‘இம்மார்ட்டல்’: விமர்சனம்: மிரண்டு மிரட்டும் ஜி.வி… வெகுண்டு விரட்டும் அழகுப் பேய்!
தமிழ் சினிமாவில் எத்தனையோ பேய் மற்றும் ஹாரர் திரைப்படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், ஹாலிவுட் பாணியில் ஒரு ‘வேம்பையர்’ (இரத்தக் காட்டேரி) கதையை பேண்டசி கலந்து, அதுவும் ரொமான்ஸ் மற்றும் திகில் தூக்கலாகக் கொடுத்து பார்வையாளர்களைக் கவர்ந்திருக்கிறது இந்த ‘இம்மார்ட்டல்’. மாரியப்பன் சின்னா இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் – கயாடு லோஹர் கூட்டணியில் வெளியாகியுள்ள இத்திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட திரையனுபவத்தைத் தருகிறது.
கதைக்களம்
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் ஒரு அமானுஷ்ய இரத்தக் காட்டேரி, தன் அழகால் வாலிபர்களை வசீகரித்து அவர்களின் இரத்தத்தைக் குடித்து உயிர் வாழ்கிறது.
சென்னையில் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை பார்க்கும் கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ், தங்குவதற்கு வீடு தேடி அலைகிறார். அப்போது வாடகையில் ஒரு சொகுசு அபார்ட்மெண்ட்டில் தன்னுடன் அறை பகிர்ந்து கொள்ள அழைக்கிறார் கதாநாயகி கயாடு லோஹர். பேரழகியாக இருக்கும் கயாட்டின் அழைப்பை ஏற்று அந்த மாளிகை போன்ற வீட்டில் குடியேறுகிறார் ஜி.வி. பிரகாஷ்.
ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே ரொமான்ஸ் மற்றும் நட்பு மலர்ந்தாலும், மெல்ல மெல்ல அங்கே சில மர்மமான சம்பவங்கள் நடக்கின்றன. ஒரு கட்டத்தில் தான் ஒரு மாய உலகத்தில் சிக்கிக் கொண்டதையும், தன் எதிரே இருப்பது சாதாரண பெண் அல்ல, ஆபத்தான இரத்தக் காட்டேரி என்பதையும் ஜி.வி. பிரகாஷ் உணர்கிறார். அந்த வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி கதாநாயகியின் கட்டுப்பாட்டில் மாட்டிக் கொள்ளும் ஜி.வி. பிரகாஷ், அந்த ஆபத்திலிருந்து தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் விறுவிறுப்பான மீதிக்கதை.
நடிப்பு
-
ஜி.வி. பிரகாஷ் குமார்: ‘டார்லிங்’ படத்திற்குப் பிறகு ஜி.வி. பிரகாஷிற்கு இது மிகச்சிறந்த ஹாரர் திரைப்படமாக அமைந்து இருக்கிறது. நடுத்தர வர்க்க இளைஞனாக அறிமுகமாகி, நாயகியின் அழகில் மயங்கும் இடங்கள், பின்னர் ஆபத்தை உணர்ந்து அச்சத்தில் நடுங்குவது, இறுதியாக அதிலிருந்து மீள முட்டி மோதிப் போராடும் காட்சிகள் என அனைத்து இடங்களிலும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார்.
-
கயாடு லோஹர்: நாயகி கயாடு, பேய்த்தனமான அழகி. முதல் பாதியில் சுண்டி இழுக்கும் பேரழகியாகவும், கவர்ச்சிப் பதுமையாகவும் வலம் வந்து ரசிகர்களின் மனதைக் கொள்ளையடிக்கிறார். இரண்டாம் பாதியில் வேறு முகம் காட்டி அதிரவைக்கிறார். நாயகனை அவர் பார்க்கும் பார்வையில் காதலும், கள்ளமும் சம விகித்ததில் கலந்திருக்கிறது. சிறப்பான நடிப்பு.
-
பிற நடிகர்கள்: லொள்ளு சபா மாறன், டி.எம். கார்த்திக், ஆதித்யா கதிர் மற்றும் குமார் நடராஜன் ஆகியோர் ஆங்காங்கே தோன்றி தங்களின் இயல்பான நகைச்சுவையால் கதையின் பரபரப்பிற்கு நடுவே கலகலப்பைச் சேர்க்கிறார்கள்.
