நெட்ஃபிளிக்ஸில் சக்கைபோடு போடும் ‘ஜி.டி.என்’: உலகளவில் கெத்து காட்டும் மாதவன்!
திரையரங்குகளில் மட்டும்தான் கெத்து காட்டுவோமா என்ன? டிஜிட்டல் திரைகளிலும் நாங்கதான் மாஸ் என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறது ‘ஜி.டி.என்.’ திரைப்படம்!
‘இந்தியாவின் எடிசன்’ என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம், திரையரங்குகளில் பெற்ற அமோக வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய டாப் 10 திரைப்படங்களின் பட்டியலில் கம்பீரமாக இடம்பெற்று சாதனை படைத்து வருகிறது.
ஆகஸ்ட் 7 அன்று திரையரங்குகளில் வெளியான போது, ஜி.டி. நாயுடுவாகவே வாழ்ந்திருந்த மாதவனின் அபார நடிப்பும், காலனித்துவ ஆட்சிக் காலத்தில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்திற்காக அவர் நடத்திய துணிச்சலான போராட்டமும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தன. சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த இந்தப் படம், திரையரங்குகளில் நான்கு வாரங்கள் வெற்றிகரமாக ஓடி மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
திரையரங்குகளைத் தொடர்ந்து, செப்டம்பர் 4 அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் அடியெடுத்து வைத்த ‘ஜி.டி.என்.’, அங்கு தனது இரண்டாவது ஆட்டத்தை அதிரடியாகத் தொடங்கியது. வெளியான ஒரே வாரத்திற்குள் இந்தியாவில் அதிகம் டிரெண்டாகும் திரைப்படங்களின் பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் மாஸ் என்ட்ரி கொடுத்தது!
இந்தக் கொண்டாட்டம் இந்தியாவோடு மட்டும் நின்றுவிடவில்லை! ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, சிங்கப்பூர், பாகிஸ்தான், பஹ்ரைன் உள்ளிட்ட பல நாடுகளில் டாப் 5 இடங்களுக்குள் பிடித்து, சர்வதேச ரசிகர்களையும் கட்டிப்போட்டுள்ளது.
ஒரு நல்ல கதைக்களமும், திறமையான நடிப்பும் இருந்தால் எல்லைகளைத் தாண்டி உலகளாவிய மேடையில் கலக்க முடியும் என்பதற்கு ‘ஜி.டி.என்.’ ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு!

