இயற்கையின் பிரம்மாண்டம்.. பிவிஆர் திரையரங்குகளில்..!
தமிழ்நாட்டின் அடர்ந்த காடுகளையும், அங்கு வாழும் அரிய உயிரினங்களையும் இதுவரை யாரும் பார்த்திராத புதிய கோணத்தில், ‘வைல்ட் தமிழ்நாடு’ என்ற ஆவணப்படமத்தை, பி.வி.ஆர். திரையரங்குககளில் வரும் 7ம் தேதி முதல் காணலாம்.
தமிழ்நாட்டின் விதவிதமான நிலப்பரப்புகளையும் காட்டுயிர்களையும் நேரடியாகப் பார்த்து ரசிக்கும் ஒரு பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை இந்த படம் ரசிகர்களுக்கு அள்ளிக் கொடுக்கும்.
சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு முன்னெடுப்பில், ‘நேச்சர் இன்:ஃபோகஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, தமிழ்நாடு வனத்துறையின் முழு ஆதரவோடு இந்த ஒரு மணி நேர ஆவணப்படம் பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஒன்றிணைத்து மலைகள், அடர்ந்த காடுகள், பசுமை கொஞ்சும் விளைநிலங்கள், கடற்கரைகள், பவளப்பாறைகள் மற்றும் வறண்ட நிலப்பரப்புகள் என தமிழ்நாட்டின் இயற்கைச் செழுமையையும் அதன் பல்லுயிர் பன்முகத்தன்மையையும் படம் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது.
பழந்தமிழ் சங்க இலக்கியத்தின் ஐந்திணைகளான குறிஞ்சி (மலைகள்), முல்லை (காடுகள்), மருதம் (விளைநிலங்கள்), நெய்தல் (கடற்கரைகள்), பாலை (வறண்ட நிலங்கள்) ஆகியவற்றின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள ‘வைல்ட் தமிழ்நாடு’, மாறுபட்ட இயற்கை சூழல்களில் வாழும் வனவிலங்குகளை மிக நேர்த்தியாகப் படம்பிடித்துள்ளது. யானைகள், சிறுத்தைகள் போன்ற நம்ம ஊர் விலங்குகளோடு, செங்குரங்கு, மின்மினிப் பூச்சிகள் மற்றும் மிக அரிதாக மட்டுமே கண்ணில் தென்படும் மெட்ராஸ் முள்ளெலி உள்ளிட்ட உயிரினங்களின் சுவாரஸ்யமான வாழ்க்கையையும் திரையில் நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
-
இயக்கம்: இயற்கை மற்றும் வனவிலங்கு ஆவணப்பட இயக்குநர் கல்யாண் வர்மா இதை இயக்கியுள்ளார்.
-
பின்னணிக் குரல்: பிரபல நடிகர் அரவிந்த் சுவாமி தனது கம்பீரமான குரலில் வர்ணனை செய்துள்ளார்.
-
இசை: மூன்று முறை கிராமி விருது வென்ற ரிக்கி கேஜ், கர்நாடக இசையையும் மேற்கத்திய வாத்தியங்களையும் நேர்த்தியாக இணைத்து இசையமைத்துள்ளார்.
-
ஒளிப்பதிவு: தென்னிந்தியாவைச் சேர்ந்த திறமையான ஒளிப்பதிவாளர்கள் குழுவினர் நான்கு ஆண்டுகள் தொடர்ந்து களத்தில் தங்கி காட்சிகளைப் பதிவு செய்துள்ளனர்.
திரைப்படம் மற்றும் அதன் பரவலான திரையரங்கு வெளியீடு குறித்து சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி ஆரத்தி கிருஷ்ணா கூறுகையில், “நமது இயற்கை பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்கும் இதுபோன்ற சிறந்த முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லிமிடெட் பெருமிதம் கொள்கிறது. தமிழ்நாட்டின் வனப்பகுதிகளின் எழிலையும், அதன் பல்வேறு நிலப்பகுதிகளில் காணப்படும் ஆச்சரியமூட்டும் பல்லுயிர் சூழலையும் ‘வைல்ட் தமிழ்நாடு’ ஆவணப்படம் மிக நேர்த்தியாகப் படம்பிடித்துள்ளது. திரையரங்குகள் வாயிலாக இந்த ஆவணப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம், இந்த கதைகள் அனைவரையும் எளிதில் சென்றடைவதோடு, இயற்கை உலகின் மீது ஆழ்ந்த அன்பையும், அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் மக்களிடையே உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.
இயக்குநர் கல்யாண் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம், தமிழ்நாட்டின் இயற்கை பாரம்பரியத்தை ஒரு சினிமா அனுபவமாக வழங்குவதற்காக பல ஆண்டுகள் காடுகளிலும், மலைகளிலும், பல்வேறு நிலப்பகுதிகளிலும் இரவுபகல் பாராமல் களத்தில் நின்று எடுத்த காட்சிகளை ஒன்றிணைத்துள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் ‘வைல்ட் தமிழ்நாடு’, காடுகள் மற்றும் மலைகள் தொடங்கி கடற்கரைகள் மற்றும் வறண்ட நிலங்கள் வரை தமிழ்நாட்டின் அடங்கியிருக்கும் பல்வேறு இயற்கை உலகங்களை நேரடியாக அறிந்துகொள்ள ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. மாபெரும் திரையும் இயற்கை பாரம்பரியமும் இணையும் இந்த பிரம்மாண்ட அனுபவத்தைத் தவறவிடாதீர்கள்!

