ஜி.வி. பிரகாஷ் குமார் கரங்களால் வெளியிடப்பட்ட ‘தகப்பன்’ பட ‘தங்கப்புள்ள’ பாடல்! பிரிவின் வழியில் பூத்த பாசம்: இதயத்தைத் தொடும் நேசம்!

ஜி.வி. பிரகாஷ் குமார் கரங்களால் வெளியிடப்பட்ட  ‘தகப்பன்’ பட ‘தங்கப்புள்ள’ பாடல்! பிரிவின் வழியில் பூத்த பாசம்: இதயத்தைத் தொடும் நேசம்!

மகனைப் பிரிந்து வாழும் தந்தையின் அளவற்ற அன்பையும், நெஞ்சைப் பிழியும் ஏக்கத்தையும் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து வெளியாகியிருக்கும் ‘தங்கப்புள்ள’ முதல் பாடல். ஜி.வி. பிரகாஷ் குமார் தனது கரங்களால் வெளியிட்ட இந்த இசைத் துளி, இணையத்தில் வைரலாகி இதயங்களை நெகிழ வைத்து வருகிறது.

பொதுவாகவே தமிழ் சினிமாவில் அப்பா-மகன் பாசத்தை நேருக்கு நேர் காட்டும் பாடல்கள் ஏராளம். ஆனால், மகனின் சந்தோஷங்களை தள்ளி நின்று, யாருக்கும் தெரியாமல் ரசிக்கும் ஒரு தந்தையின் தவிப்பையும் பாசத்தையும் மையமாக வைத்து உருவாகியிருப்பது தான் இந்த ‘தங்கப்புள்ள’ பாடலின் மாஸ் ஸ்பெஷல். மகனிடம் நேரில் அன்பைக் கொட்ட முடியாத ஒரு தகப்பனின் வலியையும், மறைந்திருந்து பார்த்து பூரிக்கும் பாசத்தையும் திரையில் அள்ளிக் கொட்டியிருக்கிறது இப்பாடல்.

மர்ஷல் ராபின்சன் இசையில், பா. விஜய்யின் நெஞ்சைத் தொடும் வரிகளும், முருகவேலின் உருக்கமான குரலும் இணைந்து இந்தச் மெல்லிசைப் பாடலுக்கு உயிரூட்டியுள்ளன. வார்த்தைகளால் சொல்ல முடியாத தகப்பனின் மனப் போராட்டத்தை மிக அழகாகக் காட்சிகளுடன் இணைத்து, குடும்ப உறவுகளின் மதிப்பைப் புதுப்பித்திருக்கிறது இந்தத் தங்கப் பாடல்.

‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு தரமான கிராமத்துப் பின்னணியில் ஜீவா களமிறங்கியுள்ள இப்படத்தை, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரா. வெங்கட் இயக்கியுள்ளார். ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்க, லார்க் ஸ்டூடியோஸ் சார்பில் K. குமார் இப்படத்தைத் தயாரித்துள்ளார். M. சுகுமாரின் ஒளிப்பதிவும், நாகூரான் ராமச்சந்திரனின் எடிட்டிங்கும் இப்படத்திற்குப் பலம் சேர்க்கின்றன.

திங்க் மியூசிக் இசை உரிமையைப் பெற்றுள்ள நிலையில், படம் முடிவதற்கு முன்பே Zee தமிழ் மற்றும் Zee5 நிறுவனங்கள் இதன் சாட்டிலைட் மற்றும் OTT உரிமைகளைக் கைப்பற்றி மாஸ் காட்டியுள்ளன. வரும் டிசம்பர் 24-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை, தற்போது வெளியாகியுள்ள இந்த ‘தங்கப்புள்ள’ பாடல் இன்னும் எகிற வைத்துள்ளது.

Related Posts