-
இசை: படத்தின் ஆன்மாவாகச் செயல்பட்டிருப்பது சாம் சி.எஸ்-ன் பின்னணி இசை! காதல் பிரசவிக்கும் இடங்களில் மென்மையாகவும், திகில் அத்தியாயங்களில் ஜம்ப்-ஸ்கேர் தருணங்களை வழங்கி இருக்கையின் நுனிக்கே கொண்டு செல்லும் அளவிலும் பின்னணி இசையில் வித்தை காட்டியிருக்கிறார். ‘இம்மார்ட்டல்’ தீம் பாடல் வரும் இடங்கள் அமானுஷ்ய உணர்வை அப்படியே நமக்குக் கடத்துகிறது.
-
ஒளிப்பதிவு: அந்த பெரும் லெக்சரி அபார்ட்மெண்ட்டை, அழகோடு சேர்த்து, அடி வயிற்றில் பயம் ஏற்படும் வித்ததிலும் காட்சிப் படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஸ்ணன். கச்சடாவான பிரிண்டிங் பிரஸ், அடுக்கு மாடி வீட்டுக்குள் ரகசிய அறை என அனைத்தையும் சிறப்பாக அளித்து உள்ளார். லொகோசன்கள் குறைவு என்றாலும், விதவிதமான கோணத்தில் காட்சிகளை அளித்து சுவாரஸ்யத்தை அதிகரித்துத் தந்ததற்கு சபாஸ் போடலாம்.

-
எடிட்டிங்: படத்தின் வேகத்தை நிர்ணயிப்பதில் எடிட்டர் எம். ராஜேஷின் பணி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரே அபார்ட்மெண்டிற்குள் பெரும்பாலான கதையோட்டம் நகர்ந்தாலும், பார்வையாளர்களுக்கு எங்கும் அலுப்பு தட்டாத வகையில் காட்சிகளின் இணைப்பைச் சுவாரஸ்யமாக அமைத்துள்ளார், எடிட்டர் எம். ராஜேஷ். முதல் பாதியின் மென்மையான ரொமான்ஸ் காட்சிகளிலிருந்து, இரண்டாம் பாதியின் அதிரடித் திகில் அத்தியாயத்திற்குப் படத்தை வேகமாகக் கடத்திச் செல்வதில் இவரது கட்ஸ் கச்சிதம். கிளைமாக்ஸில் வரும் பரபரப்பான திருப்பங்களை நேர்த்தியாகத் தொகுத்து கதையின் சுவாரஸ்யத்தை எடிட்டிங் மூலம் உயர்த்தியுள்ளார்.
-
கிராபிக்ஸ்: தமிழ் திரைப்படங்களில் வழக்கமாக விமர்சனத்திற்கு உள்ளாகும் கிராபிக்ஸ் காட்சிகள், இதில் மிக நேர்த்தியாகவும் மிரட்டலாகவும் கையாளப்பட்டு தப்பித்திருக்கின்றன. ஆயிரம் ஆண்டுக்கால பிளாஷ்பேக் காட்சிகள் கதையின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன.
விலங்கும், மனிதனும் கலந்த விசித்திர பிராணியை அச்சு அசலாக கிராபிக்ஸில் உருவாக்கி மிரட்டி இருக்கிறார்கள்.
இயக்கம்:
ஹாலிவுட் பாணி வேம்பையர் கதையைத் தமிழ் சூழலுக்கு ஏற்ப சுவாரஸ்யமாக மாற்றியதில் இயக்குநர் மாரியப்பன் சின்னா தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார்.
-
குறிப்பாக, கதாநாயகி வீசிய மாயவலைக்குள் நாயகன் அறியாமல் போய் விழும் காட்சிகள்,
-
இடைவேளையில் கதாநாயகியின் சுயரூபம் தெரியவரும் அதிர்ச்சித் திருப்பம்,
-
அமானுஷ்ய வீட்டை விட்டு வெளியேற முடியாமல் நாயகன் தவிக்கும் பரபரப்பான தருணங்கள்,
-
கிளைமாக்ஸில் வரும் அதிரடி மோதல் மற்றும் எதிர்பாராத ட்விஸ்ட்
எனத் திரைக்கதையை சோர்வில்லாமல் நகர்த்திச் சென்றதில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தத்தில் படம் எப்படி?
அழகான கவர்ச்சி, ஆபத்தான திகில், மிரட்டலான பின்னணி இசை மற்றும் நேர்த்தியான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகியுள்ள ‘இம்மார்ட்டல்’ ஒரு புதுமையான பேண்டசி விருந்து!
வழக்கமான பேய்ப் படங்களைப் பார்த்து அலுத்துப் போனவர்களுக்கு, இந்த ‘வேம்பையர்’ காதலையும் திகிலையும் கலந்து தியேட்டரில் ஒரு ஜாலியான, அதேசமயம் விறுவிறுப்பான அனுபவத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை!
ரேட்டிங்: 4.1/5

