ராஜமவுலியின் ‘வாரணாசி’: காடுகளையும் கடந்து மாஸ் காட்டும் மகேஷ் பாபு!
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, திரையுலகமே வியந்து எதிர்பார்க்கும் ‘வாரணாசி’ திரைப்படத்தின் மாஸான அப்டேட்டை வெளியிட்டு அமர்க்களப்படுத்தியிருக்கிறது படக்குழு. இதில் ‘ருத்ரா’ எனும் கம்பீரமான கதாபாத்திரத்தில் தோன்றும் மகேஷ் பாபுவின் இரண்டு பிரத்யேக புகைப்படங்கள் முதன்முறையாக வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகின்றன.
முதல் படத்தில் அடர்ந்த காட்டுக்குள் மூங்கில் தெப்பத்தில் மிதந்தபடி, அமைதியும் கெத்தும் கலந்த பார்வையோடு காட்சியளிக்கிறார் ருத்ரா. அடுத்த புகைப்படத்திலோ கென்யாவின் மாசாய் மாரா சமவெளியில், ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் காட்டு விலங்குகளுக்கு நடுவே கம்பீரமான ராஜ தோரணையில் பின்னோக்கிப் பார்த்து மிரட்டுகிறார். இந்தியாவின் புனித நீர்நிலைகளில் தொடங்கி உலகின் மிக அடர்ந்த ஆப்பிரிக்கக் காடுகள் வரை பயணிக்கும் ஒரு மனிதனின் நூறாண்டு காலக் காவியப் பயணமே இந்த வாரணாசி.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி பரவசத்துடன் கூறுகையில், “ருத்ரா ஒரு மிகப்பெரிய நோக்கத்திற்காகவே பிறந்தவன். நகைச்சுவை, மென்மை, அசுரத்தனமான கடுமை என அனைத்து பரிமாணங்களையும் மகேஷ் பாபு அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ மற்றும் மாசாய் மாரா பகுதிகளில் படப்பிடிப்பு நடத்திய போது அங்கிருந்த இயற்கை அழகை ஐமேக்ஸ் திரையால் கூட முழுமையாகப் பிடிக்க முடியாது என்பதை உணர்ந்தேன்” என வியந்து கூறியுள்ளார்.
எம்.எம்.கீரவாணியின் மெய்சிலிர்க்க வைக்கும் இசையில், ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் இணைந்து தயாரிக்கும் இக்காவியத் திரைப்படம் உலகத்தரம் வாய்ந்த ஐமேக்ஸ் திரைகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
