளைத் தாண்டி முன்னேறி வருவதைக் குறிப்பிட்டு, இயக்குநர் மலர்விழி பெரிய இடத்திற்கு வருவார் என்றார்.

இயக்குநர் மலர்விழி நடேசன் தனது நன்றியுரையில், தான் ரசித்த முன்னணி இயக்குநர்கள் தன் படத்திற்கு வாழ்த்த வந்திருப்பது கனவு நனவான தருணம் என்றார். குறிப்பாக, படத்தின் இசை மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளதாகக் கூறி இசையமைப்பாளர் டி. இமானுக்கு சிறப்பு நன்றி தெரிவித்தார்.

இறுதியாகப் பேசிய இசையமைப்பாளர் டி. இமான், ஒரு பெண் இயக்குநர் என்பதற்காகவே இப்படத்திற்கு இசையமைக்க முன்வந்ததாகவும், கல்வியாளர் ஒருவர் சினிமாவுக்குள் வருவது ஆரோக்கியமான விஷயம் என்றும் கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.