அன்பில் அவன்: திரைப்பட விமர்சனம்
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் தயாரித்து நடித்துள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம், காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த கலவையாக திரைக்கு வந்துள்ளது. இப்படத்தில் பிரீத்தி முகுந்தன் நாயகியாக நடித்துள்ளார்.
ஏழு ஆண்டுகள் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் சூர்யாவும் (அசோக் செல்வன்) இயலும் (பிரீத்தி முகுந்தன்), நட்சத்திர விடுதிகளில் பணிபுரிந்து வருகின்றனர். அன்றாட வேலைப் பளுவும் பரபரப்பும் அவர்களது சொந்த வாழ்க்கையை ரசிக்க விடாமல் தடிக்கிறது. இதனால் மனைவியின் நீண்ட நாள் கனவான மலைப்பகுதியில் ஒரு ‘ஹோம்ஸ்டே’ தொடங்குவதற்காக அந்த வேலையை உதறிவிட்டு இருவரும் பயணமாகின்றனர்.
அங்கு அவர்கள் வாங்கும் பழமையான பங்களாவும், அதைச் சுற்றியுள்ள அரசியல் அதிகார பலமும் உள்ளூர் பிரச்சினைகளும் அவர்களுக்குப் பெரும் தடையாக மாறுகின்றன. அமைதியான வாழ்க்கையை எதிர்பார்த்துச் செல்லும் இந்தத் தம்பதியினர் அந்த ஆபத்துக்களில் இருந்து எப்படி மீண்டு வருகிறார்கள், தங்கள் கனவைச் சாதித்தார்களா என்பதுதான் மீதிக்கதை.
மனைவியின் ஆசையை நிறைவேற்றத் துடிக்கும் பாசமான கணவனாகவும், அதேசமயம் சூழ்நிலைக் கைதியாகி எதிரிகளை எதிர்த்துப் போராடும் ஆக்ஷன் நாயகனாகவும் இரண்டு பரிமாணங்களிலும் சிறப்பாகப் பொருந்தியுள்ளார், அசோக் செல்வன். காதலில் உருகும் இடங்களிலும், ஆற்றாமையில் வெடிக்கும் காட்சிகளிலும் அவரது இயல்பான நடிப்பு பலம் சேர்க்கிறது.
கணவருடன் இயல்பாகப் பழகும் அழகிலும், கோபப்படும் தருணங்களிலும் கவர்கிறார். ப்ரீத்தி முகுந்தன். குறிப்பாக, இடைவேளைக்கு முன்பு வரும் உணர்ச்சிகரமான சண்டை மற்றும் மோதல் காட்சியில் இவரது நடிப்பும் வெளிப்பாடும் கதையுடன் பார்வையாளர்களை ஈர்க்கிறது.
சாபுமோன் அப்துசமத், கதிதிர்பாலு, மகா உள்ளிட்டோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வில்லத்தனமான மற்றும் எரிச்சலூட்டும் பாத்திரங்களைச் சரியாகச் செய்துள்ளனர்.
கோவிந்த் வசந்தாவின் இசை படத்தின் முதல் பாதியைத் தாங்கிப்பிடிக்கிறது. காதலின் ஆழத்தைக் காட்டும் மெலடி பாடல்களும், தம்பதியினரின் மனநிலையோடு பயணிக்கும் பின்னணி இசையும் காட்சிகளுக்குத் தேவையான உணர்வை அழகாகக் கடத்துகின்றன.
கவுதம் ராஜேந்திரனின் கேமரா இப்படத்தின் முக்கிய பலம். மலைப்பகுதியின் பசுமை மாறாத சூழலையும், மர்மம் கலந்த அந்தப் பங்களாவையும் அவர் காட்டியிருக்கும் விதம் கதைக்களத்திற்குப் பொருத்தமான திரில்லர் உணர்வைத் தருகிறது.
இயக்குநர் கார்த்திகேயன் முதல் பாதியில் கணவன் – மனைவியின் காதலையும், அவர்களது அன்றாடப் போராட்டங்களையும் யதார்த்தமாகப் பதிவு செய்து முத்திரை பதித்துள்ளார். இருப்பினும், இரண்டாம் பாதியில் படம் முழுமையாக ஆக்ஷன் திசைக்குத் திரும்புவதும், நாயகன் தனி ஒருவராகப் பலரை எதிர்ப்பதும் படத்தின் இயல்புத் தன்மையிலிருந்து சற்று விலகிச் செல்வது போன்ற உணர்வைத் தருகிறது.
காதல் மற்றும் குடும்ப உறவுகளோடு தொடங்கிய படம், இரண்டாம் பாதியில் ஆக்ஷன் பக்கமாகத் திசைமாறுகிறது. சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக நீளும் சண்டைக் காட்சிகளும் சில லாஜிக் மீறல்களும் படத்தின் வேகத்தைக் குறைத்தாலும், சுவாரஸ்யமான கதைக்களமும் அசோக் செல்வனின் துடிப்பான நடிப்பும் ரசிகர்களை ஏமாற்றாது.
ஒருமுறை தாராளமாக ரசிக்கக்கூடிய பொழுதுபோக்குத் திரைப்படம்!

