” ‘சைக்கிள் கேப்’பில் உயரே பறந்தேன்!”: தமிழில் தடம் பதிக்கும் ஷெர்ரி அகர்வால் நெகிழ்ச்சி!

” ‘சைக்கிள் கேப்’பில் உயரே பறந்தேன்!”: தமிழில் தடம் பதிக்கும் ஷெர்ரி அகர்வால் நெகிழ்ச்சி!

தெலுங்கு, பஞ்சாபி, இந்தி, கன்னடம் என இந்திய திரையுலகின் பல எல்லைகளைத் தொட்டுப் பார்த்த அழகிய தாரகை ஷெர்ரி அகர்வால், இப்போது தமிழ் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடிக்க ‘சைக்கிள் கேப்’ திரைப்படம் மூலம் கம்பீரமாக கோலிவுட்டில் கால்பதிக்கிறார். 1990களின் காதலில் ததும்பி வழிந்த அந்த வசீகரமான அப்பாவித்தனத்தையும், மலரும் நினைவுகளையும் இன்றைய தலைமுறையின் ரசனைக்கேற்ப ட்ரெண்டியாக இணைக்கும் ஒரு எமோஷனல் மியூசிக்கல் காதல் காவியமாக இந்த திரைப்படம் உருவாகியிருக்கிறது. இரண்டு வேறுபட்ட தலைமுறைகளின் காதல் உணர்வுகளை ஒரே புள்ளியில் இணைத்து, பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் அதேநேரத்தில் இளசுகளின் மனதையும் தட்டித்தூக்கும் விதமாக இப்படத்தின் கதைக்களம் செதுக்கப்பட்டுள்ளது. ட்யூப்லைட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸுடன் இணைந்து கதாநாயகியாக ஷெர்ரி அகர்வால் பட்டையைக் கிளப்பியுள்ளார்.

தமிழ் சினிமா அறிமுகம் குறித்து மிகுந்த பூரிப்போடு பேசும் ஷெர்ரி அகர்வால், “ஒரு நடிகையாக ‘சைக்கிள் கேப்’ படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தருணமும் என் மனதில் என்றும் பசுமையாக இருக்கும். படப்பிடிப்பு தளம் முழுவதும் நேர்மறை ஆற்றலும், அன்பான மனிதர்களும் நிறைந்திருந்ததால் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது; மீண்டும் இதே படக்குழுவோடு இணைந்து பணியாற்ற ஆசையாக இருக்கிறது,” என நெகிழ்ச்சியோடு கூறுகிறார். மேலும், தயாரிப்பாளரும் நாயகனுமான நவாஸ், இயக்குநர் எம்.ஆர். பாரதி, ஒளிப்பதிவாளர் சாலமன், ஹேமந்த் செல்வராஜ், எக்ஸிகியூடிவ் புரொடியூசர் சுஜா சூர்ய நிலா உட்பட அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் ‘ஏப்ரல் 28த் எம் ஜரிகிந்தி?’, ‘ராம் அசுர்’, ‘ஐ ஹேட் யூ’ என கலக்கிய இவர், அடுத்ததாக ‘எந்தவாருகானி’, ‘பெனாமி’ போன்ற தெலுங்குப் படங்களிலும், கன்னடத்தில் ‘ஆகர்ஷிதா’, இந்தியில் ‘கௌஷிகி’, ‘ஐபிஎஸ் துபே’ என வரிசையாகப் பல படங்களைக் கையில் வைத்துள்ளார். வெள்ளித்திரை மட்டுமின்றி, பஞ்சாபி இணையத் தொடரான ‘ரேஞ்ச்’ மூலம் டிஜிட்டல் தளத்திலும், டி-சீரிஸ், ஜீ மியூசிக், ரெட் ரிப்பன் போன்ற முன்னணி நிறுவனங்களின் இந்தி மற்றும் பஞ்சாபி இசை வீடியோக்களிலும் தோன்றி லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

பல மொழிகளில் முத்திரை பதித்திருந்தாலும், தமிழில் அறிமுகமாகும் ‘சைக்கிள் கேப்’ தன் திரைப்பயணத்தின் மைல்கல் என்று சொல்லும் ஷெர்ரி அகர்வாலின் இந்த மியூசிக்கல் லவ் ஸ்டோரி, அனைத்துத் தரப்பு ரசிகர்களின் மனங்களிலும் நிச்சயம் ஒரு காதல் அலைவரிசையை உருவாக்கும்.

Related Posts