ரத்தமும் தியாகமும்: மிரட்டும் ஃபௌஜி!
திரை உலகையே தன் ஆளுமையால் கட்டிப்போட்டு வைத்திருக்கும் ரெபெல் ஸ்டார் பிரபாஸ், மீண்டும் ஒரு பிரம்மாண்டமான வரலாற்றுப் பின்னணி கொண்ட பான்-இந்தியா திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார். நுட்பமான உணர்ச்சிகளையும் காட்சி நேர்த்தியையும் திரைக்கதையில் செதுக்குவதில் வல்லவரான கிரியேட்டிவ் இயக்குநர் ஹனு ராகவபூடி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஃபௌஜி’. பிரபல தயாரிப்பு நிறுவனங்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படம், வரும் டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சுதந்திர தின நன்னாளை முன்னிட்டு, வெறும் கொண்டாட்டமாக இல்லாமல் தியாகத்தின் ஆழத்தைப் பேசும் ஒரு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போரினால் நிலைகுலைந்த, புகை மண்டலமும் தீப்பிழம்புகளும் சூழ்ந்த ஒரு ரணகளக் களத்தை இந்த போஸ்டர் படம் பிடித்துக் காட்டுகிறது. பின்னணியில் கம்பீரமாக நிற்கும் சார்மினார், வரலாற்றுச் சம்பவங்களின் தீவிரத்தை உணர்த்துகிறது. பிரபாஸின் முகம் நேரடியாகக் காட்டப்படாவிட்டாலும், ஆடைகளில் ரத்தமும் அழுக்கும் படிந்து, காலில் செருப்பு கூட இன்றி, இரு கைகளிலும் துப்பாக்கிகளை ஏந்தி அவர் நடந்து வரும் ஆக்ரோஷமான காட்சி, தியேட்டர்களில் விசில் பறக்க வைப்பது உறுதி.
“சுதந்திரம் கொண்டாட்டமாக மாறுவதற்கு முன்பு, அது ஒரு போராக இருந்தது!” என்ற சக்திவாய்ந்த வரிகளுடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர், நமது இன்றைய அமைதியான வாழ்வுக்குப் பின்னால் இருக்கும் போராட்டங்களை நெகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறது. பிரபாஸுக்கு ஜோடியாக அறிமுகமாகும் இமான்வியுடன், மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கேர், ஜெயப்பிரதா, பானு சந்தர் போன்ற இந்தியத் திரையுலகின் ஜாம்பவான்கள் பலரும் இதில் இணைந்துள்ளனர். விஷால் சந்திரசேகரின் இசையும் சுதீப் சட்டர்ஜியின் ஒளிப்பதிவும் இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமையவுள்ளன.

