“எந்த ஹீரோவுக்கும் மார்க்கெட் இல்லே..!”: ‘தி டார்க் ஹெவன்’ பட விழாவில் இயக்குநர் அதிரடி!
பாலாஜி இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் சித்து, ரித்விகா, தர்ஷிகா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்றது. நாட்டார் கதையை மையமாகக் கொண்டு, கொலையும் கொலை சார்ந்த துப்பறியும் சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 18 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இவ்விழாவில் படக்குழுவினர் பகிர்ந்த விரிவான கருத்துகள்:
இசையமைப்பாளர் சக்தி பாலாஜி: “நான் ஏற்கெனவே ‘உடன்பால்’, ‘ஜாக்கி’ படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். க்ரைம் த்ரில்லர் படத்திற்கு இசையமைப்பது இதுவே முதல் முறை. இயக்குநர் பாலாஜி சொன்ன ஒன்லைன் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது; கதையும் பிடித்திருந்தது. அவர் சொன்னது போலவே படத்தை எடுத்திருக்கிறார். சித்து, ரித்விகா, தர்ஷிகா என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் மணி காட்சிகளை மிகச் சிறப்பாகப் படமாக்கியுள்ளார். பெரிய படத்திற்குரிய திரையரங்கு அனுபவத்தை இந்தப் படம் தரும். அனைவரும் திரையரங்கில் வந்து பார்க்க வேண்டும்.”
ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பிகே: “இயக்குநர் பாலாஜியுடன் ‘டி3’ படத்திற்குப் பிறகு பணியாற்றும் இரண்டாவது படம் இது. மலைப் பிரதேசங்களில் அழகான இடங்களில் படப்பிடிப்பு நடத்துவது வேறு; மர்மமும் திகிலும் நிறைந்த கதைக்கு ஏற்ற இடங்களைத் தேடிப் பிடித்து நடத்துவது வேறு. அழகும் மர்மமும் இணைந்த இடங்களைக் கண்டுபிடித்து இயக்குநர் படப்பிடிப்பு நடத்தினார். வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்கு நீண்ட தூரம் படப்பிடிப்புக் கருவிகளைச் சுமந்து சென்று சிரமப்பட்டுப் படமாக்கினோம். ஆனால், காட்சிகளைப் பார்த்துவிட்டு அனைவரும் பாராட்டும் போது அந்தச் சிரமங்கள் எல்லாம் மறந்துவிடுகின்றன.”
நடிகை தர்ஷிகா: “‘தி டார்க் ஹெவன்’ எனது முதல் படம். பொதுவாக எனக்கு த்ரில்லர் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையிலான ஒரு த்ரில்லர் படமாக இது இருக்கும். ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளன. நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். செப்டம்பர் 18 அன்று திரையரங்கில் பார்த்து உங்களது நேர்மையான விமர்சனங்களைக் கூறுங்கள்.”
நடிகை ரித்விகா: “பெரிய படங்களின் வெளியீடுகள் காரணமாகத் தள்ளிப்போன இத்திரைப்படம் இப்போது செப்டம்பர் 18 அன்று உறுதியாக வெளியாகிறது. நிறைய த்ரில்லர் படங்கள் வந்தாலும், போலீஸ், இன்வெஸ்டிகேஷன் என வழக்கமான பாணியில் இல்லாமல் இது வித்தியாசமான அனுபவத்தைத் தரும். பாதியிலேயே நின்ற படத்தை மீண்டும் தொடங்கி எடுப்பது இரட்டை உழைப்பைக் கேட்கும்; படக்குழுவினர் இருமடங்கு உழைத்திருக்கிறார்கள். ஒரே ஒரு ஷாட்டுக்காகக் கூட 3-4 மணி நேரம் காத்திருந்து இயக்குநர் எடுத்திருக்கிறார்.
திரையரங்குப் படங்கள், ஓடிடி படங்கள் எனப் பிரித்துப் பார்க்காமல், எல்லாப் படங்களையும் முதலில் திரையரங்கில் பார்க்க வேண்டும்; அதற்குப் பிறகு ஓடிடியில் வரும்போது பார்க்கலாம். ‘தி டார்க் ஹெவன்’ நிச்சயமாக ஒரு நல்ல திரையரங்கு அனுபவத்தைத் தரும்.”
