சாம் சி.எஸ்.: படங்கள் 100.. வெற்றி 100% !
பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி, நம்மை ஈர்த்து திரை உலகின் தனித்துவமான இசையமைப்பாளர்களுள் ஒருவராக விளங்குகிறார் சாம் சி.எஸ்.
அம்புலி திரைப்படம் மூலம் தனது இசைப்பயணத்தைத் துவங்கிய சாம் சி.எஸ், தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள “சர்தார்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் சதம் அடித்துள்ளார். இத்திரைப்படம் அவருக்கு இசையமைப்பாளராக நூறாவது திரைப்படமாகும்.
இது குறித்து, தனது நெகிழ்ச்சியான உணர்வுகளையும், இசையுடனான தனது ஆழமான பிணைப்பையும் மிகுந்த உற்சாகத்துடன் அவர் பகிர்ந்து கொண்டார்.
போராட்டங்களைக் கடந்த வெற்றிப் பாதை
“அடியெடுத்து வைத்த ஆரம்ப நாட்களிலிருந்து இந்த பிரம்மாண்டமான நூறாவது படத்தை எட்டுவது வரை எண்ணற்ற சவால்களையும், தடைகளையும், வலிகளையும் கடந்து வந்திருக்கிறேன். இத்தனை வருட போராட்டங்களுக்குப் பிறகு இந்த இடத்தை அடைந்திருப்பதை நினைக்கும் போது மனதில் சொல்ல முடியாத அளவிற்கு உணர்ச்சிகள் பொங்கி வருகின்றன. நான் நடந்து வந்த வழியில் நன்மைகளும் சவால்களும் கலந்தே இருந்தன. இப்போது ஒருவிதமான பரவசத்தோடும், நெகிழ்ச்சியான எமோஷனல் உணர்வோடும் நிற்கிறேன்!”
நன்றியும் மைல்கல் தந்த ஊக்கமும்
“இந்த சிறப்பான தருணத்தில் எனக்குத் தோள் கொடுத்து நின்றவர்களை நினைவுகூர விரும்புகிறேன். என் திரையுலகப் பயணத்தில் என்னோடு இணைந்து பயணித்த திரைத்துறை நண்பர்கள், என் சொந்தங்கள் மற்றும் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். கடந்த தொண்ணூற்றொன்பது படங்களாக ரசிகர்கள் என் மீது பொழிந்த அன்பும் ஆதரவும் அளப்பரியது. நான் சறுக்கிய தருணங்களிலும், பின்னடைவுகளைச் சந்தித்தபோதும் ரசிகர்கள் என் பக்கபலமாகவே இருந்தார்கள். இந்த நூறாவது படம் என்பது ஒரு பெரிய மைல்கல். இது இன்னும் பல சிறப்பான படைப்புகளை உருவாக்குவதற்கு எனக்குப் பெரும் ஊக்கத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.”
“சர்தார் 2” சர்வதேச தரத்திலான இசை விருந்து
“அம்புலி என் முதல் படம். அதன் பிறகு நான் கணக்கு வைத்துக்கொள்ளவில்லை. காரணம், இசை என்பது கணக்கு அல்ல; ஒவ்வொன்றும் ஒரு அனுபவம். ‘விக்ரம் வேதா’, ‘கைதி’ போன்ற திரைப்படங்களின் பின்னணி இசை எந்த அளவிற்குப் பரவலாகப் பேசப்பட்டதோ, அதே அளவிற்கு ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசையும் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்காக புடாபெஸ்ட் நகரில் உள்ள பிரபல லைவ் ஆர்கெஸ்ட்ரா மற்றும் உலகத்தரம் வாய்ந்த பல்வேறு இசைக் கலைஞர்களுடன் இணைந்து மிகக் கடுமையாக உழைத்தோம். இன்னும் நிறைய கற்றுக்கொண்டு, அனைவருக்கும் பிடிக்கும்படியான சிறந்த இசையைத் தொடர்ந்து தருவதே எனது இலக்கு.”
“இசைதான் எனக்கு மிகப்பெரிய போதை!”
இசை என்பது தனக்கு வெறும் தொழில் சார்ந்த விஷயம் மட்டுமல்ல; அது தனது வாழ்வியலோடு இரண்டறக் கலந்த ஒரு அங்கம். அதுதான் தனக்குப் போதை.
புதிய மெட்டுகளையும் பின்னணி இசையையும் உருவாக்கும் அந்தத் தருணங்களே தனக்கு எல்லையற்ற மனநிறைவையும், அளவில்லா உற்சாகத்தையும் தருகின்றன.
ஒவ்வொரு திரைப்படத்திற்கும் இசையமைக்கும் போது, அந்த கதையின் ஆன்மாவையும் உணர்வுகளையும் ரசிகர்களின் இதயத்திற்கு நேர்த்தியாகக் கடத்தும் வகையில், முற்றிலும் புதுமையான ஒலிகளையும் பின்னணி இசையையும் உருவாக்கவே எப்போதும் முயல்வதாகத் தெரிவித்தார்.
ரசிகர்களின் அசைக்க முடியாத அன்பும் தொடர் ஆதரவுமே, நாளுக்கு நாள் தன்னை மெருகேற்றிக் கொண்டு இன்னும் சிறந்த இசையைக் கொடுப்பதற்கான முதன்மை காரணியாகத் திகழ்கிறது.
தனது கடின உழைப்பாலும், இசையின் மீதான தீராத காதலினாலும் இத்தகைய சாதனையைப் படைத்துள்ள சாம் சி.எஸ்-ன் இந்த நூறாவது மைல்கல், அவரது இசைப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமைகிறது என நெகிழ்ச்சியுடன் தனது நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார்.

