தியாகராஜா டாக்கீஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத் தொடக்க விழா
தியாகா குறிஞ்சிசெல்வன் மற்றும் டாக்டர் ஆர். விஜயலட்சுமி இணைந்து கோலாகலமாகத் தொடங்கியுள்ள தியாகராஜா டாக்கீஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா திரையுலகப் பிரபலங்கள் சூழ விமரிசையாக நடைபெற்றது. இந்நிறுவம் தயாரிக்கும் முதல் படத்தில் திறமையான நடிகர் ஜெய் நாயகனாக நடிக்கிறார். இவ்விழாவில் கலந்துகொண்டு திரையுலகைச் சேர்ந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளையும் பொன்னான அறிவுரைகளையும் பகிர்ந்து கொண்டனர்.
இயக்குநர் வெங்கட் பிரபு பேசும்போது, குறிஞ்சிசெல்வன் சினிமா தயாரிப்புத் துறைக்குத் தாமதமாக வந்தாலும் சரியான நேரத்தில் வந்துள்ளார் என்றும், படத்தின் பட்ஜெட்டை முன்கூட்டியே திட்டமிட்டுத் தயாரிப்பதும் இயக்குநருடன் இணைந்து பணியாற்றுவதும் தயாரிப்பாளருக்கு மிக முக்கியம் என்றும் குறிப்பிட்டார். நடிகர் சுந்தர் சி பேசுகையில், குறிஞ்சிசெல்வன் தனக்குச் சகோதரர் போன்றவர் என்றும், எந்தச் சூழலிலும் தயாரிப்பாளர் இயக்குநருடன் வெளிப்படையாகப் பேசி முறையான திட்டமிடலுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். டாக்டர் ஐசரி கே. கணேஷ் தன் தந்தையின் நினைவாகத் தியாகராஜா டாக்கீஸ் தொடங்கப்பட்டிருப்பதைப் பாராட்டி, நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர வேண்டும் என்றார். நடிகர் இளவரசு மற்றும் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஆகியோர் தியாகராஜா டாக்கீஸ் தமிழ் சினிமாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தைப் பெற வேண்டும் என வாழ்த்தினர்.
தயாரிப்பாளர் டி. சிவா பேசுகையில், கதைக்குத் தேவையான அளவுக்கு மட்டுமே செலவு செய்து, புதிய தயாரிப்பு நிறுவனம் என்ற முறையில் திட்டமிட்ட செலவில் தரமான படத்தைக் கொடுத்து வெற்றி பெற வேண்டும் என்றார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், குறிஞ்சிசெல்வனின் பரந்த மனப்பான்மையையும் மனிதநேயத்தையும் புகழ்ந்து பேசினார். பாடகி மாலதி மற்றும் பாடகர் கிரிஷ் ஆகியோர் குறிஞ்சிசெல்வனின் உதவும் குணத்தைப் பாராட்டி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், ஜப்பானில் தனக்குச் செய்த மறக்க முடியாத உதவியை உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்து, குறிஞ்சிசெல்வனின் உயர்ந்த மனிதநேயத்தைப் போற்றினார். மேலும் இப்படம் எளிமையான நகைச்சுவையுடன் நல்ல குடும்பப் படமாக உருவாகிறது என்றார்.
நடிகர் மோகன் மற்றும் நடிகர் சூரி ஆகியோர் குறிஞ்சிசெல்வனுடன் உள்ள குடும்ப உறவுமுறையைக் குறித்தும், இந்தத் தயாரிப்பு நிறுவனம் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்றும் வாழ்த்தினர். இயக்குநர் பிரசன்னா தனது முழுமையான உழைப்பைக் கொடுத்து இந்தப் படத்தைத் திட்டமிட்டபடி வெற்றிகரமாகத் தருவதாகத் தெரிவித்தார். நடிகர் ஜெய் பேசுகையில், குறிஞ்சிசெல்வனின் தயாரிப்பில் நடிப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது என்றார். தயாரிப்பாளர் ஏ.எம். பிரபாகரன் தன் தாய்மாமாவின் புதிய முயற்சிக்கு அனைவரின் ஆதரவும் வேண்டும் என்றார். இறுதியாகப் பேசிய தயாரிப்பாளர் தியாகா குறிஞ்சிசெல்வன், விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் தன் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உறுதுணையோடு தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் பல வெற்றிப் படங்களைத் தயாரிக்கும் என்ற உறுதியை வெளிப்படுத்தினார்.