இயக்குநர் பாலாஜி: “ஒரு படத்தைப் பாதிக்கு மேல் எடுத்து முடித்து அப்படியே நிறுத்திவிட்டு, மீண்டும் ஆரம்பிப்பது மனரீதியாகப் பெரும் அழுத்தத்தையும் நெருக்கடியையும் தரக்கூடிய விஷயம். அப்படிப்பட்ட சூழலில் மீண்டும் தொடங்கி முடிக்க எனக்கு உறுதுணையாக இருந்த சரண், கோபால் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. குறிப்பாக, கடந்த காலத்தைப் பற்றி எதுவும் கேட்காமல், என் மீது நம்பிக்கை வைத்து நடித்த நடிகர் சித்துவுக்குப் பெரிய மரியாதை உருவாகியுள்ளது.
தூக்கம் இல்லாமல் உழைத்ததுதான் நாங்கள் சந்தித்த பெரும் சவால். சில நேரங்களில் 3 மணி நேரம் கூடத் தூங்காமல் உழைத்திருக்கிறோம். அந்த உடல் ரீதியான பிரச்சினையிலிருந்து மீள்வது போராட்டமாக இருந்தது. படத்தில் நடித்த வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார் போன்ற அனுபவமிக்க நடிகர்கள் இன்று படப்பிடிப்பில் இருப்பதால் வர முடியவில்லை.
ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் உழைப்பால்தான் டீசர், டிரெய்லர் சிறப்பாக வந்துள்ளன. படைப்பு நன்றாக வர வேண்டும் என்பதற்காக எங்களுக்குள் வரும் வாக்குவாதங்கள் பேக்-அப் சொல்வதற்குள் காணாமல் போய்விடும். நடிகை ரித்விகா வந்த பிறகு படத்தின் தரம் வேறு உயரத்திற்குச் சென்றுள்ளது. படத்தில் பாரி, உமையாள், கனி உட்பட 4 பிரதான பாத்திரங்களை நம்பி உருவாக்கியிருக்கிறேன். செப்டம்பர் 18 அன்று திரையரங்கில் பார்த்து நேர்மையான விமர்சனங்களைச் சொல்லுங்கள். நல்லதைக் கேட்டுக் கொள்கிறோம்; கேட்டதை மாற்றிக் கொள்கிறோம்.
சிலர், ‘புதுமுகத்தை வைத்து படம் எடுக்கிறீர்களே.. வியாபாரம் ஆகுமா’ என கேட்கிறார்கள். உண்மையைச் சொன்னால் ஆறேழு ஹீரோக்களைத் தவிர, வேறு யாருக்கும் வியாபாரம் கிடையாது. படத்தின் கண்டண்ட்தான் முக்கியம். அந்த நம்பிக்கையில்தான் களம் இறங்கி இருக்கிறோம்!”
நாயகன் சித்து: “சாலிகிராமத்தில் பல்வேறு சினிமா அலுவலகங்களுக்கு ஏறி இறங்கியிருக்கிறேன்; பிரசாத் லேபிற்குப் பல நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கிறேன். சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும், கதாநாயகனாக இது எனக்கு முதல் படம். இதையே ஒரு சாதனையாகப் பார்க்கிறேன்.
முதல் படத்திலேயே காவல் துறை அதிகாரி கதாபாத்திரம் ) கிடைப்பது அரிது. இயக்குநர் கதையைக் கூறியபோதே சவாலாக இருந்தது. முன்பே ஆரம்பிக்கப்பட்டு நின்ற கதை என்று அவர் சொன்னபோது, முடிந்துபோன கடந்த காலத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை. வாய்ப்பை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதிலும், இயக்குநர் மீதும் மட்டுமே கவனம் செலுத்தினேன். காடு, மலை எனச் சிரமமான இடங்களில் படக்குழுவினர் கடுமையாக உழைத்தார்கள். அனுபவமிக்க மூத்த நடிகர்களுடன் பணியாற்றியது ஒவ்வொரு நாளும் புதிய கற்றல் அனுபவமாக இருந்தது. செப்டம்பர் 18 அன்று திரையரங்கில் வந்து படத்தைப் பாருங்கள்.”

