“ஏன் என்னை ஏதோ செய்தாய்” படக்குழுவினர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்

“ஏன் என்னை ஏதோ செய்தாய்” படக்குழுவினர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்

Anthony’s Atelier சார்பில் டி. ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படம் செப்டம்பர் திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பகிர்ந்த உரைகளின் முக்கியப் பகுதிகள்:

மதுமிதா தாஸ் (கதாநாயகி): இது எனது அறிமுகப் படம். சவாலான கதாபாத்திரத்தை நம்பி வழங்கி, 18 நாட்கள் வொர்க்ஷாப் மூலம் பயிற்சி அளித்த இயக்குநர் ஆண்டனி சாருக்கு நன்றி. டீசரில் பெங்காலி பின்னணி அழகாக வந்துள்ளது. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, இசையமைப்பாளர்கள் மற்றும் உடன் நடித்த நடிகர்களின் ஆதரவு பலமாக இருந்தது.

டி. ஆண்டனி (இயக்குநர், தயாரிப்பாளர், கதாநாயகன்): தயாரிப்பு பணிகளில் உதவி செய்த சி.வி. குமார், ஹரிஷ், சந்தோஷ் மற்றும் விஜய் அண்ணாவிற்கு நன்றி. மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ஆலம் ஷா, நவ்யா உள்ளிட்டோர் சிறப்பாக நடித்தனர். சுரேந்தரன் கலை இயக்கத்தையும், ஜெய்கார் ஹரிநாத் லைவ் சவுண்ட் பணியையும் சிறப்பாக செய்தனர். கார்த்திக் நேத்தா கொடுத்த ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ என்ற கவித்துவமான தலைப்பே படத்திற்கு மேஜிக் தந்தது. விநியோகப் பிரச்சினையைத் தீர்த்து, படம் வெளியாக உதவிய தனஞ்செயன் சாருக்கு மனமார்ந்த நன்றி.

தனஞ்செயன் (தயாரிப்பாளர்): குறுகிய காலத்தில் கவித்துவமான காதல் கதையாக இப்படத்தை உருவாக்கியுள்ளனர். ஆண்டனி, மதுமிதா தாஸ் நடிப்பு சிறப்பாக உள்ளது. குறிப்பாக, சிங்க் சவுண்டில் டப்பிங் இல்லாமல் படம் உருவாக்கியிருப்பது பாராட்டத்தக்கது. சிறிய படங்களுக்கு ஊடகங்களின் ஆதரவு அவசியம். தற்போது தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் மற்றும் ஓடிடி சிக்கல்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. நல்ல முடிவு கிடைத்து, படம் வெற்றிபெற வாழ்த்துகள்.

ஜீவா ரவி (நடிகர்): இப்படத்தில் வழக்கமான அப்பா கதாபாத்திரத்தைவிட வித்தியாசமான, உணர்வுப்பூர்வமான அப்பாவாக நடித்திருக்கிறேன். யங் கிரியேட்டர் ஆண்டனியின் முயற்சி பாராட்டுக்குரியது. ஒளிப்பதிவாளர் பியட்ரோ வில்லானி படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். படம் சரியான ரசிகர்களிடம் சென்று சேரும் என்ற நம்பிக்கை உள்ளது.

கே.கே. சுரேந்தரன் (கலை இயக்குநர்): இது எனக்கு நான்காவது படம். ஒரு அழகான காதல் டிராமாவை மிகவும் கவித்துவமான முறையில் உருவாக்கிக் கொடுத்த இயக்குநர் ஆண்டனிக்கு நன்றி.

ஆலம் ஷா (நடிகர்): என் ஆசிரியர் தனஞ்செயன் சாருக்கும், வாய்ப்பளித்த ஆண்டனிக்கும் நன்றி. படப்பிடிப்பு தளத்தில் பதற்றமின்றி ரிகர்சல் செய்து நடித்ததால் கெமிஸ்ட்ரி இயல்பாக வந்தது. நடிகர்களுக்குத் தேவையான சுதந்திரத்தைக் கொடுத்து, படப்பிடிப்பு நடந்த அன்றே சம்பளம் வழங்கிய தயாரிப்பாளரின் செயலைப் பாராட்ட வேண்டும்.

நவ்யா சுஜி (நடிகை): நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘ரேகா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். வலுவான முன்தயாரிப்புடன் 18 நாட்களில் படப்பிடிப்பை முடித்துள்ளனர். ஒரு பெண் எஸ்கார்ட்டுக்கும், மதுவுக்கு அடிமையான ஒருவருக்கும் இடையிலான வித்தியாசமான காதல் கதை இது.

ஜெய்கார் ஹரிநாத் (இசையமைப்பாளர் & சவுண்ட் இஞ்சினியர்): இப்படத்தில் முதன்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறேன். படம் முழுவதும் லைவ் சவுண்டில் உருவாகியிருப்பது பார்வையாளர்களுக்கு நெருக்கமான அனுபவத்தைத் தரும். கார்த்திக் நேத்தாவின் வரிகள் வெஸ்டர்ன் பாணி பாடலை வேறு உயரத்திற்குக் கொண்டு சென்றன.

அசோக் ஸ்ரீதரன் (இசையமைப்பாளர்): ‘உருகாதே உயிரே’ பாடலுக்காக கார்த்திக் நேத்தாவை பரிந்துரைத்தேன். சென்னை ஸ்ட்ரிங்ஸ் ஆர்கெஸ்ட்ரா உடன் ஆண் மற்றும் பெண் பார்வையில் இரண்டு வெர்ஷன்களாக இப்பாடல் உருவாகியுள்ளது. மெலடி விரும்பிகளுக்கு நல்ல இசை விருந்தாக அமையும்.

கார்த்திக் நேத்தா (பாடலாசிரியர்): வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே மயக்கத்திற்குள் தள்ளும் பல்வேறு போதைகளைப் பற்றியும், ஒரு தனிமனிதன் போதையை நோக்கி செல்வதற்கான உளவியல் காரணங்களைப் பற்றியும் படம் பேசுகிறது. கதாநாயகனின் வாழ்க்கையில் கதாநாயகி தெளிவைக் கொடுப்பது கவித்துவமானது.

தாய் அன்பை இழந்து மதுவுக்கு அடிமையாகும் இளைஞனின் வாழ்க்கையில் காதல் தரும் மாற்றங்களை மையமாகக் கொண்ட இத்திரைப்படம், நவீன திரைக்கதையுடன் உருவாகியுள்ளது.

Related Posts