படித்த பள்ளிக்கு 3 மாடி கட்டிடம் கட்டிக் கொடுத்த தனுஷ்!யின் வளர்ச்சிக்காக நடிகர் தனுஷ் செய்த பெருஞ்செயல் ;
சென்னை சாலிகிராமத்தில் இயங்கிவரும் தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில், தமது பிஞ்சுப் பருவம் தொட்டு பத்தாம் வகுப்பு வரை பயின்ற நினைவுகளை நெஞ்சில் ஏந்தியபடி, அப்பள்ளியின் பழைய கூரை அமைப்பை அகற்றி, தமது சொந்தச் செலவில் கம்பீரமான மூன்று தளக் கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்து நெகிழ வைத்துள்ளார் நடிகர் தனுஷ். இப்புதிய கட்டிடத்திற்கு அவருடைய பெயரே சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்ற நடிகர் தனுஷ், தமக்குக் கல்வியையும் நற்பண்புகளையும் கற்றுத் தந்த ஒவ்வொரு ஆசிரியரின் பாதங்களையும் வணங்கி ஆசி பெற்ற தருணம் அங்கிருந்தோரின் கண்களைக் குளமாக்கியது. இந்நிகழ்வில் தனுஷின் சகோதரிகள் கார்த்திகா தேவி, விமலகீதா மற்றும் அவருடன் பயின்ற பள்ளித் தோழர்களும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தனுஷுடன் பள்ளிப் பருவம் தொட்டு பயின்று, பின்னர் அவருடன் இணைந்து வெற்றிப் படங்களை உருவாக்கிய ஒளிப்பதிவாளர் குமரன் தமது மனைவியுடன் விழாவில் பங்கெடுத்தார். தமது பள்ளித் தோழனின் இந்த நற்செயல் குறித்துப் பேசிய அவர், எளிய நிலையில் இருந்த பள்ளியின் சூழலை அறிந்து தனுஷ் தாமே முன்வந்து இத்தகைய பெரும் உதவியைச் செய்துள்ளதாகவும், வருங்காலத்தில் மேலும் பல வசதிகளைப் பள்ளிக்குச் செய்துதர வாக்குறுதி அளித்துள்ளதாகவும் பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டார்.
கல்வி கற்ற கூடத்திற்குச் செலுத்திய இந்த நன்றிக்கடன், தனுஷின் திரைத்துறைப் பயணத்தை தாண்டி அவருடைய மனிதநேயத்தை உலகிற்கு மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.
