‘தினந்தோறும்’ நாகராஜின் அடுத்த அதிரடி… விரைவில் வெளியாகிறது ‘ஆகாயம்’!
‘தினந்தோறும்’ படம் மூலம் திரையுலகில் கவனம் ஈர்த்து, ‘மின்னலே’, ‘காக்க காக்க’ போன்ற மெகா ஹிட் படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதித் தனது திறமையை நிரூபித்த இயக்குநர் தினந்தோறும் நாகராஜ், தற்போது கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆகாயம்’. டெல்டா டாக்கீஸ் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர்.
‘கன்னி மாடம்’ படத்தில் இயல்பான நடிப்பால் மனங்களைக் கவர்ந்த ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க, ஆலிஷா மிராணி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், கிரி துவாரகிஷ், ஸ்ரீ தேவகிருஷ்ணன், ‘மெய்யழகன்’ புகழ் இந்துமதி மணிகண்டன், தீபா, ‘மகாராஜா’ படத்தில் நடித்துத் தேசிய விருது பெற்ற சஞ்சனா நமீதாஸ், ரோசாரி மற்றும் ரைட்டர் ஹரிஹரன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் களம் கண்டுள்ளது.
தொழில்நுட்ப ரீதியிலும் படம் மிகவும் வலுவாக உருவாகியுள்ளது. ‘சென்னை டு சிங்கப்பூர்’ கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவையும், ‘நீர்ப்பறவை’, ‘அயோத்தி’ புகழ் ரகுநந்தன் இசையமைப்பையும் மேற்கொண்டுள்ளனர். பாடல்களை ஏக்நாத், சாரதி, ரமணிகாந்தன் ஆகியோர் எழுதியுள்ளனர். படத்தொகுப்பை சூர்யாவும், சண்டைப் பயிற்சியைப் ஃபையர் கார்த்திக்கும், நடன அமைப்பை மணிகண்டனும் கவனித்துள்ளனர். மக்கள் தொடர்பை புவன் செல்வராஜும், தயாரிப்பு மேற்பார்வையை பிரசாந்தும் செய்துள்ளனர்.
படம் குறித்துப் பேசிய இயக்குநர் தினந்தோறும் நாகராஜ், “வெளிப்படையாகச் சொன்னால் ‘ஆகாயம்’ மதுவுக்கு எதிரான ஒரு படம். ஆனால், அதை வெறும் பிரச்சாரமாக இல்லாமல், அரசியலும் சமூக அக்கறையும் கலந்த உயிர்த்துடிப்பான நடைமுறை வாழ்க்கையாகப் பாசத்தோடும் பரிதவிப்போடும் சொல்லியிருக்கிறேன். பார்ப்பவர்களுக்குச் நல்ல உணர்வுகளையும் அனுபவங்களையும் தரும் சினிமா தயாரிப்பதே அழகு, அதை இதில் செய்திருக்கிறேன்” என்று நம்பிக்கையோடு கூறுகிறார்.
சமூகப் பொறுப்பும் விறுவிறுப்பான கதைகளமும் இணைந்த இந்த ‘ஆகாயம்’ விரைவில் திரையரங்குகளில் ரசிகர்களைச் சந்திக்க வரவுள்ளது!

